Showing posts with label English Grammar. Show all posts
Showing posts with label English Grammar. Show all posts

ஆங்கில இணைப்புச் சொற்கள் (Conjunctions)

AANGILAM : Types of Conjunctions in English with Tamil Explanation
ஆங்கிலம்: இணைப்புச் சொற்களின் வகைகள் 
ஆங்கில இணைப்புச்சொற்கள் என்றால் என்ன
?

ஆங்கில இணைப்புச் சொற்கள் என்றால், ஆங்கில பேச்சின் கூறுகளில் உள்ளடங்கும் எட்டுக் கூறுகளில் ஒன்றாகும். இவை சொற்கள் (words), சொற்றொடர்கள் (Phrases), மற்றும் வாக்கியக் கூறுகள் (clauses) போன்றவற்றை இணைக்கப் பயன்படும் சிறிய சொற்கள் மற்றும் சொற்றொடர்கள் ஆகும்வாக்கிய கூறுகளை இணைத்து நீண்ட ஒரு வாக்கியமாக அல்லது வாக்கிய தொடராக பொருளை உணர்த்த இந்த இணைப்புச்சொற்கள் ஆங்கில இலக்கணப் பயன்பாட்டில் மிக முக்கியமானவைகளாகும்.

இணைப்புச்சொற்கள் பயன்படு முறைகள்


இணைப்புச்சொற்கள் எவ்வாறு எத்தனை முறைகளில் பயன்படுகின்றன?
இவை இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட வாக்கிய கூறுகளை இணைக்க; தனித்த ஒற்றைச் சொல், கூட்டுச் சொற்கள், இடமாறி பயன்படும் சொற்கள் என மூன்று முறைகளில் பயன்படுகின்றன.

எடுத்துக்காட்டாக:

தனித்த ஒற்றைச் சொல்:
  • and
  • for
  • because
கூட்டுச் சொற்கள்
  • as long as
  • in order that
  • provided that
இடம் மாறி பயன்படும் சொற்கள்
  • so ... that
  • either ... or
  • not only ... but also

இணைப்புச் சொற்களின் வகைகள்


ஆங்கிலத்தில் எத்தனை வகையான இணைப்புச் சொற்கள் உள்ளன?

ஆங்கிலத்தில் நான்கு வகையான இணைப்புச்சொற்கள் உள்ளன. அவைகளாவன:
  • Coordinating Conjunctions
  • Subordinating Conjunctions
  • Correlative Conjunctions
  • Conjunctive Adverbs

குறிப்பு:

ஆங்கில இணைப்புச் சொற்களின் வகைகளை மூன்றாக மட்டுமே  வகைப்படுத்துவோரும் உளர். இருப்பினும் "Conjunctive Adverbs" களும் வாக்கிய கூறுகளை இணைக்கப் பயன்படுவதால் அவற்றையும் இணைப்புச் சொற்களாகவே பல ஆங்கில இலக்கணவாதிகள் வகைப்படுத்துகின்றனர். எனவே நாமும் இங்கே நான்காகவே வகைப்படுத்தியுள்ளோம் என்பதைக் கருத்தில் கொள்க.

இனி இவ்விணைப்புச் சொற்களின் பயன்பாட்டை ஒவ்வொன்றாக கீழே பார்ப்போம்.

Coordinating Conjunctions (ஒருங்கிணைப்பு இணைப்புச்சொற்கள்)


ஒருங்கிணைப்பு இணைப்புச் சொற்கள், வாக்கியங்களில் ஒரே சமனிடையான "சொற்கள்”, "சொற்றொடர்கள்”, "வாக்கியக்கூறுகள் " போன்றவற்றை ஒருங்கே இணைக்கப் பயன்படும் சிறிய சொற்கள் ஆகும்.

இதனை "ஒருங்கிணைப்புச் சொற்கள்" என சுருக்கமாகவும் கூறலாம்.

அவையாவன:
  • F = For
  • A = And
  • N = Nor
  • B = But
  • O = Or
  • Y = Yet
  • S = So
எடுத்துக்காட்டு வாக்கியங்கள்:

I like bread and butter.
நான் உரொட்டியும் வெண்ணையும் விரும்புகிறேன்.

I like tea, but I don't like coffee.
நான் தேனீர் விரும்புகிறேன், ஆனால் எனக்கு காப்பி விருப்பமில்லை.

How to speak English and how to write in English are two different things.
எப்படி ஆங்கிலம் பேசுவது (என்பதும்) எப்படி ஆங்கிலத்தில் எழுதுவது (என்பதும்) இரண்டு வெவ்வேறு விடயங்கள்.

குறிப்பு: ஆங்கிலத்தில் ஒருங்கிணைப்புச் சொற்கள் 7 மட்டுமே உள்ளன. இவற்றை எளிதாக மனதில் பதித்துக்கொள்வதற்கு இச்சொற்களின் முதலெழுத்துக்களை இணைத்து FANBOYS என ஒரு சுருக்கப்பெயராக (Acronyms) ஆங்கிலேயர் பயன்படுத்துவர். நாமும் இவற்றை அவ்வாறே மனதில் இருத்திக்கொள்ளவோம்.

மேலும் இப்பாடத்தை விரிவாக எதிர்வரும் நாட்களில் பார்ப்போம்.

Subordinating Conjunctions (சார்ந்த இணைப்புச்சொற்கள்)


"சார்ந்த இணைப்புச்சொற்கள்" எப்போதும் முதன்மை வாக்கிய கூற்றையும் (Independent Clause) சார்ந்த வாக்கிய கூற்றையும் (Dependent Clause) இணைக்க பயன்படுபவை ஆகும். ஆங்கிலத்தில் இவை நூற்றுக் கணக்க்கில் உள்ளன.
  • after
  • although
  • as long as
  • as soon as
  • even though
  • before
  • if
  • how
  • since
  • than
  • that
  • when
  • where
  • whether
  • while
  • whenever
எடுத்துக்காட்டு வாக்கியங்கள்:

If I do a job, I will get experience.
நான் ஒரு வேலை செய்தால் எனக்கு கிடைக்கும் அனுபவம்.

I will get experience if I do a job.
எனக்கு கிடைக்கும் அனுபவம் நான் செய்தால் ஒரு வேலை.

Although he is small, he is very strong.
அவன் சிறியவனாக இருந்தப்போதிலும், அவன் மிகவும் வலுவானவன்.

I will be able to buy a car when I get older.
எனக்கு வாங்க முடியுமாக இருக்கும் ஒரு மகிழுந்து நான் வயதானவனாகும் பொழுது.

குறிப்பு: சார்ந்த இணைப்புச்சொற்கள் எப்போதும் சார்ந்த வாக்கிய கூற்றின் (Subordinate Clause) முன்னாலேயே பயன்படும்.

மேலும் விரிவாக இப்பாடத்தை எதிர்வரும் நாட்களில் பார்ப்போம்.

Correlative Conjunctions (ஒப்புமை இணைப்புச்சொற்கள்)


ஒப்புமை இணைப்புச்சொற்கள் இரண்டு சமனிடையான வாக்கியங்களை ஒப்புமையுடன் இணைக்கும் சொற்களாகும். இவ்விணைப்புச் சொற்கள் சோடிகளாகவே பயன்படும்.
  • both ... and
  • so ... as
  • not ... but
  • not only ... but also
  • either ... or
  • neither ... nor
  • whether ... or
எடுத்துக்காட்டு வாக்கியங்கள்:

Neither cats nor dogs are my favorite animals.
பூனைகள் நாய்கள் இரண்டுமே எனது விருப்பு மிருகங்கள் அல்ல.

Today, it is not only warm but also humid.
இன்று சூடாக மட்டுமல்ல ஈரப்பதமாகவும் கூட உள்ளது.

I want both a computer and a iPad.
எனக்கு கணனி மற்றும்  ஐபேட் இரண்டும் வேண்டும்.

Sarmilan is either playing cricket with his friends or studying.
சர்மிலன் இரண்டிலொன்று அவனது நண்பர்களுடன் துடுப்பாட்டம் விளையாடிக்கொண்டிருப்பான் அல்லது படித்துக்கொண்டிருப்பான்.

மேலும் இப்பாடத்தை விரிவாக எதிர்வரும் நாட்களில் பார்ப்போம்.

Conjunctive Adverbs (இணைப்பு வினையெச்சங்கள்)


இணைப்பு வினையெச்சங்கள் இரண்டு முதன்மை வாக்கிய கூறுகளை (Main Clauses) இணைப்பவையாகவே இருக்கும்; அதாவது "ஒருங்கிணைப்புச் சொற்கள்" போன்றேபயன்படும். ஆனாலும் சற்று வேறுபட்டது.

அதாவது தமிழில்  "அதனால்", எப்படியானாலும்", "இதுதொடர்பாக" போன்ற சொற்களைப் பயன்படுத்தி இரண்டு வாக்கியங்களை இணைக்கும் முறைக்கு ஒத்ததாகவே இவை இருக்கும்.
  • accordingly
  • consequently
  • finally
  • furthermore
  • however
  • similarly
  • therefore
எடுத்துக்காட்டு வாக்கியங்கள்.

I wanted to buy a shirt; however, It was too expensive.
எனக்கு ஒரு சட்டை வாங்க வேண்டும்; எனினும், அதன் விலை மிகவும் கூடுதலாக இருந்தது.

David went to market; however, he didn't buy anything.
இடேவிட் சந்தைக்கு சென்றார்; இருப்பினும், அவர் எதனையும் வாங்கவில்லை.

Sarmilan was tired. Therefore, he immediately took a nap when he got home.
சர்மிலன் களைப்பானான். அதனால், அவன் வீட்டிற்கு சென்ற உடன் ஒரு சிறுநித்திரை (கொண்டான்) எடுத்தான்.

குறிப்பு: இனைப்பு வினையெச்சங்கள் என்பவை ஒருவகையில் வினையெச்சங்கள் தான். இருப்பினும் அவை வாக்கிய கூறுகளை இணைக்கப் பயன்படுவதால் "இணைப்பு வினையெச்சங்கள்" என்றழைக்கப்படுகின்றன.

மேலும் விரிவாக இப்பாடத்தை விரைவில் பார்ப்போம்.

கவனிக்கவும் 

நாம் ஆங்கில பாடப் பயிற்சி 01ல் வாக்கியங்கள் எவ்வாறு அமைகின்றன, அவற்றை எவ்வாறு அமைத்து பயிற்சி செய்யவேண்டும் என்பதற்கான எளிதான வழிமுறைகளை வழங்கியிருந்தோம். அப்பாடத்தில் நாம் வழங்கிய வீட்டு பாடப் பயிற்சிகளை முறையாக பயின்ற எவருக்கும் ஆங்கிலத்தில் வாக்கியங்களை அமைப்பதில் எந்த சிக்கலும் இருக்காது என்று நம்புகின்றோம். புதிதாக தளத்திற்கு வந்தோர் ஒரு முறை பார்த்துக்கொள்ளவும். இன்றைய பாடம் இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட வாக்கிய கூறுகளை இணைத்து பேசுவதற்கும் எழுதுவதற்கும் பயன்படும் மிக முக்கியமான ஒன்றாகும். ஆங்கில இலக்கணம் கற்போர் இவற்றை முறையாக விளங்கிக் கற்றுக்கொண்டீர்களானால், சரியாகவும் இலக்கணப் பிழையின்றியும் வாக்கிய கூறுகளை எளிதாக இணைத்து பயன்படுத்தக் கூடியதாக இருக்கும். 

தொடர்புடையப் பாடங்கள்:


இப்பாடம் தொடர்பான ஏதேனும் ஐயங்கள் கேள்விகள் இருந்தால் இப்பாடத்தின் பின்னூட்டத்தின் ஊடாக கேட்கவும். இப்பாடத்துடன் தொடர்பில்லாத கேள்விகளானால் ஆங்கிலம் கேள்வி பதில் பகுதியில் கேட்கவும்.

மீண்டும் அடுத்தப் பாடத்தில் சந்திப்போம்.

நன்றி!

அன்புடன்
ச. தங்கவடிவேல், பிரான்சு (HK Arun)

Facebook | Twitter | Pinterest | Google Plus Download As PDF

ஆங்கில உடமைக்குறி (Apostrophe)

“உடமைக்குறி” என்பது நிறுத்தக்குறிகளில் ஒன்றாகும். இதனை "ஆறாம் வேற்றுமைக் குறி" என்றும் தமிழில் அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் "Apostrophe" என்றழைப்பர். இதன் பயன்பாட்டை இன்று பார்ப்போம்.

உடமைக்குறியின் பயன்பாடுகள்

ஆங்கிலத்தில் இதன் பயன்பாட்டை நான்கு விதமாகப் பார்க்கலாம்.

01. இதன் பிரதானப் பயன்பாடு ஒன்றின் அல்லது ஒருவரின் உடமையானது என்பதைக் சுட்டிக்காட்டுவதற்கு பயன்படும்.

எடுத்துக்காட்டாக:

This is Sarmilan's bicycle.
இது சர்மிலனின் ஈருருளி.

Emperor Raja Raja Cholan’s crown.
பேரரசர் இராசராச சோழனின் முடி.

My sister's pen.
என் சகோதரியின் பேனை.

The dog's tail.
நாயின் வால்.

The student's book.
மாணவனின் பொத்தகம்.

கவனிக்கவும்:

மேலுள்ள வாக்கியத்தில் "student's" எனும் சொல்லில் "s" எழுத்துக்கு முன்னால் உடமைக்குறி பயன்பட்டிருப்பதைப் பாருங்கள். அவ்வாறு உடமைக்குறி பயன்படுத்தப்பட்டிருந்தால் "Student's" எனும் போது "மாணவனின்" என்று (ஒரு மாணவனின் உடமை) ஒருமையாக பயன்பட்டிருப்பதை அவதானிக்கவும்.

ஆனால் அதே வாக்கியம் கீழுள்ளவாறு "students'" என "s" எழுத்துக்குப் பின்னால் உடமைக்குறி பயன்படுத்தப்பட்டிருப்பின் அதன் பொருள் "மாணவர்களின்" (பல மாணவர்களின் உடமை) என பன்மையாக மாறி விடுவதை கவனிக்கவும்.

எடுத்துக்காட்டாக:

The students' book.
மாணவர்களின் பொத்தகம்.

The dogs' tails.
நாய்களின் வால்கள்.

The girls' dresses.
பெண்களின் உடைகள்.

பன்மையாக எழுதும் போது உடமைக்குறி சொல்லின் பின்னால் இடப்பட வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

02. ஆங்கில சுருங்கக்கூறல் முறைமையில் உடமைக்குறியீடு பயன்படும்.

எடுத்துக்காட்டாக:

I am = I’m
He is = He’s
She is = She’s
It is = Its
We are = We’re
They are = They’re
You are = You’re

I am not = I’m not
He is not = He isn’t
She is not = She isn’t
It is not = It isn’t
You are not = You aren’t
They are not = They aren’t
We are not = We aren’t

Can not = Can’t
Could not = Couldn’t
We have = We’ve
They have = They’ve
I would = I’d
Who is = Who’s

கவனிக்கவும்:

இங்கே கவனிக்க வேண்டியது என்னவென்றால் “He’s – அவனுடையது, She’s அவளுடையது” என்பதுப்போல், It’s என்று எழுதினால் “இதுனுடையது” என்று தவறாக பொருள் கொள்ள வேண்டாம். கீழுள்ள விளக்கங்களைப் பார்க்கவும்.

It’s என்றால் It is இன் சுருங்கச் சொல்லாகும்
It’s என்றால் It was இன் சுருங்கச் சொல்லாகவும் பயன்படும்
It’s been என்றால் It has been என்பதன் சுருங்கச் சொல்லாகும்.

“இதனுடையது” என்று சுருங்கச் சொல்லாக எழுதுவதானால் "Its" என்றே (உடமைக்குறி பயன்படுத்தாமல்) எழுதவேண்டும் என்பதை நினைவில் வைக்கவும்.

அதேவேளை I would மற்றும் I had எனும் இவ்விரண்டு சொற்களினதும் சுருங்கப் பயன்பாடாக “I’d” மட்டுமே பயன்படும்.

03. ஆண்டுகளை சுருக்கமாக எழுதுவதற்கு நான்கு இலக்கங்களுக்கு பதிலாக இரண்டு இலக்கங்களில் எழுதும் போதும் உடமைக்குறி பயன்படுத்தும் வழக்கம் உள்ளது.

1942 ‘42
The summer of ’87 (1987)

"ஆண்டளவில்/ஆண்டு காலப்பகுதியில்" என்று குறிக்க இலக்கங்களின் பின் உடமைக்குறி பயன்படும்.

எடுத்துக்காட்டாக:

During the 1997’s.
1997 ஆம் ஆண்டளவில்/ஆண்டுக்காலப்பகுதியில்.

Do you like movies from the 1980’s?
நீ விரும்புகிறாயா 1980 ஆம் ஆண்டளவிலிருந்த திரைப்படங்களை?

04. ஆங்கிலத்தில் சில சொற்களை சுருங்கச் சொல்லாக எழுதும் போது, குறிப்பிட்டச் சொல்லின் முற்பகுதியை தவிர்த்து விட்டு, சொல்லின் பிற்பகுதியை மட்டும் எழுதும் போது, சொல்லின் முன்னால் உடமைக்குறி பயன்படும்.

எடுத்துக்காட்டாக:

Influenza இதனை ‘flu என சுருங்கச் சொல்லாக எழுதுவர்.
Telephone இதனை ‘phone என சுருங்கச்சொல்லாக எழுதும் வழமை உண்டு. (phone என்றும் எழுதலாம்.)

வாக்கியங்களில் உடமைக்குறி பயன்படுத்தும் போது சற்று கவனத்துடன் பயன்படுத்த வேண்டும். உடமைக்குறியை இடமாறி பயன்படுத்தினால், குறிப்பிட்ட வாக்கியத்தில் பொருளும் மாறிவிடும் என்பதில் கவனம் கொள்ள வேண்டும். ஒரே வாக்கியத்தில் உடமைக்குறியை மாறி பயன்படுத்தப்பட்டால், அதன் பொருள் எவ்வாறு மாறும் என்பதை கீழுள்ள வாக்கியங்கள் உடாக உணரலாம்.

உடமைக்குறியின் விளையாட்டு

My sister's friend's books.
எனது சகோதரியின் நண்பனுடைய பொத்தகங்கள்.

My sister's friends' books.
எனது சகோதரியின் நண்பர்களுடைய பொத்தகங்கள்.

My sisters' friend's books.
எனது சகோதரிகளின் நண்பனுடைய பொத்தகங்கள்.

My sisters' friends' books.
எனது சகோதரிகளின் நண்பர்களுடைய பொத்தகங்கள்.

ஒரு உடமைக்குறியை இடம் மாற்றி பயன்படுத்தினால் ஒரு வாக்கியத்தின் பொருளே மாறிவிடுகின்றது என்பதை மேலுள்ள எடுத்துக்காட்டுகள் காட்டியிருக்கும். இவற்றை மனதில் கொண்டு உடமைக்குறியீட்டின் பயன்பாட்டை சரியாக விளங்கி பயன்படுத்த வேண்டும்.

தொடர்புடைய இடுகைகள்:

நிறுத்தக்குறிகள் (Punctuation Marks)
முற்றுப்புள்ளி (Full Stop & Period)
முக்காற்புள்ளி (colon)
அரைப்புள்ளி (semi-colon)
காற்புள்ளி (comma)
உடமைக்குறி (Apostrophe) (இன்றையப் பாடம்)

சரி! இன்றையப் பாடத்திலான உடமைக்குறியின் பயன்பாட்டை எல்லோரும் சரியாக பயன்படுத்தி பயன்பெருவோம். ஏனைய நிறுத்தற்குறியீடுகளின் பயன்பாடு தொடர்பான பதிவுகள் தொடர்ந்து வரும்.

நன்றி

அன்புடன்
அருண் HK Arun Download As PDF

ஆங்கில அரைப்புள்ளி (semi-colon)

அரைப்புள்ளி என்பது நிறுத்தக்குறியீடுகளில் ஒன்றாகும். இதனை ஆங்கிலத்தில் "colon" என்பர். இதனை ஆங்கிலத்தில் நான்கு விதமாக பயன்படுத்தப் படுகின்றது. அந்த நான்கு விதங்களும் எவ்வாறு பயன்படுகின்றன என்பதை இப்பாடத்தில் பார்ப்போம்.

அரைப்புள்ளியின் பயன்பாடுகள்

01. ஆங்கிலத்தில் இரண்டு வாக்கியங்களின் உட்பொருள் ஒன்றோடொன்று நெருங்கியத் தொடர்புடையதாக இருந்தால், முதல் வாக்கியத்தின் முடிவில் முற்றுப்புள்ளிக்கு பதிலாக அரைப்புள்ளி இடுவதே சரியானதாகும்.

எடுத்துக்காட்டாக:

Sarmilan is a good English teacher; he teaches very easily.

Kavitha wants to go out; Sarmilan wants to stay home.

Some people write with a word processor; others write with a pen or pencil.

02. ஆங்கிலத்தில் இன்னொரு சாதாரணப் பயன்பாடாக "அதனால், எப்படியோ, தவிர, மேலதிகமாக" (therefore, however, otherwise, therefore, in addition, on the other hand) போன்ற சொற்கள், வாக்கியங்களில் தொடர்புடைய இரண்டு உட்பிரிவுகளின் இடையே பயன்படும் போதும் அரைப்புள்ளி பயன்படும்.

எடுத்துக்காட்டாக:

Sarmilan is a good English teacher; therefore, he teaches very easily.

Kavitha drives a car all week; in addition, she drives a bus at the weekends.

You should always eat healthily; otherwise, you might get ill.

03. ஒரு வாக்கியத்தின் சில விடயங்களை வேறுப்படுத்தி காட்டுவதற்கு காற்புள்ளி (comma) இட்டு வேறுப்படுத்தி காட்டுவோம். அவ்வாறு காற்புள்ளி இட்டு வேறுப்படுத்தி காட்ட விளையும் போது, அதனை வாசிப்போர் வாசித்து சரியாக விளங்கிக்கொள்வது கடினமாக இருப்பதை தவிர்க்கும் பொருட்டு அரைப்புள்ளி பயன்படுத்தப்படும்.

எடுத்துக்காட்டாக:

I like cows: they give us milk, which tastes good; they give us beef, which also tastes good; and they give us leather, which is used for shoes and coats.

The honorary key note speakers were Dr. Swaminathan, India; Dr. Rand, United Kingdom; Dr. Brandt, Germany and Dr. Roger, Australia.

Some of the most well-known cities in the United States include Chicago, Illinois; New York City, New York; Las Vegas, Nevada; and Los Angeles, California.

04. அத்துடன் கணிதப் பயன்பாட்டிலும், தற்போதைய கணினி உலகின் நிரல்மொழி பயன்பாட்டிலும் அரைப்புள்ளி பயன்படுகின்றது.

கணினி நிரல் மொழி பயன்பாட்டில்:

int main(void)
{
int x, y;
x = 1;
y = 2;
std::cout <<>

அரைப்புள்ளியின் வரலாறு

இத்தாலியைச் சேர்ந்த "Aldus Manutius" எனும் பதிப்பாளரே முதன் முதலில் அரைப்புள்ளியை பயன்படுத்தியவராவர். இந்த அரைப்புள்ளியின் பயன்பாடு ஆங்கில மொழியில் 1560 ஆம் ஆண்டே அறிமுகமானது. 1591 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் பொதுவான பயன்பாட்டிற்கு வந்தது. வில்லியம் சேக்ஸ்பியரின் செய்யுள்களில் அரைப்புள்ளியின் பயன்பாடு காணப்படுகின்றன.

இருப்பினும் "Ben Johnson" என்பவரே அரைப்புள்ளியை எப்படி பயன்படுத்துவது எனும் ஒரு திட்டவட்டமான முறைமையை உருவாக்கியவராவர். பதினெட்டாம் நூற்றாண்டின் ஆரம்பக் காலப்பகுதியில் அதன் பயன்பாடு ஐரோப்பிய நாடுகளுக்கும், அதனைத்தொடர்ந்து உலகின் பிற பகுதிகளுக்கும் பரவியது.

தமிழ் மொழியில் அரைப்புள்ளியின் பயன்பாடு

நிறுத்தக்குறிகளின் பயன்பாடு ஆங்கிலத்திலும் தமிழிலும் ஒரே மாதிரியாக இன்றி வேறுபடும் இடங்களும் உள்ளன.  இருப்பினும் மேலே கொடுக்கப்பட்டுள்ள ஆங்கில வாக்கியங்களின் சிலவற்றை இங்கே தமிழ் வழி படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் அரைப்புள்ளி எவ்வாறு பயன்படுகின்றன என்பதை கவனியுங்கள்.

சர்மிலன் ஒரு சிறந்த ஆங்கில ஆசிரியர்; அவர் எளிதாக கற்பிக்கிறார்.

சர்மிலன் ஒரு சிறந்த ஆங்கில ஆசிரியர்; அதனால், அவர் எளிதாக கற்பிக்கிறார். 

எனக்கு பசுக்களை பிடிக்கும்: அவைகள் பால் தருகின்றன, அது சுவையானது; அவைகள் இறைச்சியைத் தருகின்றன, அதுவும் சுவையானது; அவைகள் தோல் தருகின்றன, அது பாதணி கோட் போன்றவைகளுக்கு பயன்படுகின்றது.

சரி! இன்றைய இப்பாடத்திலான அரைப்புள்ளியின் பயன்பாட்டை எல்லோரும் சரியாக பயன்படுத்தி பயன்பெருவோம்.

தொடர்புடைய இடுகைகள்:

அரைப்புள்ளி (semi-colon) இன்றைய பாடம்

ஏனைய நிறுத்தற்குறியீடுகளின் பயன்பாடு தொடர்பான பதிவுகள் தொடர்ந்து வரும்.

நன்றி

அன்புடன்
அருண் HK Arun
Download As PDF

ஆங்கில முக்காற்புள்ளி (Colon)

"முக்காற்புள்ளி" என்பது நிறுத்தக்குறியீடுகளில் ஒன்றாகும். முக்காற்புள்ளி செங்குத்தாக ஒரே அளவில் இரண்டு புள்ளிகளை (:) கொண்டிருக்கும். இதனை ஆங்கிலத்தில் "colon" என்றழைப்பர். இவற்றின் பயன்பாட்டினை பல்வேறு பிரிவுகளாகப் பார்க்கலாம்.

முக்காற்புள்ளியின் பயன்பாடுகள்

ஒன்றின் விளக்கத்தை கொடுப்பதற்கு, ஒன்றின் தொடர்புடைய பட்டியலை இடுவதற்கு, ஒன்றின் எடுத்துக்காட்டை விவரிப்பதற்கு, ஒரு எண்ணத்தை வெளிப்படுத்துவதற்கு, மேற்கோள் காட்டுவதற்கு என வாக்கியத்தின் உட்பிரிவுடன் முக்காற்புள்ளி பயன்படும்.

01. ஒன்றின் தேவையை என்ன என்று குறிப்பிடுவதற்கு முன்பு, ஒன்று எப்படி என்று குறிப்பதற்கு முன்பு, ஒன்றில் என்னென்ன அடங்கியுள்ளன என்பதை தெரிவிப்பதற்கு முன்பு, அவை தொடர்பான எண்ணத்தை விளக்கத்தை வெளிப்படுத்த முக்காற்புள்ளி பயன்படுத்த வேண்டும்.

எடுத்துக்காட்டாக:

She needed to buy three things: milk, eggs and bread.

The compass had four directions: north, south, east and west.

The plans include the following: writing, implementing and evaluating information.

Remember what the declaration of independence says: "All men are created equal".

The car was beautifully painted: it had a union jack on its roof and stripes down each side.

"A boy can learn a lot from a dog: obedience, loyalty, and the importance of turning around three times before lying down."

02. ஒரு கதையின் அல்லது உரையாடலின் கதாபாத்திரங்களை குறிப்பிட்டு எழுதப் பயன்படும்.

எடுத்துக்காட்டாக:

Sarmilan: Did you miss me?
Kavitha: Yes, of course, I really missed you so much!

Sarmilan: Really?
Kavitha: Certainly.

Sarmilan: I feel the same way about you.
Kavitha: That is such a nice thing to say.

03. நூல்களில் உள்ள அத்தியாயங்களின் உற்பிரிவுகளை விளக்குவதற்கு; குறிப்பாக பைபில் குரான் போன்ற நூல்களின் காணப்படும் அத்தியாயங்களின் உற்பிரிவுகளை இலக்கங்களின் அடிப்படையில் வேறுப்படுத்தி காட்டுவதற்கு முக்காற் புள்ளி பயன்படும். (Specially chapters and verses of the Bible or Qu'ran)

எடுத்துக்காட்டாக:

Genesis 17: 26 (பைபில்)

Sura 65:04 (குரானின்)

04. மணித்தியாளம், நிமிடம், செக்கன் போன்றவற்றை இலக்கங்களின் போது வேறுப்படுத்தி காட்டுவதற்கு முக்காற்புள்ளி பயன்படும்.

எடுத்துக்காட்டாக:

The concert finished at 11:45

This file was last modified today at 12:28:03

05. பல பாகங்களாக வெளியிடப்படும் திரைப்படங்கள், தொடர்கதைகள் போன்றவற்றின் பிரதான தலைப்புடன் உபதலைப்பை வேறுப்படுத்தி காட்டுவதற்கு முக்காற்புள்ளி பயன்படும்.

"ஸ்டார் வோர்ஸ்" போன்ற திரைப்படங்கள் பல பாகங்களாக ஒன்று, இரண்டு, மூன்று என தொடர்ந்து வந்தன. அதேவேளை பாகங்களாக வந்த அத்திரைப்படங்களில் "ஸ்டார் வோர்ஸ்" என்ற பிரதான தலைப்புடன் இன்னுமொரு உபதலைப்பும் இருந்தன. அவ்வாறு பயன்படும் உபதலைப்புகளை பிரதான தலைப்பிலிருந்து வேறுப்படுத்தி காட்டுவதற்கு இந்த முக்காற்புள்ளி பயன்படுத்தப்படுகிறது.

எடுத்துக்காட்டாக:

Star Wars Episode IV: A New Hope

Famous 5: On the Case

06. இப்பயன்பாடுகளுடன் தற்போதைய இணையப் பயன்பாட்டின் ஊடாகவும் முக்காற்புள்ளியின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

எடுத்துக்காட்டாக:

http://aangilam.blogspot.com

அத்துடன் நமது விருப்பு, வெறுப்பு, மகிழ்ச்சி, கவலை போன்றவற்றை வெளிப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டு எல்லோருக்கும் பரிச்சயமான சிரிப்பான்கள் பயன்பாட்டின் போது முக்காற்புள்ளி முக்கிய பங்கு வகிக்கிறது.

:)
:\
:3
D:
:D
:O
:x
:P
:B


சரி! இன்றையப் பாடத்திலான முக்காற்புள்ளியின் பயன்பாட்டை எல்லோரும் சரியாக பயன்படுத்தி பயன்பெருவோம். ஏனைய நிறுத்தற்குறியீடுகள் தொடர்பான பதிவுகள் தொடர்ந்து வரும்.

தொடர்புடைய இடுகைகள்:

நிறுத்தக்குறியீடுகள் விளக்கம்

முற்றுப்புள்ளி (Full Stop or Period)

நன்றி

அன்புடன்
அருண் HK Arun
Download As PDF

ஆங்கில முற்றுப்புள்ளி (Full Stop or Period)

முற்றுப்புள்ளி என்பதை பிரித்தானிய ஆங்கிலத்தில் "Full stop" என்றும், சில சமயங்களில் "Full point" என்றும் அழைக்கின்றனர். அமெரிக்க ஆங்கிலத்தில் "Period" என்று அழைப்பர்.

முற்றுப்புள்ளியின் பயன்பாடுகள்

01. ஒரு வாக்கியத்தின் முடிவைக் குறிக்க முற்றுப்புள்ளி  பயன்படும்.

எடுத்துக்காட்டாக:

I can speak in English.
எனக்கு ஆங்கிலத்தில் பேச முடியும்.

Tamil is a classical language.
தமிழ் ஒரு செம்மொழி.

02. ஆங்கிலச் சொற்களை சுருக்கப்பயன்பாடாக (Abbreviations) எழுத்தில் குறிக்கும் பொழுது இந்த முற்றுப்புள்ளி பயன்படும்.

எடுத்துக்காட்டாக:

Jan.
e.g.
a.m.
p.m.
etc.

03. இணைய முகவரி, மின்னஞ்சல் முகவரி மற்றும் திகதி போன்றவற்றை எழுதும் பொழுது இடப்படும் புள்ளியை "முற்றுப்புள்ளி" என்று அழைப்பதில்லை. அதனை "புள்ளி" என்றே அழைக்கவேண்டும். ஆங்கிலத்தில் "dot" என்றழைக்கப்படும்.

எடுத்துக்காட்டாக:

aangilam.blogspot.com
arunhk.infoATgmail.com
08.07.2010

குறிப்பு

நிறுத்தக்குறியீடுகளின் பயன்பாட்டை Aristophanes of Byzantium என்பவரே கிரேக்க மொழியில் அறிமுகப்படுத்தினார். அவரே முற்றுப்புள்ளியை அறிமுகப்படுத்தியவரும் ஆவார். அதனைத்தொடர்ந்து அதன் பயன்பாடு மருவி வெவ்வேறு மொழிகளில் இடம் பெறத்தொடங்கின. அவ்வாறே ஆங்கிலத்திலும், ஆங்கில வழியில் எமது பயன்பாட்டிலும் வந்தடைந்துள்ளது.

இருப்பினும் ஒரு வாக்கியத்தின் முடிவை குறிக்க பயன்படும் முற்றுப்புள்ளிக்கு பதிலாக; யப்பான் சீன மொழிகளில் ஒரு சிறிய வட்டம் "。" இடப்படுகின்றது. (Chinese and Japanese, a small circle is used instead of a solid dot: "。") பாக்கிஸ்தானிய உருது மொழியில் ஒரு சிறிய கிடைக்கோடு இடப்படுகின்றது. (Urdu uses "۔")

ஏனைய நிறுத்தக்குறியீடுகளின் பயன்பாடுகள் தொடர்ந்து வரும்.

தொடர்புடைய இடுகை

நன்றி

அன்புடன்
அருண் HK Arun Download As PDF

வினையெச்சங்களின் வகை (Types Of Adverbs)

வினெயெச்சங்கள் என்றால் என்ன? வினையெச்சங்கள் என்றால் ஆங்கிலப் பேச்சின் கூறுகளில் ஒன்று என்பதை நாம் ஏற்கெனவே கற்றுள்ளோம். இவை முக்கியமாக ஒரு வினையின் அல்லது வினைச்சொல்லின் தன்மையை விவரித்துக் கூற பயன்படும் சொற்கள் ஆகும். இவற்றை வினையெச்சங்கள், வினையடைகள், வினையுரிச் சொற்கள் என பல்வேறு பெயர்களில் தமிழில் அழைக்கப்படுகின்றது. ஆங்கிலத்தில் "Adverbs" என்றழைப்பர்.

ஆங்கிலத்தில் இவற்றை ஐந்து பிரிவுகளாக வகை படுத்தப்பட்டுள்ளன. அவற்றையே "வினையெச்சங்களின் வகைகள்" என்றழைக்கப்படுகின்றன.

வினையெச்சங்களின் வகைகள் (Types of adverbs)

Adverbs of manner - மாதிரி வினையெச்சங்கள்
Adverbs of place - இட வினையெச்சங்கள்
Adverbs of time - கால வினையெச்சங்கள்
Adverbs of frequency - நடப்புத்தன்மை வினையெச்சங்கள்
Adverbs of degree - அளவு வினையெச்சங்கள்

இனி இவ்வினையெச்சங்கள் பயன்படும் விதங்களைப் பார்ப்போம்.

Adverbs of manner - மாதிரி வினையெச்சங்கள்

மாதிரி வினையெச்சங்கள் - ஒரு வினை அல்லது செயல் என்ன மாதிரி அல்லது எப்படி நடைப்பெறுகின்றது என விவரிக்கின்றன.

Sarmilan runs quickly.
சர்மிலன் ஓடுகிறான் சீக்கிரமாக.

Sarmilan runs firstly.
சர்மிலன் ஓடுகிறான் முதலாவதாக.

Sarmilan runs lastly.
சர்மிலன் ஓடுகிறான் கடைசியாக.

Sarmilan runs slowly.
சர்மிலன் ஓடுகிறான் மெதுவாக.

He works well.
அவன் வேலை செய்கிறான் நன்றாக.

கவனிக்கவும்:
மாதிரி வினையெச்சங்கள் - சாதாரணமாக ஒரு வாக்கியத்தின் நேர் செயப்படுபொருளை (direct object) அடுத்து பயன்படும். அதேவேளை ஒரு வாக்கியத்தின் நேர் செயப்படுபொருள் பயன்படாத போது வினையை அடுத்து பயன்படும். (Adverbs of manner - Usually come after the object. If there is no direct object, after the verb.)

எடுத்துக்காட்டு:

Sarmilan drove the car carefully. (the car - object)
சர்மிலன் ஓட்டினான் மகிழுந்தை கவனமாக.

Sarmilan ran carefully.
சர்மிலன் ஓடினான் கவனமாக.

குறிப்பு:
மாதிரி வினையெச்சங்கள்; அதிகமானவை "ly" பின்னொட்டை கொண்டவைகளாக இருக்கும். இவற்றை ஒழுங்கமைவு வினையெச்சங்கள் என்றழைக்கப்படும். ஒழுங்கமையா வினையெச்சங்களும் உள்ளன.

Adverbs of place - இட வினையெச்சங்கள்

இட வினையெச்சங்கள் - ஒரு வினை அல்லது செயல் "எங்கே" என்பதை விவரிக்கின்றன.

I saw Sarmilan there.
நான் பார்த்தேன் சர்மிலனை அங்கே.

Sarmilan was sitting here.
சர்மிலன் அமர்ந்துக்கொண்டிருந்தான் இங்கே.

Sarmilan stayed behind me.
சர்மிலன் இருந்தான் எனது பின்னால்.

We looked everywhere.
நாங்கள் பார்த்தோம் எல்லாவிடங்களிலும்.

Did you see his pass port anywhere?
நீ பார்த்தாயா அவனது கடவுச்சீட்டை எங்கேயாவது?

I'm sure he lost it somewhere.
நான் நிச்சயிக்கிறேன் அவன் தொலைத்துவிட்டான் அதனை எங்கேயோ.

இட வினையெச்சங்கள் சாதாரணமாக செயப்படுபொருளை அடுத்தே பயன்படும். செயப்படுபொருள் பயன்படாத போது வினையை அடுத்து பயன்படும். (Adverbs of place - Usually come after the object, otherwise after the verb.)

Adverbs of time - கால வினையெச்சங்கள்

கால வினையெச்சங்கள் - ஒரு வினை அல்லது செயல் "எப்பொழுது" என்பதை விவரிக்கின்றன.

கால வினையெச்சங்கள் சாதாரணமாக ஒரு வாக்கியத்தின் ஆரம்பத்தில் அல்லது இறுதியில் பயன்படுபவைகளாகும். (Adverbs of time - Usually come either at the begining of the sentences or at the end.) (சில விதிவிலக்கானவைகள்)

Now we may study adverbs.
இப்பொழுது நாம் கற்கலாம் வினையெச்சங்கள்.

I read that book before.
நான் வாசித்தேன் அந்த நூலை முன்னரே.

I haven’t started preparation for the exams yet.
நான் ஆரம்பித்திருக்கவில்லை பரிட்சைக்கான தயார்படுத்தலை இன்னும்.

I'm going to tidy my room tomorrow.
நான் சுத்தமாக்கப் போகின்றேன் எனது அறையை நாளை.

She is still waiting for you.
அவள் இன்னும் காத்துக்கொண்டிருக்கின்றாள் உனக்காக.

குறிப்பு:

1. "yet" எப்பொழுதும் வாக்கியங்களின் இறுதியில் பயன்படும்.
2. "still" அநேகமாக ஒரு வாக்கியத்தின் வினைக்கு முன்னால் பயன்படும்.

Adverbs of frequency - நடப்புத்தன்மை வினையெச்சங்கள்

நடப்புத்தன்மை வினையெச்சங்கள் - ஒரு வினை அல்லது செயல் எப்படி அடிக்கடி நடந்தது, நடக்கிறது, நடக்கும் போன்ற தன்மையை விவரிக்கின்றன. அதாவது ஒரு செயல் எத்தனை முறை நடக்கின்றது என்பதை விவரிக்கின்றன.(Adverbs of Frequency answer the question "How often?" or "How frequently?" They tell us how often somebody does something.)

I will always love you.
நான் எப்பொழுதும் காதலிப்பேன் உன்னை.

I usually visit to Aangilam Blog
நான் சாதாரணமாக விஜயம் செய்கிறேன் ஆங்கிலம் வலைப்பதிவிற்கு.

I frequently watch the news before dinner.
நான் அடிக்கடி (தொடர்ந்து) பார்க்கிறேன் செய்திகள் இராச்சாப்பாட்டிற்கு முன்.

I often do my homework in my home.
நான் அடிக்கடி செய்கிறேன் எனது வீட்டுப்பாடங்களை எனது வீட்டில்.

I sometimes speak English.
நான் சிலநேரங்களில் பேசுகிறேன் ஆங்கிலம்.

I seldom go to the theatre.
நான் எப்பொழுதாவது போகிறேன் திரையரங்கிற்கு.

I never had any trouble with my old bike.
எனக்கு எப்பொழுதுமே ஏற்பட்டதில்லை எந்த இடையூறும் எனது பழைய உந்துருளியில்.

இப்பகுதியுடன் தொடர்புடைய ஒரு பாடம் Frequency Adverbs இங்கே இடப்பட்டுள்ளது.

Adverbs of degree - அளவு வினையெச்சங்கள்

அளவு வினையெச்சங்கள் - ஒன்றின் தரத்தை அளவை விவரிக்கப் பயன்படுகின்றன.

இவை சாதாரணமாக ஒரு வினையை விவரிக்கப் பயன்படுகின்றன. அத்துடன் இவை இன்னுமொரு வினையெச்சத்தை விவரிக்கும் வினையெச்சமாகவும், பெயரெச்சத்தை விவரிக்கவும் வினையெச்சமாகவும் கூடப் பயன்படும். (Adverbs of degree - modify an adverb or an adjective.)

They enjoyed the film immensely.
அவர்கள் அளவுக்கதிமாக மகிழ்ந்தார்கள் திரைப்படத்தைப் பார்த்து. (இவ்வாக்கியத்தின் அவர்கள் திரைப்படத்தைப் பார்த்து எந்தளவிற்கு (அளவுக்கதிமாக) மகிழ்ந்தார்கள் என்று விவரிக்கப்படுகிறது.)

He is a terribly good cricket player.
அவர் ஒரு பயங்கரமான நல்ல கிரிக்கெட் விளையாட்டு வீரர். (இவ்வாக்கியத்தில், அவர் எப்படியான தரம் வாய்ந்த விளையாட்டு வீரர் (பயங்கரமான நல்ல) என விவரிக்கப்படுகிறது.)

The hall is almost full.
இம்மண்டபம் ஏறக்குறைய நிரம்பியிருக்கிறது. (இவ்வாக்கியத்தில் மண்டபம் எவ்வளவு நிரம்பியிருக்கிறது என்பதை (ஏறக்குறைய) விவரிக்கப்படுகிறது.)

The man drove really badly.
அம்மனிதன் ஓட்டினான் மிகவும் மோசமாக. (இவ்வாக்கியத்தில் அம்மனிதன் எவ்வளவு மோசமாக (உண்மையில் மோசமாக) ஓட்டினான் என்பதைக் விவரிக்கப்படுகின்றது.)

He drives incredibly slowly.
அவன் நம்பமுடியாதளவில் மெதுவாக ஓட்டுகிறான். (இவ்வாக்கியத்தில் அவன் எவ்வளவு (நம்பமுடியாத அளவிற்கு மெதுவாக) ஓட்டுகிறான் என்பதை விவரிக்கப்படுகின்றது.)

வினையெச்சங்களை கற்றல்

ஆங்கில மொழியில் வாக்கிய அமைப்புகளை; எங்கே, எப்படி, எந்தளவு, என்ன மாதிரி, எந்தளவு என விவரித்து சுவைப்பட எழுதவும் பேசவும் வினையெச்சங்களின் பயன்பாட்டை அறிந்து வைத்துக்கொள்ளல் அவசியம்.

எளிதாக வினையெச்சங்களை கற்பதற்கு அவற்றை இரண்டு பிரிவாக பிரித்து பயிற்சி செய்யலாம்.

1. Regular Adverbs -ஒழுங்கமை வினையெச்சங்கள்
2. Irregular Adverbs - ஒழுங்கமையா வினையெச்சங்கள்

ஒழுங்கமை வினையெச்சங்களின் அட்டவணை  (தமிழ் விளக்கத்துடன்) எதிர்வரும் பாடங்களில் வழங்கப்படும்.

அத்துடன் இப்பாடத்துடன் தொடர்புடையை "வினையெச்சம் பயன்படும் விதங்கள்" பாடத்தையும் விரைவில் பார்ப்போம்.

அதுவரை  இப்பாடப் பயிற்சிகளைத் தொடருங்கள்.

தொடர்புடையப் பாடங்கள்:

மீண்டும் அடுத்தப் பாடத்தில் சந்திப்போம்.

நன்றி

அன்புடன்
அருண் HK Arun
Download As PDF

ஆங்கிலம் செயப்பாட்டுவினை (Passive Voice)

உலகத் தமிழ் உறவுகள் அனைவருக்கும் 2010 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இன்று நாம் செயப்பாட்டுவினை (Passive Voice) வாக்கிய அமைப்புக்களின் பயன்பாட்டைப் பார்ப்போம்.

சாதாரண செயல்வினை வாக்கியங்களில், எழுவாய் (Subject) எப்பொழுதும் வாக்கியத்தின் ஆரம்பத்திலேயே வரும். ஆனால் செயப்பாட்டுவினை வாக்கியங்களில் அவ்வாறு அல்லாமல் செயப்படுபொருளே (Object) வாக்கியத்தின் ஆரம்பத்தில் தோன்றும். அதேவேளை வாக்கியத்தின் பிரதான வினைசொல் Past Participle சொற்களாகவே இருக்கும்.

எடுத்துக்காட்டாக:

Sarmilan is doing a job.
சர்மிலன் செய்துக்கொண்டிருக்கின்றான் ஒரு வேலை.

(The) Job is done by Sarmilan.
வேலையை செய்யப்படுகிறது சர்மிலனால்.
(சர்மிலனால் வேலை செய்யப்படுகிறது.)

சரி! இந்த செயப்பாட்டுவினை வாக்கியங்களை எளிதாக கற்பதற்கு; அவற்றையும் ஒரு கிரமர் பெட்டன் (Grammar Patterns) ஆக வடிவமைத்து பயிற்சி செய்வோம்.

உச்சரிப்பு பயிற்சி பெறவிரும்புவோர் ஒலி கோப்பினை சொடுக்கி பயிற்சி பெறலாம்.

1. It is done.
இதை செய்யப்படுகிறது.

2. It is being done.
இதை செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறது.

3. It was done.
இதை செய்யப்பட்டது.

4. It was being done.
இதை செய்யப்பட்டுக்கொண்டிருந்தது.

5. It will be done.
இதை செய்யப்படும்.

6. It will be being done.
இதை செய்யப்பட்டுக்கொண்டிருக்கும்.

7. It would be done.
இதை செய்யப்பட்டிருக்கும்.

8. It would be being done.
இதை செய்யப்பட்டுக்கொண்டிருக்கும்.

9. It is not done.
இதை செய்யப்படுகிறதில்லை.

10. It wasn’t done. (was + not)
இதை செய்யப்படவில்லை

11. It won't be done. (will + not)
இதை செய்யப்பட மாட்டாது.

12. It has been done.
இதை (சில காலமாக/ சற்று முன்பிலிருந்து) செய்யப்படுகிறது.

13. It has been being done.
இதை (சில காலமாக/ சற்று முன்பிலிருந்து) செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றது.

14. It had been done.
இதை (அக்காலத்திலிருந்து/ அன்றுமுதல்) செய்யப்பட்டது.

15. It had been being done.
இதை (அக்காலத்திலிருந்து/ அன்றுமுதல்) செய்யப்பட்டுக்கொண்டிருந்தது.

16. It will have been done.
இதை (ஒரு குறிப்பிட்ட காலம் வரை) செய்யப்படும்.

17. It will have been being done.
இதை (ஒரு குறிப்பிட்ட காலம் வரை) செய்யப்பட்டுக்கொண்டிருக்கும்.

18. It is to be done.
இதை செய்ய நிச்சயிக்கப்பட்டிருக்கிறது.

19. It was to be done.
இதை செய்ய நிச்சயிக்கப்பட்டது.

20. It is going to be done.
இதை செய்யப்படப் போகின்றது.

21. It was going to be done.
இதை செய்யப்படப் போனது.

22. It can be done.
இதை செய்ய முடியும்.

23. It can't be done.
இதை செய்ய முடியாது.

24. It could be done.
இதை செய்ய முடிந்தது.

25. It couldn't be done.
இதை செய்ய முடியவில்லை.

26. It must be done.
இதை (நிச்சயமாக) செய்யப்பட வேண்டும்.

27. It must not be done.
இதை (நிச்சயமாக) செய்யப்பட கூடாது.

28. It should be done.
இதை செய்யப்படவே வேண்டும்.

29. It shouldn’t be done.
இதை செய்யப்படவே கூடாது.

30. It ought to be done.
இதை எப்படியும் செய்யப்படவே வேண்டும்.

31. It has to be done.
இதை செய்யப்பட வேண்டும்.

32. It doesn't have to be done.
இதை செய்யப்படவேண்டிய அவசியமில்லை.

33. It had to be done.
இதை செய்யப்படவேண்டி ஏற்பட்டது/இருக்கும்.

34. It didn't have to be done.
இதை செய்யப்படவேண்டி ஏற்படவில்லை/இருக்கவில்லை.

35. It will have to be done.
இதை செய்யப்படவேண்டி ஏற்படும்/இருக்கும்.

36. It won’t have to be done.
இதை செய்யப்பட வேண்டி ஏற்படாது/இருக்காது

37. It need be done.
இதை செய்வது அவசியம்.

38. It needn't be done.
இதை செய்யவேண்டிய அவசியமில்லை.

39. It may be done.
இதை செய்யப்படலாம்.

40. It may have been done.
இதை செய்யப்பட்டிருக்கலாம்.

41. It must have been done.
இதை நிச்சயமாக செய்யப்பட்டிருக்க வேண்டும்.

42. It would have been done.
இதை செய்யப்பட்டிருக்க வேண்டும்.

43. It wouldn't have been done.
இதை செய்யப்பட்டிருக்காது.

44. It could have been done.
இதை செய்திருக்க இருந்தது. (ஆனால் செய்யவில்லை)

45. It should have been done.
இதை செய்திருக்கவே இருந்தது. (ஆனால் செய்யவில்லை)

46. It shouldn't have been done.
இதை செய்யாமலிருக்கவே இருந்தது. (அநியாயம் செய்தது)

47. It ought to have been done.
இதை எப்படியும் செய்திருக்கவே இருந்தது. (ஆனால் செய்யவில்லை)

செயப்பாட்டுவினை கற்கவேண்டியதன் முக்கியத்துவம்
-------------------------------------------------------------------------------------
1. ஆங்கில பத்திரிகைகளை இலகுவாக வாசித்து விளங்கிகொள்வதற்கு.
2. ஆங்கில அரச பதிவேடுகளை, கடிதங்களை எளிதாக வாசித்து விளங்கிகொள்வதற்கு.
3. வானொலி, தொலைக்காட்சி செய்திகளை புரிந்துக்கொள்வதற்கு.
4. ஆங்கில மொழியில் (உயர்கல்வி) பாடங்களை இலகுவாக விளங்கிக்கற்பதற்கு (கணிதம், கணினி, தொழில்நுட்பம் போன்றவை...)
5. ஆங்கில செயப்பாட்டுவினை வாக்கியங்களூடாக யாரும் உங்களுடன் உரையாடினால், அவற்றை எளிதாக விளங்கிக்கொள்வதற்கும் மறுமொழிவதற்கும்.

செய்திகளில் செயப்பாட்டுவினை (Passive Voice) வாக்கியங்கள்

Hong Kong Island was occupied by British forces in 1841
ஹொங்கொங் தீவை கைப்பற்றப்பட்டது பிரித்தானியப் படைகளால் 1841 இல்.
(ஹொங்கொங் தீவை பிரித்தானியப் படைகளால் 1841 இல் கைப்பற்றப்பட்டது.)

A young female Tamil journalist was arrested by the Police on suspicion.
ஒரு இளம் தமிழ் பெண் பத்திரிக்கையாளரை கைதுசெய்யப்பட்டது பொலிஸாரால் சந்தேகத்தில்.
(ஒரு இளம் தமிழ் பெண் பத்திரிக்கையாளரை சந்தேகத்தின் பேரில் கைதுச்செய்யப்பட்டுள்ளது.)

Two decomposed bodies of Tamils were discovered on Friday.
இரண்டு சிதைவுற்ற தமிழர்களின் உடலங்களை கண்டுபிடிக்கப்பட்டது வெள்ளிக்கிழமை.

Tamils were abducted by unidentified armed persons.
தமிழர்களை கடத்திச்செல்லப்பட்டது அடையாளம் காணப்படாத ஆயுததாரிகளால்.
(அடையாளம் காணப்படாத ஆயுததாரிகளால் தமிழர்களை கடத்திச்செல்லப்பட்டுள்ளது.)

An university Tamil girl was kidnapped on December 31 morning.
ஒரு பல்கலைக் கழக தமிழ் பெண்ணை கடத்தப்பட்டது டிசம்பர் 31 காலையில்.
(பல்கலைக்கழக தமிழ் பெண் ஒருவரை டிசம்பர் 31 ம் நாள் காலையில் கடத்தப்பட்டுள்ளது.)

Navanethem Pillay was appointed as new United Nations High Commissioner for Human Rights.
நவநீதம் பிள்ளையை நியமிக்கப்பட்டது புதிய ஐக்கிய நாடுகளின் மனிதவுரிமை உயர் ஆணையராக.
(நவநீதம் பிள்ளை அவர்களை புதிய ஐக்கிய நாடுகளின் மனிதவுரிமை உயர் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளது.)

Barack Hussein Obama was elected President of the United States on 5 Nov 2008.
பாரக் ஹுசேன் ஒபாமாவை தேர்ந்தெடுக்கப்பட்டது ஐக்கிய அமெரிக்காவின் சனாதிபதியாக 5 நவம்பர் 2008 இல்.
(2008 நவம்பர் 5 ஆம் நாளன்று ஐக்கிய அமெரிக்காவின் சனாதிபதியாக பாரக் ஹுசேன் ஒபாமா அவர்களை தேர்ந்தெடுக்கப்பட்டது.)

Annathurai is considered an intellectual and a brilliant Tamil scholar.
அண்ணாதுறையை கருதப்படுகின்றது ஒரு புத்திமானாகவும் ஒரு பிரகாசமான தமிழ் கல்விமானாகவும்.
(அண்ணாத்துறை அவர்களை ஒரு பிரகாசமான தமிழ் கல்விமானாகவும் புத்திமானாகவும் கருத்தப்படுகின்றது.)

இவற்றை போன்று அநேகமான செய்திகளில் "செயப்பாட்டுவினை" வாக்கியங்களே காணப்படுகின்றன. இச்செயப்பாட்டு வினை வாக்கியங்களை நன்கு பயிற்சி செய்துக்கொள்வதன் ஊடாக, எளிதாக அவற்றை புரிந்துக்கொள்ளலாம்.

உங்கள் பயிற்சிக்கு Homework:
-------------------------------------------------------------------------------------
இங்கே உங்கள் பயிற்சிக்காக 10 சிறிய வாக்கியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை நாம் மேலே பயிற்சி செய்த 47 செயப்பாட்டுவினை வாக்கியங்களைப் போன்று; ஒவ்வொரு வாக்கியங்களையும் 47 வாக்கியங்களாக அமைத்து எழுதி பயிற்சி செய்யுங்கள். எழுதும் பொழுது வாசித்து வாசித்து எழுதுங்கள். அதுவே உங்கள் பேச்சாற்றலை எளிதாக வளர்த்துக்கொள்வதற்கான இரகசியமாகும். பின் எழுதியவற்றை உங்கள் சக நண்பரிடமோ, உறவினரிடமோ பேசி பயிற்சி செய்யுங்கள்.

1. Ravi is investigated by police.
காவல் துறையினாரால் ரவியை விசாரிப்படுகிறது.

2. The Robot is made by Japan
இயந்திரனை ஜப்பானில் தயாரிக்கப்படுகிறது.

3. His interview is postponed
அவனுடைய நேர்முகத்தேர்வை தள்ளிப்போடப்படுகிறது.

4. She is appointed as Managing Director.
அவளை நிர்வாக இயக்குனராக நியமிக்கப்படுகிறது

5. My wallet is stolen.
எனது பணப்பையை களவாடப்படுகிறது.

6. It is made
இதை தயாரிக்கப்படுகிறது.

7. Sitha is kidnapped by Iravanan.
சீதையை இராவணனால் கடத்தப்படுகிறது.

8. The letter is sent by post.
இந்த கடிதத்தை அனுப்பப்படுகின்றது தபாலில்.

9. The man is killed by Army.
அந்த மனிதனை கொல்லப்படுகின்றது இராணுவத்தால்.

10. It is done by Government of Sri Lanka
இதை செய்யப்படுகிறது இலங்கையின் அரசால்.

Direct Object - Indirect Object
-------------------------------------------------------------------------------------
செயப்பாட்டுவினை வாக்கியங்கள் ஆங்கிலத்தில் இரண்டு விதமாக பயன்படுத்தப்படுகின்றன. ஒன்று நேரடியாக செயப்படுபொருளை விவரிப்பவை. இதனை Direct Object என்பர். மற்றது மறைமுகமாக செயப்படுப்பொருளை விவரிப்பவை. இதனை Indirect Object என்பர்.

Direct Object:

அதாவது ஒரு செயலை யாரால் எதனால் செய்யப்படுகிறது என்பதை எவ்வித மறைவும் இன்றி நேரடியாகவே செயலை விவரிப்பவை.

Ravi was investigated by police.
காவல் துறையினாரால் ரவியை விசாரிக்கப்பட்டது.

The Robot was made by Japan
இயந்திரன்/னை ஜப்பானில் தயாரிக்கப்பட்டது.

Sitha was kidnapped by Iravanan.
சீதையை இராவணனால் கடத்தப்பட்டது.

The letter was sent by post.
கடிதத்தை தபாலில் அனுப்பப்பட்டது.

The men was killed by Army.
அம்மனிதர்களை இராணுவத்தால் கொல்லப்பட்டது. (கொல்லப்பாட்டார்கள்)

The window was broken by Sarmilan.
சாளரத்தை சர்மிலனால் உடைக்கப்பட்டது.

Indirect Object: http://aangilam.blogspot.com

மறைமுகமாக செயப்படுப்பொருளை விவரிப்பவை அல்லது செயப்படுபொருளை மறைத்து அல்லது தவிர்த்து விவரிப்பவை (Indirect Object) ஆகும். அதாவது ஒரு செயலை யாரால் எதனால் செய்யப்படுகிறது என்பதை தவிர்த்து அல்லது வேண்டுமென்றே மறைத்து, வினையை மட்டும் விவரிப்பவை. இவ்வாறு ஏன் பேசப்படுகின்றது என்பதற்கு மூன்று காரணங்களை குறிப்பிடலாம்.

1. ஒரு செயலை யாரால் செய்யப்பட்டது என்பது தெரியாதப்பொழுது செயலை மட்டும் விவரித்து பேசுதல்.
2. செயலுக்கான காரணி அல்லது காரணமானவர் யார் என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாமல் பேசுதல்.
3. யாரால் எதனால் செய்யப்பட்டது என்பதை வேண்டுமென்றே மறைத்து பேசுதல். (அநேகமான தலைப்புச்செய்திகள் இவ்வாறே காணப்படும்.)

Ravi was investigated.
ரவியை விசாரிப்பட்டது. (யாரால் விசாரிக்கப்பட்டது என்பதை கூறாமல் தவிர்க்கப்பட்டுள்ளது.)

The Robot was made.
இயந்திரன் தயாரிக்கப்பட்டது. (யாரால், எந்த நாட்டால், எந்த நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது என்பதை கூறப்படவில்லை.)

Sitha was kidnapped.
சீதையை கடத்தப்பட்டது. (யாரால் கடத்தப்பட்டது என்பதை கூறப்படவில்லை)

The letter was sent.
கடிதத்தை அனுப்பப்பட்டது. (எப்படி எதனூடாக அனுப்பப்பட்டது என்பது விவரிக்கப்படவில்லை)

The men was killed.
அம்மனிதர்கள் கொல்லப்பட்டார்கள். (யாரால் கொல்லப்பட்டது என்பது மறைக்கப்பட்டுள்ளது.)

The window was broken.
சாரளத்தை உடைக்கப்பட்டது. (யாரால் உடைக்கப்பட்டது என்பதை கூறப்படவில்லை அல்லது உடைத்தவர் யார் என்பது தெரியாது.)

குறிப்புகள்: http://aangilam.blogspot.com

1. செயப்பாட்டுவினை (Passive Voice) இன் பயன்பாடுகளை எளிதாகக் கற்பதற்கு, முதலில் அங்கில் சாதாரண பேச்சு பயன்பாடுகளை அறிந்திருக்க வேண்டும். நீங்கள் இத்தளத்திற்கு புதிதாக வருகைத் தந்தவர் என்றால் முதலில் எமது Grammar Patterns 01 இல் இருந்து பயிற்சி செய்யுங்கள்.

2. செயப்பாட்டுவினை வாக்கியங்களின் பிரதான வினை (Main Verb) எப்பொழுதும் "Past Participle" சொற்களாகவே பயன்படும் என்பதை மறவாதீர்கள். அவற்றை Irregular verbs அட்டவணையில் பார்க்கலாம்.

3. செயப்பாட்டுவினை - செயல்வினை வேறுப்பாடுகள் அடுத்தப்பாடத்தில் வழங்கப்படும். (செயல்பாட்டுவினை பேச்சு வழக்கிக்கிற்கு பொருந்தாத அல்லது அதிகம் பயன்படுத்தப்படாத வாக்கிய அமைப்புகள் பற்றியும் பார்ப்போம்.)

2010 ஆம் ஆண்டின் முதல் பாடப்பயிற்சி இதுவாகும். இப்பாடம் நிச்சயம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம். இப்பாடப் பயிற்சியை சரியாக பற்றிக்கொண்டீர்களானால், இது மிகவும் இலகுவான ஓர் பயிற்சி முறை என்பதை நீங்கள் நிச்சயம் உணர்வீர்கள்.

அறிவித்தல்:

எமது பாடங்களை தயவுசெய்து அப்படியே வெட்டி ஒட்டுவதை தவிர்க்கவும். நன்னோக்கின் அடிப்படையில் மீள்பதிவிட விரும்பினால், ஒரு சிறு பகுதியை மட்டும் இட்டு, எமது தளத்தின் குறிப்பிட்ட பாடத்திற்கான இணைப்பை (URL) கட்டாயம் வழங்கப்படவேண்டும் என அறியத்தருகின்றோம்.

இப்பாடம் தொடர்பான ஏதேனும் சந்தேகங்கள் விளக்கங்கள் தேவைப்படின் பின்னூட்டம் இட்டோ அல்லது முகப்பில் காணப்படும் எனது மின்னஞ்சல் ஊடாகவோ தொடர்புக்கொள்ளலாம்.

நன்றி

அன்புடன்

அருண் HK Arun Download As PDF

ஆங்கிலப் பெயர்சொற்குறிகள் (Articles)

"பெயர்சொற்குறிகள்" என்பவை பெயர்ச்சொற்களை குறிப்பிட்டு அல்லது சுட்டிக்காட்டப் பயன்படும் சொற்களாகும். இதனை தமிழில் சுட்டிடைச்சொற்கள் என்றும் அழைப்பர். ஆங்கிலத்தில் பெயர்ச்சொற்குறிகள் மூன்று மட்டுமே உள்ளன.

அவைகளாவன:

the, a, an

இவற்றை இரண்டு வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

Definite Article = நிச்சயப் பெயர்சொற்குறி
Indefinite Articles = நிச்சயமற்ற பெயர்சொற்குறிகள்

நிச்சயப் பெயர்சொற்குறி (Definite Article)

ஆங்கிலத்தில் நிச்சயப் பெயர்ச்சொற்குறி ஒன்று மட்டுமே உள்ளது. Specific
  • The
யாரேனும் ஒருவரை அல்லது ஏதேனும் ஒன்றை நிச்சயித்து அல்லது குறிப்பிட்டு பேசப் பயன்படும் சொல் “நிச்சயப் பெயர்சொற்குறி” சொல்லாகும். தமிழில் “அந்த, இந்த” என்று குறித்துப் பேசுவதற்கு இணையானப் பயன்பாடாகும். இச்சொல் (The) எப்பொழுதும் பெயர்ச்சொற்களுக்கு முன்பாக மட்டுமே பயன்படும். அத்துடன் ஏற்கெனவே குறிப்பிடப்பட்ட ஒருவரை அல்லது குறிப்பிடப்பட்ட பொருளை குறித்துப் பேசவும் பயன்படும்.

எடுத்துக்காட்டு:

The car.
(அந்த/இந்த) மகிழூந்து

The book.
(அந்த/இந்த) பொத்தகம்

The beautiful girl
(அந்த/இந்த) அழகானப் பெண்.

நிச்சயமற்ற பெயர்சொற்குறிகள் (Indefinite Articles)

நிச்சயமற்ற பெயர்ச்சொற்குறிகள் எப்பொழுதும் எந்த ஒரு நபரையும், எந்த ஒரு பொருளையும்; இவர்தான் (அவர்/இவர்), இதுதான் (அந்த/இந்த) என்று நிச்சயித்து குறிப்பிட பயன்படுவதில்லை. அதாவது ஒரு நபர் அல்லது பொருள்; யார், எது என தெரியாதப் பொழுது அல்லது குறிப்பிட்டு கூறாமல் தவிர்க்கும் பொருட்டு, பொதுப்படையாக "ஓர்", "ஒரு" என நிச்சயமற்ற பெயர்சொற்குறிகள் பயன்படும்.

நிச்சயமற்ற பெயர்சொற்குறிகள் ஆங்கிலத்தில் இரண்டு மட்டுமே உள்ளன.
  • a
  • an
எடுத்துக்காட்டாக:

a car
ஒரு மகிழுந்து
(ஏதோ ஒரு மகிழுந்து, எந்த மகிழூந்து என்று நிச்சயித்து அல்லது குறிப்பிட்டு கூறப்படவில்லை)

a book
ஒரு பொத்தகம்
(ஏதோ ஒரு பொத்தகம். எந்த பொத்தகம் என்று குறிப்பிடவில்லை.)

a beautiful girl
ஒரு அழகானப் பெண்
(யாரோ ஒரு அழகானப் பெண். எந்தப் பெண் என்று குறிப்பிடவில்லை)

“a” பெயர்ச்சொற்குறி போன்றே, “an” எனும் பெயர்ச்சொற்குறியும் குறிப்பிட்டு எதனையும் குறிக்காமல் பொதுவாக ஒன்றை குறிக்கப் பயன்படும் சொல்தான். ஆனால் ஆங்கில உயிரெழுத்துக்கள் அல்லது உயிரொலியுடன் தொடங்கும் சொற்களின் முன்னால் மட்டும் பயன்படும் சொல்லாகும்.

எடுத்துக்காட்டாக:

He is an Indian
அவன் ஒரு இந்தியன்.
(இந்தியக் குடியுரிமை கொண்ட ஒருவன்)

மேலும் விரிவாக இவற்றை இங்கே பார்க்கலாம்.

இப்பொழுது நிச்சயமற்ற பெயர்ச்சொற்குறிகள் மற்றும் நிச்சயப் பெயர்ச்சொற்குறி இரண்டும் இணைந்து பயன்படும் சில வாக்கியங்களை எடுத்துக்காட்டாகப் பார்ப்போம்.

There is a car. The car is fifty years old.
அங்கிருக்கிறது ஒரு மகிழுந்து. அந்த மகிழுந்து 50 ஆண்டுகள் (வயதுடையது) பழையது.

இதில் "அங்கிருக்கிறது ஒரு மகிழுந்து" எனும் போது எந்த மகிழுந்து என்று குறிப்பிட்டுக் கூறப்படவில்லை. ஆனால் இரண்டாவது வாக்கியத்தில் "அந்த மகிழுந்து 50 ஆண்டுகள் பழையது.” எனும் போது நாம் ஏற்கெனவே குறிப்பிட்ட மகிழுந்தைப் பற்றி பேசுகிறோம் என்பது கேட்பவருக்கு எளிதாக விளங்கிவிடும். அதனாலேயே முதலில் பயன்படும் " a” நிச்சயமற்ற பெயர்ச்சொற்குறியாகவும், அடுத்து இடம்பெறும் “The” நிச்சயப் பெயர்ச்சொற்குறியாகவும் அழைக்கப்படுகின்றன.

மேலும் சில எடுத்துக்காட்டுகள்:

This is a book. The book is mine.
இது ஒரு பொத்தகம். இந்த பொத்தகம் என்னுடையது.

There is a beautiful girl. The girl is my girlfriend.
அங்கிருக்கிறாள் ஒரு அழகானப் பெண். அந்த பெண் எனது காதலி.

இவற்றை சரியாக விளங்கிக்கொண்டீர்களானால் பெயர்ச்சொற்குறிகளை பயன்படுத்துவது எளிதானதாக இருக்கும்.

பெயர்ச்சொற்குறி அற்றவை (Zero Article)

சில சொற்களின் முன்னால் பெயர்ச்சொற்குறிகள் பயன்படுவதில்லை. அவற்றையே “”Zero Article” என அழைக்கப்படுகின்றது. அதாவது பெயர்ச்சொற்குறிகள் பயன்படாதவை.

எடுத்துக்காட்டாக:

I like to drink water.
நான் தண்ணீர் குடிக்க விரும்புகிறேன்.

மேலுள்ள வாக்கியத்தைச் சற்று கவனிக்கவும். அதனை "நான் ஒரு தண்ணீர் குடிக்க விரும்புகிறேன்." என்றோ, “நான் அந்த தண்ணீர் குடிக்க விரும்புகிறேன்.” என்றோ பெயர்ச்சொற்குறி இட்டு ஆங்கிலத்தில் குறிப்பிட முடியாது.

I like to drink a water.
I like to drink the water.

குறிப்பு:
Define Article என்பதை Define Articles என்று “s” இட்டு பன்மையாக எழுதுவது பொருத்தமற்றது. காரணம் Define Article (The) ஒன்று மட்டுமே உள்ளது

சொல்விளக்கம் (Definitions of Article)

"Article" எனும் ஆங்கிலச்சொல் பெயர்ச்சொல்லாகவும் வினைச்சொல்லாகவும் பயன்படும். அத்துடன் "பெயர்சொற்குறி" எனும் பொருளைத் தவிர வேறு சில பொருற்களும் உள்ளன.

Article: பெயர்சொற்குறி (சுட்டிடைச்சொல்)
Article: உடன்படிக்கை. (ஆவண உடன்படிக்கை)
article: உடன்படிக்கை மூலம் கட்டுப்படுத்து (வினை)
Article: கட்டுரை, செய்தித்தாளின் வெளியான ஒரு பொருள்.

தொடர்புடைய பாடங்கள்:
இப்பாடம் தொடர்பான சந்தேகங்கள் விளக்கங்கள் தேவைபடின் பின்னூட்டம் ஊடாகவோ, எமது மின்னஞ்சல் ஊடாகவோ தொடர்புக்கொள்ளலாம்.

நன்றி!

அன்புடன்
அருண் HK Arun
Download As PDF

ஆங்கில சுட்டுப்பெயர்கள் (English Pronouns)

ஆங்கிலத்தில் பெயர்சொற்கள் என்றால் என்ன என்பதை நாம் கடந்தப் பாடங்களில் கற்றோம். இன்று சுட்டுபெயர் சொற்கள் என்றால் என்ன என்பதைப் பார்ப்போம்.

சுட்டுப்பெயர் சொல் என்பது ஒரு பெயரை அல்லது பெயர் சொல்லை குறிப்பிடாமல், அதற்குப் பதிலாக சுட்டிக்காட்டுவதற்கு பயன்படும் சொற்களே "சுட்டுப்பெயர்" என்றழைக்கப்படுகின்றன. இவற்றை தமிழில் "பிரதிப்பெயர்கள்", "பதிலிடுச்சொற்கள்" என்றும் அழைப்பர். ஆங்கிலத்தில் "Pronouns" என அழைக்கப்படும்.

உதாரணம்:

Sarmilan will come to the class.
சர்மிலன் வருவான் வகுப்பிற்கு

He will come to the class
அவன் வருவான் வகுப்பிற்கு.

முதல் வாக்கியத்தில் “சர்மிலன்” என்று குறிப்பிடப்பட்டிருக்கும் பெயருக்கு (பெயர்ச்சொல்லுக்கு) பதிலாக, இரண்டாம் வாக்கியத்தில் “அவன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளதை கவனிக்கவும். அதாவது “சர்மிலன்” எனும் பெயரைக் குறிப்பிடாமல் “அவன்” எனும் சொல் சுட்டிக்காட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. அதனாலேயே “அவன்” எனும் சொல் ஒரு சுட்டுப்பெயர்ச் சொல்லாகும்.

இச் சுட்டுப்பெயர்களை ஆங்கிலத்தில் பல்வேறு பிரிவுகளாகப் பகுத்துள்ளனர். அவைகளாவன:

Subject Pronouns
Object Pronouns
Reflexive Pronouns
Possessive Pronouns
Demonstrative Pronouns
Relative Pronouns
Interrogative Pronouns
Indefinite Pronouns

இப்பிரிவுகள் ஒவ்வொன்றினதும் சுட்டுப்பெயர்கள் அதே நிறங்களில் கீழே வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் எடுத்துக்காட்டாக அச்சுட்டுப்பெயர்கள் பயன்படும் வாக்கிய அமைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.

Subject Pronouns – எழுவாய் சுட்டுப்பெயர்கள்

ஒரு வாக்கியத்தின் எழுவாயாகப் பயன்படும் சுட்டுப்பெயர்கள்.

I - நான்
You – நீ (ஒருமை)
He - அவன்
She - அவள்
It - அது
We – நாம், நாங்கள்
You - நீங்கள் (பன்மை)
They - அவர்கள், அவைகள்

உதாரணம்:

Kennedy spoke about genocide war in Sri Lanka.
கென்னடி பேசினார் இலங்கையின் இனவழிப்பு போரைப் பற்றி.

He spoke about genocide war in Sri Lanka.
அவர் பேசினார் இலங்கையின் இனவழிப்பு போரைப் பற்றி.

(“Kennedy” எனும் பெயர்சொல்லுக்குப் பதிலாக “He” எனும் சுட்டுப்பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது.)

Object Pronouns – செயப்படுபொருள் சுட்டுப்பெயர்கள்

ஒரு வாக்கியத்தின் செயப்படுபொருளாகப் பயன்படும் சுட்டுப்பெயர்கள்.

me – என்னை
you - உன்னை (பன்மை)
him - அவனை
her – அவளை
it - அதை
us – எங்களை, நம்மை
you - உங்களை (பன்மை)
them - அவர்களை, அவைகளை

உதாரணம்:

I love her
நான் காதலிக்கிறேன் அவளை

Reflexive Pronouns – அனிச்சைச் செயல் சுட்டுப்பெயர்கள்

ஒரு வாக்கியத்தின் எழுவாய் சொல்லை மீண்டும் அனிச்சையாக குறிப்பிடுவதற்கு பயன்படும் சுட்டுப்பெயர்கள்.

myself - நானாகவே
yourself - நீயாகவே
himself - அவனாகவே
herself - அவளாகவே
itself - அதுவாகவே
ourselves – நாங்களாகவே, நாமாகவே
yourselves - நீங்களாகவே
themselves – அவர்களாகவே, அவைகளாகவே

உதாரணம்:

I cut my hair myself.
நான் வெட்டினேன் எனது தலைமயிரை நானாகவே
(நான் எனது தலைமயிரை நானே/நானாகவே வெட்டிக்கொண்டேன்.)

Possessive Pronouns – ஆறாம் வேற்றுமை (உரிமையைக் குறிக்கும்)

இவை உரிமையைக் குறிக்க அல்லது உரிமையை வெளிப்படுத்தப் பயன்படுபவை. இவற்றை சுட்டுப்பெயராக பயன்படுபவைகள் பெயரெச்சமாக பயன்படுபவைகள் என இரண்டு விதமாகப் பார்க்கலாம்.

mine - என்னுடையது
yours - உன்னுடையது
his - அவனுடையது
hers - அவளுடையது
its - அதனுடையது
ours - எங்களுடையது
yours - உங்களுடையது
theirs – அவர்களுடையது, அவைகளுடையது

உதாரணம்:

This house is ours.
இந்த வீடு எங்களுடையது

Adjective – பெயரெச்சம்

பெயரெச்சமாகப் பயன்படுபவைகள்

my – என்னுடைய
your – உன்னுடைய
his – அவனுடைய
her - அவளுடைய
its - அதனுடைய
our – எங்களுடைய
your – உங்களுடைய
their - அவர்களுடைய, அவைகளுடைய

உதாரணம்:

This is our house.
இது எங்களுடைய வீடு.

வேறுப்பாடு (Possessive - Adjective)

This is our house. (Adjective)
இது எங்களுடைய வீடு.

This house is ours. (Possessive)
இந்த வீடு எங்களுடையது.

Demonstrative Pronouns – குறிப்பிடுச் சுட்டுப்பெயர்கள்

ஒன்றை அல்லது பலவற்றை குறித்துக்காட்டுவதற்கு அல்லது அடையாளப்படுத்தி பேசுவதற்கு இச்சுட்டுப் பெயர்கள் பயன்படுகின்றன.

This – இது, இந்த (ஒருமை)
That – அது, அந்த (ஒருமை)
These – இவை, இவைகள் (பன்மை)
Those – அவை, அவைகள் (பன்மை)

உதாரணம்:

This book is new but those books are old.
இந்த பொத்தகம் புதியது ஆனால் அப்பொத்தகங்கள் பழையது.

(இவற்றில் book books எனும் பெயர் சொற்களை தவிர்த்து சுட்டுப்பெயர்களை மட்டுமே பயன்படுத்தியும் பேசலாம்.)

This is new but those are old.
இது புதியது ஆனால் அவைகள் பழையது.

Relative Pronouns – உரிச் சுட்டுப்பெயர்கள்

ஒரு வாக்கியத்தின் உற்பிரிவாகவோ அல்லது இரண்டு வாக்கியங்களின் இணைப்புச் சொல்லாகவோ பயன்படுபவைகள்.

who
whom
that
which
whoever
whomever
whichever

உதாரணம்:

I told you about a woman who lives next door.
நான் கூறினேன் ஒரு பெண்ணைப் பற்றி அவள் வசிக்கிறாள் அடுத்த வீட்டில்.

மேலும் இதுப்போன்ற இணைப்புச் சொற்களின் பயன்பாடு பற்றி எதிர்வரும் பாடத்தில் விரிவாகப் பார்ப்போம்.

Interrogative Pronouns – கேள்வி சுட்டுப்பெயர்கள்

இவை கேள்வி கேட்பதற்கு பயன்படுபவைகளாகும்.

Who - யார்
What - என்ன
Where - எங்கே
When - எப்பொழுது
Whom - யாரை
Which - எது
Whoever – யாரெவர்
Whomever - யாரெவரை
Whichever - எதுவாயினும்

உதாரணம்:

Where did you go?
நீ எங்கே போனாய்?

Indefinite Pronouns

ஒரு நபரையோ ஒரு பொருளையோ குறிப்பிட்டு கூறாமல் நிச்சயமற்ற நிலையில் பேசுவதற்கு இச் சுட்டுப்பெயர்கள் பயன்படுகின்றன.

all – எல்லா, முழு
another - இன்னொன்று, இன்னொருவர்
every - எல்லா
any – ஏதாவது ஒன்று
some – சில, கொஞ்சம்
nothing – ஒன்றும் இல்லை (ஒன்றும் இல்லாத நிலை)
several – பல
each – ஒவ்வொரு
many – பலர், பல
few - சில

உதாரணம்:

Each of the members has one vote
ஒவ்வொரு உருப்பினர்களுக்கும் இருக்கிறது ஒரு வாக்கு.

Homework:

இச்சுட்டுப்பெயர்கள் எவ்வாறு, ஏன் பயன்படுத்தப் படுகின்றன என்பது இப்பொழுது உங்களுக்கு தெரிந்திருக்கும். இப்பாடத்தில் அனைத்து சுட்டுப்பெயர்களுக்குமான வாக்கியங்கள் வழங்கப்படவில்லை. ஆனால் ஒவ்வொரு பிரிவின் கீழும் ஒவ்வொரு வாக்கியங்கள் உதாரணமாக வழங்கியுள்ளோம். அவற்றை பின்பற்றி ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அனைத்து சுட்டுப்பெயர்களுக்கும் வாக்கியங்கள் அமைத்து பயிற்சி செய்யுங்கள்.

சரி! பயிற்சிகளைத் தொடருங்கள்.

மீண்டும் அடுத்தப் பாடத்தில் சந்திப்போம்.

இப்பாடம் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் விளக்கங்கள் தேவைப்படின் பின்னூட்டம் இட்டோ அல்லது முகப்பில் காணப்படும் எமது மின்னஞ்சல் ஊடாகவோ தொடர்புகொள்ளலாம்.

நன்றி

அன்புடன்
அருண் | HK Arun
Download As PDF