Showing posts with label ஆங்கில இலக்கணம். Show all posts
Showing posts with label ஆங்கில இலக்கணம். Show all posts

ஆங்கில இணைப்புச் சொற்கள் (Conjunctions)

AANGILAM : Types of Conjunctions in English with Tamil Explanation
ஆங்கிலம்: இணைப்புச் சொற்களின் வகைகள் 
ஆங்கில இணைப்புச்சொற்கள் என்றால் என்ன
?

ஆங்கில இணைப்புச் சொற்கள் என்றால், ஆங்கில பேச்சின் கூறுகளில் உள்ளடங்கும் எட்டுக் கூறுகளில் ஒன்றாகும். இவை சொற்கள் (words), சொற்றொடர்கள் (Phrases), மற்றும் வாக்கியக் கூறுகள் (clauses) போன்றவற்றை இணைக்கப் பயன்படும் சிறிய சொற்கள் மற்றும் சொற்றொடர்கள் ஆகும்வாக்கிய கூறுகளை இணைத்து நீண்ட ஒரு வாக்கியமாக அல்லது வாக்கிய தொடராக பொருளை உணர்த்த இந்த இணைப்புச்சொற்கள் ஆங்கில இலக்கணப் பயன்பாட்டில் மிக முக்கியமானவைகளாகும்.

இணைப்புச்சொற்கள் பயன்படு முறைகள்


இணைப்புச்சொற்கள் எவ்வாறு எத்தனை முறைகளில் பயன்படுகின்றன?
இவை இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட வாக்கிய கூறுகளை இணைக்க; தனித்த ஒற்றைச் சொல், கூட்டுச் சொற்கள், இடமாறி பயன்படும் சொற்கள் என மூன்று முறைகளில் பயன்படுகின்றன.

எடுத்துக்காட்டாக:

தனித்த ஒற்றைச் சொல்:
  • and
  • for
  • because
கூட்டுச் சொற்கள்
  • as long as
  • in order that
  • provided that
இடம் மாறி பயன்படும் சொற்கள்
  • so ... that
  • either ... or
  • not only ... but also

இணைப்புச் சொற்களின் வகைகள்


ஆங்கிலத்தில் எத்தனை வகையான இணைப்புச் சொற்கள் உள்ளன?

ஆங்கிலத்தில் நான்கு வகையான இணைப்புச்சொற்கள் உள்ளன. அவைகளாவன:
  • Coordinating Conjunctions
  • Subordinating Conjunctions
  • Correlative Conjunctions
  • Conjunctive Adverbs

குறிப்பு:

ஆங்கில இணைப்புச் சொற்களின் வகைகளை மூன்றாக மட்டுமே  வகைப்படுத்துவோரும் உளர். இருப்பினும் "Conjunctive Adverbs" களும் வாக்கிய கூறுகளை இணைக்கப் பயன்படுவதால் அவற்றையும் இணைப்புச் சொற்களாகவே பல ஆங்கில இலக்கணவாதிகள் வகைப்படுத்துகின்றனர். எனவே நாமும் இங்கே நான்காகவே வகைப்படுத்தியுள்ளோம் என்பதைக் கருத்தில் கொள்க.

இனி இவ்விணைப்புச் சொற்களின் பயன்பாட்டை ஒவ்வொன்றாக கீழே பார்ப்போம்.

Coordinating Conjunctions (ஒருங்கிணைப்பு இணைப்புச்சொற்கள்)


ஒருங்கிணைப்பு இணைப்புச் சொற்கள், வாக்கியங்களில் ஒரே சமனிடையான "சொற்கள்”, "சொற்றொடர்கள்”, "வாக்கியக்கூறுகள் " போன்றவற்றை ஒருங்கே இணைக்கப் பயன்படும் சிறிய சொற்கள் ஆகும்.

இதனை "ஒருங்கிணைப்புச் சொற்கள்" என சுருக்கமாகவும் கூறலாம்.

அவையாவன:
  • F = For
  • A = And
  • N = Nor
  • B = But
  • O = Or
  • Y = Yet
  • S = So
எடுத்துக்காட்டு வாக்கியங்கள்:

I like bread and butter.
நான் உரொட்டியும் வெண்ணையும் விரும்புகிறேன்.

I like tea, but I don't like coffee.
நான் தேனீர் விரும்புகிறேன், ஆனால் எனக்கு காப்பி விருப்பமில்லை.

How to speak English and how to write in English are two different things.
எப்படி ஆங்கிலம் பேசுவது (என்பதும்) எப்படி ஆங்கிலத்தில் எழுதுவது (என்பதும்) இரண்டு வெவ்வேறு விடயங்கள்.

குறிப்பு: ஆங்கிலத்தில் ஒருங்கிணைப்புச் சொற்கள் 7 மட்டுமே உள்ளன. இவற்றை எளிதாக மனதில் பதித்துக்கொள்வதற்கு இச்சொற்களின் முதலெழுத்துக்களை இணைத்து FANBOYS என ஒரு சுருக்கப்பெயராக (Acronyms) ஆங்கிலேயர் பயன்படுத்துவர். நாமும் இவற்றை அவ்வாறே மனதில் இருத்திக்கொள்ளவோம்.

மேலும் இப்பாடத்தை விரிவாக எதிர்வரும் நாட்களில் பார்ப்போம்.

Subordinating Conjunctions (சார்ந்த இணைப்புச்சொற்கள்)


"சார்ந்த இணைப்புச்சொற்கள்" எப்போதும் முதன்மை வாக்கிய கூற்றையும் (Independent Clause) சார்ந்த வாக்கிய கூற்றையும் (Dependent Clause) இணைக்க பயன்படுபவை ஆகும். ஆங்கிலத்தில் இவை நூற்றுக் கணக்க்கில் உள்ளன.
  • after
  • although
  • as long as
  • as soon as
  • even though
  • before
  • if
  • how
  • since
  • than
  • that
  • when
  • where
  • whether
  • while
  • whenever
எடுத்துக்காட்டு வாக்கியங்கள்:

If I do a job, I will get experience.
நான் ஒரு வேலை செய்தால் எனக்கு கிடைக்கும் அனுபவம்.

I will get experience if I do a job.
எனக்கு கிடைக்கும் அனுபவம் நான் செய்தால் ஒரு வேலை.

Although he is small, he is very strong.
அவன் சிறியவனாக இருந்தப்போதிலும், அவன் மிகவும் வலுவானவன்.

I will be able to buy a car when I get older.
எனக்கு வாங்க முடியுமாக இருக்கும் ஒரு மகிழுந்து நான் வயதானவனாகும் பொழுது.

குறிப்பு: சார்ந்த இணைப்புச்சொற்கள் எப்போதும் சார்ந்த வாக்கிய கூற்றின் (Subordinate Clause) முன்னாலேயே பயன்படும்.

மேலும் விரிவாக இப்பாடத்தை எதிர்வரும் நாட்களில் பார்ப்போம்.

Correlative Conjunctions (ஒப்புமை இணைப்புச்சொற்கள்)


ஒப்புமை இணைப்புச்சொற்கள் இரண்டு சமனிடையான வாக்கியங்களை ஒப்புமையுடன் இணைக்கும் சொற்களாகும். இவ்விணைப்புச் சொற்கள் சோடிகளாகவே பயன்படும்.
  • both ... and
  • so ... as
  • not ... but
  • not only ... but also
  • either ... or
  • neither ... nor
  • whether ... or
எடுத்துக்காட்டு வாக்கியங்கள்:

Neither cats nor dogs are my favorite animals.
பூனைகள் நாய்கள் இரண்டுமே எனது விருப்பு மிருகங்கள் அல்ல.

Today, it is not only warm but also humid.
இன்று சூடாக மட்டுமல்ல ஈரப்பதமாகவும் கூட உள்ளது.

I want both a computer and a iPad.
எனக்கு கணனி மற்றும்  ஐபேட் இரண்டும் வேண்டும்.

Sarmilan is either playing cricket with his friends or studying.
சர்மிலன் இரண்டிலொன்று அவனது நண்பர்களுடன் துடுப்பாட்டம் விளையாடிக்கொண்டிருப்பான் அல்லது படித்துக்கொண்டிருப்பான்.

மேலும் இப்பாடத்தை விரிவாக எதிர்வரும் நாட்களில் பார்ப்போம்.

Conjunctive Adverbs (இணைப்பு வினையெச்சங்கள்)


இணைப்பு வினையெச்சங்கள் இரண்டு முதன்மை வாக்கிய கூறுகளை (Main Clauses) இணைப்பவையாகவே இருக்கும்; அதாவது "ஒருங்கிணைப்புச் சொற்கள்" போன்றேபயன்படும். ஆனாலும் சற்று வேறுபட்டது.

அதாவது தமிழில்  "அதனால்", எப்படியானாலும்", "இதுதொடர்பாக" போன்ற சொற்களைப் பயன்படுத்தி இரண்டு வாக்கியங்களை இணைக்கும் முறைக்கு ஒத்ததாகவே இவை இருக்கும்.
  • accordingly
  • consequently
  • finally
  • furthermore
  • however
  • similarly
  • therefore
எடுத்துக்காட்டு வாக்கியங்கள்.

I wanted to buy a shirt; however, It was too expensive.
எனக்கு ஒரு சட்டை வாங்க வேண்டும்; எனினும், அதன் விலை மிகவும் கூடுதலாக இருந்தது.

David went to market; however, he didn't buy anything.
இடேவிட் சந்தைக்கு சென்றார்; இருப்பினும், அவர் எதனையும் வாங்கவில்லை.

Sarmilan was tired. Therefore, he immediately took a nap when he got home.
சர்மிலன் களைப்பானான். அதனால், அவன் வீட்டிற்கு சென்ற உடன் ஒரு சிறுநித்திரை (கொண்டான்) எடுத்தான்.

குறிப்பு: இனைப்பு வினையெச்சங்கள் என்பவை ஒருவகையில் வினையெச்சங்கள் தான். இருப்பினும் அவை வாக்கிய கூறுகளை இணைக்கப் பயன்படுவதால் "இணைப்பு வினையெச்சங்கள்" என்றழைக்கப்படுகின்றன.

மேலும் விரிவாக இப்பாடத்தை விரைவில் பார்ப்போம்.

கவனிக்கவும் 

நாம் ஆங்கில பாடப் பயிற்சி 01ல் வாக்கியங்கள் எவ்வாறு அமைகின்றன, அவற்றை எவ்வாறு அமைத்து பயிற்சி செய்யவேண்டும் என்பதற்கான எளிதான வழிமுறைகளை வழங்கியிருந்தோம். அப்பாடத்தில் நாம் வழங்கிய வீட்டு பாடப் பயிற்சிகளை முறையாக பயின்ற எவருக்கும் ஆங்கிலத்தில் வாக்கியங்களை அமைப்பதில் எந்த சிக்கலும் இருக்காது என்று நம்புகின்றோம். புதிதாக தளத்திற்கு வந்தோர் ஒரு முறை பார்த்துக்கொள்ளவும். இன்றைய பாடம் இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட வாக்கிய கூறுகளை இணைத்து பேசுவதற்கும் எழுதுவதற்கும் பயன்படும் மிக முக்கியமான ஒன்றாகும். ஆங்கில இலக்கணம் கற்போர் இவற்றை முறையாக விளங்கிக் கற்றுக்கொண்டீர்களானால், சரியாகவும் இலக்கணப் பிழையின்றியும் வாக்கிய கூறுகளை எளிதாக இணைத்து பயன்படுத்தக் கூடியதாக இருக்கும். 

தொடர்புடையப் பாடங்கள்:


இப்பாடம் தொடர்பான ஏதேனும் ஐயங்கள் கேள்விகள் இருந்தால் இப்பாடத்தின் பின்னூட்டத்தின் ஊடாக கேட்கவும். இப்பாடத்துடன் தொடர்பில்லாத கேள்விகளானால் ஆங்கிலம் கேள்வி பதில் பகுதியில் கேட்கவும்.

மீண்டும் அடுத்தப் பாடத்தில் சந்திப்போம்.

நன்றி!

அன்புடன்
ச. தங்கவடிவேல், பிரான்சு (HK Arun)

Facebook | Twitter | Pinterest | Google Plus Download As PDF

ஆங்கில "வாதங்கள்" (Suffix "isms")

நாம் கடந்தப் பாடத்தில் ஆங்கிலப் பின்னொட்டுகளின் அட்டவணையைப் பார்த்தோம். அதில் எடுத்துக்காட்டாக கொடுக்கப்பட்டிருந்த ஒவ்வொரு சொற்கள் தொடர்பிலும், ஒவ்வொரு பாடமாக எதிர்வரும் பாடங்களில் எதிர்பார்க்கலாம் என அறியத்தந்திருந்தேன். அதன்படி இன்றையப் பாடத்தில் "ism" என்ற எழுத்துக்கள் பின்னொட்டாக வரும் 50 சொற்களைப் பார்ப்போம். அத்துடன் இச்சொற்களுக்கான தமிழ் கலைச்சொற்களும் வழங்கப்பட்டுள்ளன. இந்த "ism" எனும் எழுத்துக்கள் பின்னொட்டாக வரும் சொற்கள் ஆங்கிலத்தில் நிறைய உள்ளன. இச்சொற்கள் அநேகமாக பெயர்ச்சொற்களாகவே இருக்கும்.

புதிதாக இந்த ஆங்கிலம் தளத்திற்கு வருகைத்தந்துள்ளோர் தயவுசெய்து முதலாம் பாடத்தில் இருந்து தொடங்கவும்.

உங்களிடம் யாராவது ஆங்கிலத்தில் "isms" சொற்கள் எத்தனை தெரியும் என்றால், ஆகக்குறைந்தது ஒரு 50 சொற்களாவது அறிந்து வைத்துக்கொள்ள வேண்டும் அல்லவா!

அப்படியானால் இவற்றைப் பாடமாக்கிக் கொள்ளுங்கள்.
Download As PDF

ஆங்கிலப் பின்னொட்டுக்கள் (List of Suffixes)

பின்னொட்டு (Suffix) என்பது ஒரு மூலச் சொல் அல்லது வேர் சொல்லின் பின் ஒட்டாக இணைந்து பயன்படும் எழுத்துக்கள் ஆகும். அதனாலேயே "பின்னொட்டு" என்று அழைக்கப்படுகிறது; சிலர் "விகுதி" என்றும் அழைப்பர். இந்த பின்னொட்டுக்கள் தனித்து பயன்படுவதில்லை. இவை குறிப்பாக ஒரு மூலச் சொல்லுடன் இணைந்து, மூலச் சொல்லின் பொருளில் இருந்து மாறுபட்டு வேறொரு பொருளைத் தரும் சொற்களாக பயன்படுவன ஆகும். இவ்வாறான பின்னொட்டுக்கள் ஆங்கிலத்தில் நிறைய உள்ளன. பொதுவாக அதிக புழக்கத்தில் இருக்கும் 120 பின்னொட்டுக்கள் இந்த அட்டவணையில் உற்படுத்தப்பட்டுள்ளன. அவற்றினூடாக பின்னொட்டுக்கள் எவ்வாறு ஒரு மூலச்சொல்லுடன் இணைந்து புதிய சொல்லாக மாறுபடுகின்றன என்பதைக் காணலாம். அத்துடன் ஒரு மூலச் சொல்லின் பொருளில் இருந்து எவ்வாறான பொருள் தரும் சொற்களாக அவை மாற்றமடைகின்றன என்பதையும் உணரலாம்.

இனி அட்டவணையைக் கவனியுங்கள்.

அட்டவணையில் உள்ள பின்னொட்டுகளுடன் தொடர்புடைய
Download As PDF

ஆங்கில காற்புள்ளி (comma)

"Aristophanes of Byzantium" என்பவர் நிறுத்தக்குறியீடுகளை கண்டுப்பிடித்தக் காலத்தில், வாசிப்போர் உரத்தக்குரலில் சத்தமாக வாசிக்கும் போது இடையிடையே மூச்சுவிட்டு விட்டு வாசிப்பதை அவதானித்த அவர், குறிப்பிட்ட நீண்ட வாக்கியங்களில் இடையிடையே நிறுத்தி (மூச்சுவிட்டு) வாசிப்பதற்காக ஒரு குறியீட்டை அறிமுகப்படுத்தினார்.  அது தற்போதைய தோற்றத்தைப் போன்று அல்லாமல் நடுமத்தியில் இடப்படும் ( · ) புள்ளியைப் போன்று இருந்தது. அதுவே அக்காலத்தின் காற்புள்ளியாகும். அதனைத்தவிர அக்காலப்பகுதியில் காற்புள்ளி பயன்படுத்துவதற்கான வேறு எந்த விதிமுறைகளும் இருக்கவில்லை. ஆனால் அன்மைக்காலங்களில், அதாவது அச்சு இயந்திரங்களின் தோற்றத்தின் பின்னரே இதன் முக்கியத்துவம் உணர்ப்பட்டு, இதனை பயன்படுத்துவதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டன.

இந்த காற்புள்ளியை இடாமல் விட்டாலோ, இடம் மாறி இட்டாலோ, ஒரு வாக்கியத்தின் பொருள் முற்றாக மாறிவிடும் என்பதில் மிகக் கவனம் செலுத்த வேண்டும். சில நேரங்களில் முற்றிலும் பிழையான பொருளைத் தந்துவிடும் அபாயமும் உள்ளது. எடுத்துக்காட்டாக கீழுள்ள வாக்கியத்தைப் பாருங்கள்

எடுத்துக்காட்டாக:

"No more freedom."
இனி இல்லை சுதந்திரம்.

"No, more freedom."
இல்லை, அதிகச் சுதந்திரம்.

காற்புள்ளியின் பயன்பாடுகள் 

“காற்புள்ளி” பயன்படுத்தும் விதிமுறைகள் ஒவ்வொரு மொழிக்கும் இடையே சிற்சில மாற்றங்களை கொண்டுள்ளன. ஆங்கிலத்திலும் தமிழிலும் கூட காற்புள்ளி பயன்படுத்துவதில் சிற்சில வேறுப்பாடுகள் உள்ளன. நாம் இங்கே பார்க்கப்போவது ஆங்கில மொழியின் காற்புள்ளி பயன்பாட்டை மட்டுமே ஆகும். இவற்றின் பயன்பாட்டை ஒவ்வொன்றாக இலக்கவரிசைப்படி பார்ப்போம்.

இவற்றை எளிதாக விளக்கிக் கற்பிக்கும் வகையில், ஒவ்வொருவரும் பல்வேறு பிரிவுகளாகப் பிரித்து விளக்கங்களைத் தருகின்றனர். நாம் இங்கே 19 பிரிவுகளாகப் பிரித்து இவற்றைப் பார்ப்போம்.

1. ஒரு வாக்கியத்தில் பயன்படும் பல்வேறு பொருற்களை வரிசையாக எழுதும் பொழுது, அவை ஒவ்வொன்றினையும் வேறுப்படுத்திக் காட்ட காற்புள்ளி இடப்பட வேண்டும்.

எடுத்துக்காட்டாக:

Apple, orange, mango, pineapple, grapes, jumbo, pears, figs
Tiger, deer, jaguar, horse, zebra, giraffe, donkey, kangaroo

2. ஒரு வாக்கியத்தில் மூன்று அல்லது அதற்கு அதிகமான, கூறுகள் அல்லது பொருற்கள் தனித்தனி சொற்களாகவோ அல்லது கூட்டுச்சொற்களாகவோ இருப்பின், அவற்றை வேறுப்படுத்தி காட்டுவதற்கு காற்புள்ளி இடப்படவேண்டும். (Separate the elements in a list of three or more items.)  அதேவேளை கடைசி இரண்டு சொற்களின் இடையே காற்புள்ளிக்கு பதிலாக “and” பயன்படும்.

My favourite actors are Kamalahasan, Vikaram, Surya, Raguwaran and Prakashraj.
This fruit basket contained apples, grapes and oranges.
Sarmilan is wearing blue jeans, Nike shoes, light green shirt and dark blue cap.

கவனிக்கவும்:

கடைசியாக வரும் சொற்றொடர் நீண்டச் சொற்றொடராக இருப்பின், அவற்றை வாசிப்போர் எளிதாக வாசிக்கும் வண்ணம் "and" க்கு முன்னால் காற்புள்ளி இடலாம்.

எடுத்துக்காட்டாக:

We need to buy books, magazines, video cassettes, and other learning materials for our library.

3. ஒரு வாக்கியத்தில் மூன்றுக்கும் மேற்பட்ட பெயரெச்சங்கள் பயன்படும் போது காற்புள்ளி இட வேண்டும். (Between three or more adjectives.)

I like old, brown, wooden chair.
Sarmilan is tall, small, skinny and handsome.
He brought an old, blue, Volkswagen car.

4. ஒரு வாக்கியத்தில் மூன்றுக்கும் மேற்பட்ட வினையெச்சங்கள் பயன்படும் போதும் காற்புள்ளி பயன்படும். (Between three or more adverbs.)

Sarmilan ran quickly, quietly and effortlessly.

5. ஒரு வாக்கியத்தில் இரண்டு பெயரெச்சங்கள் மட்டும் பயன்படும் போது காற்புள்ளி இடாமல், இடையே "and" இட்டு இடலாம். இருப்பினும் "and" க்கு பதிலாக காற்புள்ளி இடப்படும் இடங்களும் உள்ளன. (For two adjectives.)

It was a short, simple film.
It was a short and simple film. (இவ்வாறும் எழுதலாம்.)

6. மூன்று இலக்கங்களுக்கு மேற்பட்ட எண்ணிக்கையை இலக்கங்களில் எழுதும் போது காற்புள்ளி இடப்பட வேண்டும்.(To separate the three digits of numbers over 999.) அத்துடன் எண்ணிக்கையில் அதிகமானத் தொகையை மூம்மூன்று இலக்கங்களாகப் பிரித்துக்காட்டவும் காற்புள்ளி பயன்படும்.

எடுத்துக்காட்டாக:

5,527
3,983,849
89,883,000

கவனிக்கவும்:

இவ்வாறு இலக்கங்களின் இடையே காற்புள்ளி இடப்படும் போது, காற்புள்ளியை அடுத்து இடைவெளி விடப்படுவதில்லை என்பதை நினைவில் வைக்கவும்.

$4.49
HK$8,550.00

தசம எண்களான சதங்களை வேறுப்படுத்திக்காட்ட காற்புள்ளி இடப்படுவதில்லை; புள்ளி இடப்பட வேண்டும்.

7. விலாசம் எழுதும் போது காற்புள்ளி பயன்படும்.

I am originally from Jaffna, Sri Lanka.
His address is 56 Larch Street, London, NW3 2LK, England.
Chung King Mansion, 36-44 Nathan road, Tsim Sha Tsui, Kowloon, Hong Kong

8. திகதி இடும் போதும் காற்புள்ளி பயன்படும். (இம்முறைமை அநேகமாக அமெரிக்க ஆங்கிலத்திலேயே காணப்படுகின்றது.)

June 21, 2010
Thursday, July 22, 2010
My father was born on November 19, 1942.

கவனிக்கவும்:

திகதி, மாதம், ஆண்டு இவற்றில் ஒன்றைத் தவிர்த்து மிகுதி இரண்டை மட்டுமே இடுவதாயின் காற்புள்ளி இடாதீர்கள். (Don't use a comma if only two elements of the date.)

எடுத்துக்காட்டாக:

My father was born in November 1942.

9. தொழில் தகமைகளுடன் ஒரு நபரின் பெயரை எழுதும் போது, பெயருக்கு அடுத்து காற்புள்ளி இட வேண்டும். தொழில் தகமைகளுக்கான சுருக்கெழுத்துக்களுக்கு இடையேயும் காற்புள்ளி இடப்பட வேண்டும்.

John Kennedy, Ph.D
Saththivel Nirmal, Professor of English
Kanagaraththinam Veluppillai, B.A Hons., Dip.Lib.Sc., Ph.D

10. நேரடி உரையாடல்களை விவரித்து எழுதுவதற்கு, நேர்கூற்று (Direct speech) வாக்கியங்களின் முன்னால் அல்லது பின்னால் காற்புள்ளி பயன்படும்.

She said, “I love you.”
“I love you,” she said.
"I don't think so," she said, "but I can try."

அதேவேளை அயற்கூற்று (Indirect speech) வாக்கியங்களாக எழுதுவதாயின், காற்புள்ளி இடத்தேவையில்லை.

எடுத்துக்காட்டாக:

She told him that she loved him.

11. ஆங்கிலத்தில் நாகரிகமான மரியாதையுடனான வேண்டுகோள் மற்றும் கேள்விகளின் இறுதியில் "please" க்கு முன்பாக காற்புள்ளி பயன்படும்.

Can you help me, please?
Could you send me a email, please?
Send me a email, please.

கவனிக்கவும்:

வாக்கியங்களின் ஆரம்பத்திலேயே "Please" பயன்படுமாயின் காற்புள்ளி பயன்படுத்துவதில்லை.

எடுத்துக்காட்டாக:

Please send me a email.

12. ஆங்கிலத்தில் ஒரு கூற்றைக் கூறிவிட்டு, அது அப்படித்தானே, அது அப்படியில்லைதானே, என கூற்றுடன் இணைத்து வினவும் வினாக்களை "கூற்றிணை வினாக்கள்" (Tag Questions) எனப்படும். அவ்வாறான கூற்றிணை வினாக்களில் காற்புள்ளி பயன்படும்.

You like me, don't you?
You don't love me, do you?
Muththaiya Muralidaran is a Sri Lankan cricketer, isn't he?

13. ஒரு கேள்விக்கான பதிலளித்தலின் போது "Yes, No, Sorry" போன்ற சொற்களை அடுத்து காற்புள்ளி பயன்படும்.

Yes, I can help you.
No, I didn't.
Sorry, I can't.

14. ஒரு கடித்தத்தின் இறுதி பகுதியில் "Sincerely" போன்றச் சொற்களுடன் காற்புள்ளி இடப்படும் வழக்கு சிலரிடம் உள்ளது. ஆனால் அநேகமானோர் இடுவதில்லை. இது பயன்படுத்துவோரின் விருப்பைப் பொருத்ததாகும்.

Sincerely,
Sincerely

15. ஒரு கூட்டு வாக்கியத்தின் இரண்டு தனித்தனி வாக்கியங்களை அல்லது சொற்றொடர்களை இணைக்கின்ற இடைச்சொற்களின் (for, and, nor, but, or, yet, so) முன்னால் காற்புள்ளி பயன்படும். (before a coordinating conjunction to join two independent clauses.)

I want to work as an interpreter, so I am studying English grammar.
Sarmilan wanted to buy a new computer, but he didn't have any money.
The teacher explained his question, yet the student still didn't seem to understand.

கவனிக்கவும்:

கூட்டு வாக்கியத்தின் இரண்டு பகுதிகள் அல்லது சொற்றொடர்கள் ஒரே அளவுடையவைகளாக அல்லது சிறிய வாக்கியங்களாக இருப்பின், காற்புள்ளி இடாமலும் எழுதலாம்.

எடுத்துக்காட்டாக:

Kavitha is kind so she helps people.
Kavitha is kind, so she helps people.

16. ஒன்றை அல்லது ஒருவரை குறித்துக்காட்டி அவரின் அல்லது அதனது தகமை, தன்மை போன்றவற்றை விவரித்துக் கூறுவதற்கு இடையிடையே காற்புள்ளிகள் பயன்படும்.

Sarmilan, the most intelligent student in the class, is always late for school.
The Peruvudaiyar Temple, one of the wonders of the ancient world, is in Tamil Nadu.
Bill Gates, CEO of Microsoft, was the developer of the operating system known as Windows.

17. ஒரு நீண்ட வாக்கியத்தின் முகவுரைப் பகுதியை பிரித்துக் காட்டுவதற்கு, முதல் பகுதிக்கு முன்னால் காற்புள்ளி பயன்படும். (To separate introductory elements.)

As the year came to end, I realised the days were getting shorter.
Rushing to catch the bus, she forgot to take her money purse.
Having mastered the use of the comma, it is important to make it work for you in your writing.

கவனிக்கவும்:

வாக்கியத்தின் முகவுரைப் பகுதி மிகச் சிறியதாக அல்லது ஒற்றைச் சொல்லாக இருந்தால் காற்புள்ளி இடுவதை தவிர்க்கலாம்.

எடுத்துக்காட்டாக:

Inside, the house was a total mess.
Shortly, we will be leaving for the playground.

Inside the house was a total mess.
Shortly we will be leaving for the playground.

18. வாக்கிய வினையெச்சங்கள் வாக்கியங்களில் பயன்படும் போது காற்புள்ளிகள் பயன்படும். (வாக்கிய வினையெச்சங்கள் ஒரு வாக்கியத்தின் முழுப் பொருளையே தீர்மாணிப்பவைகளாகும். (obviously, however, unfortunately, in face, surprisingly))

Obviously, I can't do everything.
However, I didn't see him again.
Sadly, the whole building was to crumble.

19. நிபந்தனை வாக்கியங்களின் உட்பிரிவில், வினை முதல் பகுதியாக வந்தால் காற்புள்ளி பயன்படும்.

If I do a job, I will get experience.
If he invited her, she really should go.
If she had time, she might come to the party.

கவனிக்கவும்:

வினைப்பகுதி மாறி வந்தால் கற்புள்ளி பயன்பாடாது என்பதை நினைவில் கொள்ளவும்.

எடுத்துக்காட்டாக:

I will get experience if I do a job.
She really should go if he invited her.
She might come to the party if she had time.

இன்றைய பாடம் சற்று நீளமான பாடமாகும். இருப்பினும் இவற்றின் பயன்பாடுகளை அறிந்துக்கொள்ளல் மிக முக்கியமானது. இவற்றின் பயன்பாட்டை சரியாக விளங்கிக்கொண்டால், எளிதாகவும் சரியாகவும் காற்புள்ளியை நாம் பயன்படுத்தலாம். இவை ஆங்கில இலக்கண விதிமுறைகளுக்கும் அவசியமானதாகும்.

தொடர்புடைய இடுகைகள்:



ஏனைய நிறுத்தற்குறிகள் தொடர்பான பதிவுகள் தொடர்ந்து வரும்.

நன்றி!

அன்புடன்
அருண் HK Arun Download As PDF

வினையெச்சங்களின் வகை (Types Of Adverbs)

வினெயெச்சங்கள் என்றால் என்ன? வினையெச்சங்கள் என்றால் ஆங்கிலப் பேச்சின் கூறுகளில் ஒன்று என்பதை நாம் ஏற்கெனவே கற்றுள்ளோம். இவை முக்கியமாக ஒரு வினையின் அல்லது வினைச்சொல்லின் தன்மையை விவரித்துக் கூற பயன்படும் சொற்கள் ஆகும். இவற்றை வினையெச்சங்கள், வினையடைகள், வினையுரிச் சொற்கள் என பல்வேறு பெயர்களில் தமிழில் அழைக்கப்படுகின்றது. ஆங்கிலத்தில் "Adverbs" என்றழைப்பர்.

ஆங்கிலத்தில் இவற்றை ஐந்து பிரிவுகளாக வகை படுத்தப்பட்டுள்ளன. அவற்றையே "வினையெச்சங்களின் வகைகள்" என்றழைக்கப்படுகின்றன.

வினையெச்சங்களின் வகைகள் (Types of adverbs)

Adverbs of manner - மாதிரி வினையெச்சங்கள்
Adverbs of place - இட வினையெச்சங்கள்
Adverbs of time - கால வினையெச்சங்கள்
Adverbs of frequency - நடப்புத்தன்மை வினையெச்சங்கள்
Adverbs of degree - அளவு வினையெச்சங்கள்

இனி இவ்வினையெச்சங்கள் பயன்படும் விதங்களைப் பார்ப்போம்.

Adverbs of manner - மாதிரி வினையெச்சங்கள்

மாதிரி வினையெச்சங்கள் - ஒரு வினை அல்லது செயல் என்ன மாதிரி அல்லது எப்படி நடைப்பெறுகின்றது என விவரிக்கின்றன.

Sarmilan runs quickly.
சர்மிலன் ஓடுகிறான் சீக்கிரமாக.

Sarmilan runs firstly.
சர்மிலன் ஓடுகிறான் முதலாவதாக.

Sarmilan runs lastly.
சர்மிலன் ஓடுகிறான் கடைசியாக.

Sarmilan runs slowly.
சர்மிலன் ஓடுகிறான் மெதுவாக.

He works well.
அவன் வேலை செய்கிறான் நன்றாக.

கவனிக்கவும்:
மாதிரி வினையெச்சங்கள் - சாதாரணமாக ஒரு வாக்கியத்தின் நேர் செயப்படுபொருளை (direct object) அடுத்து பயன்படும். அதேவேளை ஒரு வாக்கியத்தின் நேர் செயப்படுபொருள் பயன்படாத போது வினையை அடுத்து பயன்படும். (Adverbs of manner - Usually come after the object. If there is no direct object, after the verb.)

எடுத்துக்காட்டு:

Sarmilan drove the car carefully. (the car - object)
சர்மிலன் ஓட்டினான் மகிழுந்தை கவனமாக.

Sarmilan ran carefully.
சர்மிலன் ஓடினான் கவனமாக.

குறிப்பு:
மாதிரி வினையெச்சங்கள்; அதிகமானவை "ly" பின்னொட்டை கொண்டவைகளாக இருக்கும். இவற்றை ஒழுங்கமைவு வினையெச்சங்கள் என்றழைக்கப்படும். ஒழுங்கமையா வினையெச்சங்களும் உள்ளன.

Adverbs of place - இட வினையெச்சங்கள்

இட வினையெச்சங்கள் - ஒரு வினை அல்லது செயல் "எங்கே" என்பதை விவரிக்கின்றன.

I saw Sarmilan there.
நான் பார்த்தேன் சர்மிலனை அங்கே.

Sarmilan was sitting here.
சர்மிலன் அமர்ந்துக்கொண்டிருந்தான் இங்கே.

Sarmilan stayed behind me.
சர்மிலன் இருந்தான் எனது பின்னால்.

We looked everywhere.
நாங்கள் பார்த்தோம் எல்லாவிடங்களிலும்.

Did you see his pass port anywhere?
நீ பார்த்தாயா அவனது கடவுச்சீட்டை எங்கேயாவது?

I'm sure he lost it somewhere.
நான் நிச்சயிக்கிறேன் அவன் தொலைத்துவிட்டான் அதனை எங்கேயோ.

இட வினையெச்சங்கள் சாதாரணமாக செயப்படுபொருளை அடுத்தே பயன்படும். செயப்படுபொருள் பயன்படாத போது வினையை அடுத்து பயன்படும். (Adverbs of place - Usually come after the object, otherwise after the verb.)

Adverbs of time - கால வினையெச்சங்கள்

கால வினையெச்சங்கள் - ஒரு வினை அல்லது செயல் "எப்பொழுது" என்பதை விவரிக்கின்றன.

கால வினையெச்சங்கள் சாதாரணமாக ஒரு வாக்கியத்தின் ஆரம்பத்தில் அல்லது இறுதியில் பயன்படுபவைகளாகும். (Adverbs of time - Usually come either at the begining of the sentences or at the end.) (சில விதிவிலக்கானவைகள்)

Now we may study adverbs.
இப்பொழுது நாம் கற்கலாம் வினையெச்சங்கள்.

I read that book before.
நான் வாசித்தேன் அந்த நூலை முன்னரே.

I haven’t started preparation for the exams yet.
நான் ஆரம்பித்திருக்கவில்லை பரிட்சைக்கான தயார்படுத்தலை இன்னும்.

I'm going to tidy my room tomorrow.
நான் சுத்தமாக்கப் போகின்றேன் எனது அறையை நாளை.

She is still waiting for you.
அவள் இன்னும் காத்துக்கொண்டிருக்கின்றாள் உனக்காக.

குறிப்பு:

1. "yet" எப்பொழுதும் வாக்கியங்களின் இறுதியில் பயன்படும்.
2. "still" அநேகமாக ஒரு வாக்கியத்தின் வினைக்கு முன்னால் பயன்படும்.

Adverbs of frequency - நடப்புத்தன்மை வினையெச்சங்கள்

நடப்புத்தன்மை வினையெச்சங்கள் - ஒரு வினை அல்லது செயல் எப்படி அடிக்கடி நடந்தது, நடக்கிறது, நடக்கும் போன்ற தன்மையை விவரிக்கின்றன. அதாவது ஒரு செயல் எத்தனை முறை நடக்கின்றது என்பதை விவரிக்கின்றன.(Adverbs of Frequency answer the question "How often?" or "How frequently?" They tell us how often somebody does something.)

I will always love you.
நான் எப்பொழுதும் காதலிப்பேன் உன்னை.

I usually visit to Aangilam Blog
நான் சாதாரணமாக விஜயம் செய்கிறேன் ஆங்கிலம் வலைப்பதிவிற்கு.

I frequently watch the news before dinner.
நான் அடிக்கடி (தொடர்ந்து) பார்க்கிறேன் செய்திகள் இராச்சாப்பாட்டிற்கு முன்.

I often do my homework in my home.
நான் அடிக்கடி செய்கிறேன் எனது வீட்டுப்பாடங்களை எனது வீட்டில்.

I sometimes speak English.
நான் சிலநேரங்களில் பேசுகிறேன் ஆங்கிலம்.

I seldom go to the theatre.
நான் எப்பொழுதாவது போகிறேன் திரையரங்கிற்கு.

I never had any trouble with my old bike.
எனக்கு எப்பொழுதுமே ஏற்பட்டதில்லை எந்த இடையூறும் எனது பழைய உந்துருளியில்.

இப்பகுதியுடன் தொடர்புடைய ஒரு பாடம் Frequency Adverbs இங்கே இடப்பட்டுள்ளது.

Adverbs of degree - அளவு வினையெச்சங்கள்

அளவு வினையெச்சங்கள் - ஒன்றின் தரத்தை அளவை விவரிக்கப் பயன்படுகின்றன.

இவை சாதாரணமாக ஒரு வினையை விவரிக்கப் பயன்படுகின்றன. அத்துடன் இவை இன்னுமொரு வினையெச்சத்தை விவரிக்கும் வினையெச்சமாகவும், பெயரெச்சத்தை விவரிக்கவும் வினையெச்சமாகவும் கூடப் பயன்படும். (Adverbs of degree - modify an adverb or an adjective.)

They enjoyed the film immensely.
அவர்கள் அளவுக்கதிமாக மகிழ்ந்தார்கள் திரைப்படத்தைப் பார்த்து. (இவ்வாக்கியத்தின் அவர்கள் திரைப்படத்தைப் பார்த்து எந்தளவிற்கு (அளவுக்கதிமாக) மகிழ்ந்தார்கள் என்று விவரிக்கப்படுகிறது.)

He is a terribly good cricket player.
அவர் ஒரு பயங்கரமான நல்ல கிரிக்கெட் விளையாட்டு வீரர். (இவ்வாக்கியத்தில், அவர் எப்படியான தரம் வாய்ந்த விளையாட்டு வீரர் (பயங்கரமான நல்ல) என விவரிக்கப்படுகிறது.)

The hall is almost full.
இம்மண்டபம் ஏறக்குறைய நிரம்பியிருக்கிறது. (இவ்வாக்கியத்தில் மண்டபம் எவ்வளவு நிரம்பியிருக்கிறது என்பதை (ஏறக்குறைய) விவரிக்கப்படுகிறது.)

The man drove really badly.
அம்மனிதன் ஓட்டினான் மிகவும் மோசமாக. (இவ்வாக்கியத்தில் அம்மனிதன் எவ்வளவு மோசமாக (உண்மையில் மோசமாக) ஓட்டினான் என்பதைக் விவரிக்கப்படுகின்றது.)

He drives incredibly slowly.
அவன் நம்பமுடியாதளவில் மெதுவாக ஓட்டுகிறான். (இவ்வாக்கியத்தில் அவன் எவ்வளவு (நம்பமுடியாத அளவிற்கு மெதுவாக) ஓட்டுகிறான் என்பதை விவரிக்கப்படுகின்றது.)

வினையெச்சங்களை கற்றல்

ஆங்கில மொழியில் வாக்கிய அமைப்புகளை; எங்கே, எப்படி, எந்தளவு, என்ன மாதிரி, எந்தளவு என விவரித்து சுவைப்பட எழுதவும் பேசவும் வினையெச்சங்களின் பயன்பாட்டை அறிந்து வைத்துக்கொள்ளல் அவசியம்.

எளிதாக வினையெச்சங்களை கற்பதற்கு அவற்றை இரண்டு பிரிவாக பிரித்து பயிற்சி செய்யலாம்.

1. Regular Adverbs -ஒழுங்கமை வினையெச்சங்கள்
2. Irregular Adverbs - ஒழுங்கமையா வினையெச்சங்கள்

ஒழுங்கமை வினையெச்சங்களின் அட்டவணை  (தமிழ் விளக்கத்துடன்) எதிர்வரும் பாடங்களில் வழங்கப்படும்.

அத்துடன் இப்பாடத்துடன் தொடர்புடையை "வினையெச்சம் பயன்படும் விதங்கள்" பாடத்தையும் விரைவில் பார்ப்போம்.

அதுவரை  இப்பாடப் பயிற்சிகளைத் தொடருங்கள்.

தொடர்புடையப் பாடங்கள்:

மீண்டும் அடுத்தப் பாடத்தில் சந்திப்போம்.

நன்றி

அன்புடன்
அருண் HK Arun
Download As PDF

நிறுத்தக் குறியீடுகள் (Punctuation Marks)

இங்கே இணைக்கப் பட்டிருக்கும் நிழல் படத்தின் ஓலைச் சுவடிகளில் என்ன எழுதப் பட்டிருக்கின்றது என்பதை உங்களால் வாசித்து அறிய முடியுமா?

"நிச்சயம் முடியாது" என்பதுதான் பதிலாக இருக்க முடியும். (நீங்கள் ஒரு பழந்தமிழ் மொழி ஆய்வாளராக இருந்தால் சிலவேளை சாத்தியமாகலாம்.)

ஆம்! செம்மொழியாகிய எம்மொழி சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை இப்படித்தான் எழுதப்பட்டுள்ளது.

அதாவது ஒரு வாக்கியம் வினா வாக்கியமா அல்லது வியப்பு வாக்கியமா என்பதையெல்லாம் வாசித்து உணர்ந்துக் கொள்வதற்கான கேள்விக்குறி, வியப்புக்குறி போன்றவை எம்மொழியில் இருக்கவில்லை. வாக்கியத்தின் இடையே பயன்படும் காற்புள்ளி, அரைப்புள்ளி, முக்காற்புள்ளி, முற்றுப்புள்ளி, மேற்கோள் குறிகள் போன்றனவும் இருக்கவில்லை. ஆக இன்று நாம் பயன்படுத்தும் நிறுத்தக் குறியீடுகளே எமது மொழியில் இருக்கவில்லை.

இன்னும் சொல்வதானால் சொற்களின் இடையே இடைவெளியிட்டு எழுதும் வழக்கும் எம்மொழியில் இருந்ததில்லை.

ஆனால் இன்று இவை எல்லாமே எமது பயன்பாட்டில் உள்ளன. இவை எப்படி எமது பயன்பாட்டிற்கு வந்தன என்றால், ஆங்கில மொழியின் ஊடாக எமக்கு கிட்டியவை ஆகும். இன்று நாம் மட்டுமன்றி உலகில் அனைத்து மொழியினரும் இவற்றின் பயன் உணர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்.

நிறுத்தக் குறியீடுகள் ( . , ; ; ' ? " " ! ' ' - _ / \ & # * ( ) [ ] { } < > ) என்பன; நாம் பேசும் போது எமது பேச்சில் வெளிப்படுத்தும் உணர்வுகளை, எழுத்தில் எழுதி உணர்த்தவும், எழுதியவற்றை வாசிப்போர் உணர்ந்து வாசிக்கவும் உதவும் இன்றியமையாத குறியீட்டு அடையாளங்கள் ஆகும். அத்துடன் இவை ஒவ்வொரு வாக்கியத்தையும் தனித்தனியே பிரித்து வாசித்திடவும், வாக்கியத்தின் உற்பிரிவுகளை எளிதாக உணர்த்திடவும், வியப்பு, வினா போன்ற உணர்வுகளை உணர்த்திடவும் உதவுகின்றன. அதாவது நாம் பேசும் பொழுது நம் குரலை சில இடங்களில்உயர்த்தியும், தாழ்த்தியும், இடையிடையே நிதானித்தும், நிறுத்தியும் கேட்போருக்கு விளங்கும் வகையில் பேசுவோம் அல்லவா! அதனை தான் இந்த நிறுத்தக்குறியீடுகள் எழுத்து வடிவில் செய்கின்றன.

இந்த நிறுத்தக் குறியீடுகளை சரியாகப் பயன்படுத்தாது விட்டால் அவை; "உப்பில்லா பண்டம் குப்பையிலே" என்பது போல் ஆகிவிடும். சிலவேளைகளில் முற்றிலும் தவறான பொருளை தந்துவிடும் அபாயமும் உள்ளது. எனவே நிறுத்தக் குறியீடுகளின் பயன்பாட்டை சரியாக அறிந்து பயன்படுத்தல் மிகவும் முக்கியமானது. எழுதுவோருக்கு மட்டுமல்ல, எழுதியவற்றை வாசிப்போரும் இவற்றின் பயன்பாட்டை சரியாக அறிந்திராவிட்டால், சரியாக வாசிப்பது என்பதும் சாத்தியம் இல்லை எனலாம்.

நிறுத்தக் குறியீடுகளின் வரலாற்றை இங்கே பார்க்கலாம்.

இனி இந்த நிறுத்தக் குறியீடுகளின் வகைகளின் பட்டியலைக் கீழே பார்ப்போம்.

Summary of Punctuation Mark

Punctuation Marksநிறுத்தக் குறியீடுகள்Symbols
Full stop/Periodமுற்றுப்புள்ளிaangilam.blogspot.
Colonமுக்காற்புள்ளி:
Semicolonஅரைப்புள்ளி;
Commaகாற்புள்ளி,
Apostropheaangilam.blogஉடைமைக்குறி'
Hyphenஇடைக்கோடு-
Dash (Long hyphen)இடைக்கோடு-
Underscoreகிடைக்கோடு_
Underlineஅடிக்கோடுஆங்கிலம்
Question Markகேள்விக்குறி?
Exclamation Markவியப்புக்குறி!
Forward slashமுன்சாய்கோடு/
Backslashபின்சாய்கோடு\
Double quotation marksஇரட்டைமேற்கோள் குறிகள்" "
Single quotation marksஒற்றை மேற்கோள் குறிகள்' '
Pound signநிறை நிறுத்தக்குறி#
Ampersand/andஇணைப்புக்குறி/உம்மைக்குறி&
Asteriskநட்சத்திரக்குறி*
Ellipsisதொக்கிக்குறி. . .
Bracketsஅடைப்புக்குறிகள்( ) { } [ ] < >

கவனிக்கவும்:

"நிறுத்தக்குறியீடுகள்" உலகில் எழுத்து வடிவில் பயன்படும் அனைத்து மொழிகளிலும் பயன்படுகின்றன என்றாலும்; இவற்றின் பயன்பாடு சில மொழிகளிடையே சிற்சில வேறுப்பாடுகளையும் கொண்டுள்ளன. வேறுப்பட்ட நிறுத்தக் குறியீட்டு அடையாளங்களை பயன்படுத்தும் மொழிகளும் உள்ளன.

நாம் இங்கே பார்க்கப் போவது ஆங்கில நிறுத்தக்குறியீடுகளின் பயன்பாடுகளை மட்டுமே ஆகும். தமிழிலும் ஆங்கிலத்திலும் நிறுத்தக்குறியீடுகளின் பயன்பாடு ஒரே மாதிரியானதாக காணப்பட்ட போதும், சில இடங்களில் சிற்சில வேறுப்பாடுகளும் உள்ளன. அவற்றை குறிப்பிட்ட பாடங்களில் பார்ப்போம்.

இப்பதிவில் நிறுத்தக் குறியீடுகள் பற்றிய விளக்கம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை எதிர்வரும் பாடங்களில் ஒவ்வொன்றாக விரிவாகப் பார்ப்போம்.

ஆங்கில நிறுத்தக் குறீயீடுகள் வரலாறு

நன்றி

அன்புடன்
அருண் HK Arun Download As PDF

ஆங்கிலம் செயப்பாட்டுவினை (Passive Voice)

உலகத் தமிழ் உறவுகள் அனைவருக்கும் 2010 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இன்று நாம் செயப்பாட்டுவினை (Passive Voice) வாக்கிய அமைப்புக்களின் பயன்பாட்டைப் பார்ப்போம்.

சாதாரண செயல்வினை வாக்கியங்களில், எழுவாய் (Subject) எப்பொழுதும் வாக்கியத்தின் ஆரம்பத்திலேயே வரும். ஆனால் செயப்பாட்டுவினை வாக்கியங்களில் அவ்வாறு அல்லாமல் செயப்படுபொருளே (Object) வாக்கியத்தின் ஆரம்பத்தில் தோன்றும். அதேவேளை வாக்கியத்தின் பிரதான வினைசொல் Past Participle சொற்களாகவே இருக்கும்.

எடுத்துக்காட்டாக:

Sarmilan is doing a job.
சர்மிலன் செய்துக்கொண்டிருக்கின்றான் ஒரு வேலை.

(The) Job is done by Sarmilan.
வேலையை செய்யப்படுகிறது சர்மிலனால்.
(சர்மிலனால் வேலை செய்யப்படுகிறது.)

சரி! இந்த செயப்பாட்டுவினை வாக்கியங்களை எளிதாக கற்பதற்கு; அவற்றையும் ஒரு கிரமர் பெட்டன் (Grammar Patterns) ஆக வடிவமைத்து பயிற்சி செய்வோம்.

உச்சரிப்பு பயிற்சி பெறவிரும்புவோர் ஒலி கோப்பினை சொடுக்கி பயிற்சி பெறலாம்.

1. It is done.
இதை செய்யப்படுகிறது.

2. It is being done.
இதை செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறது.

3. It was done.
இதை செய்யப்பட்டது.

4. It was being done.
இதை செய்யப்பட்டுக்கொண்டிருந்தது.

5. It will be done.
இதை செய்யப்படும்.

6. It will be being done.
இதை செய்யப்பட்டுக்கொண்டிருக்கும்.

7. It would be done.
இதை செய்யப்பட்டிருக்கும்.

8. It would be being done.
இதை செய்யப்பட்டுக்கொண்டிருக்கும்.

9. It is not done.
இதை செய்யப்படுகிறதில்லை.

10. It wasn’t done. (was + not)
இதை செய்யப்படவில்லை

11. It won't be done. (will + not)
இதை செய்யப்பட மாட்டாது.

12. It has been done.
இதை (சில காலமாக/ சற்று முன்பிலிருந்து) செய்யப்படுகிறது.

13. It has been being done.
இதை (சில காலமாக/ சற்று முன்பிலிருந்து) செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றது.

14. It had been done.
இதை (அக்காலத்திலிருந்து/ அன்றுமுதல்) செய்யப்பட்டது.

15. It had been being done.
இதை (அக்காலத்திலிருந்து/ அன்றுமுதல்) செய்யப்பட்டுக்கொண்டிருந்தது.

16. It will have been done.
இதை (ஒரு குறிப்பிட்ட காலம் வரை) செய்யப்படும்.

17. It will have been being done.
இதை (ஒரு குறிப்பிட்ட காலம் வரை) செய்யப்பட்டுக்கொண்டிருக்கும்.

18. It is to be done.
இதை செய்ய நிச்சயிக்கப்பட்டிருக்கிறது.

19. It was to be done.
இதை செய்ய நிச்சயிக்கப்பட்டது.

20. It is going to be done.
இதை செய்யப்படப் போகின்றது.

21. It was going to be done.
இதை செய்யப்படப் போனது.

22. It can be done.
இதை செய்ய முடியும்.

23. It can't be done.
இதை செய்ய முடியாது.

24. It could be done.
இதை செய்ய முடிந்தது.

25. It couldn't be done.
இதை செய்ய முடியவில்லை.

26. It must be done.
இதை (நிச்சயமாக) செய்யப்பட வேண்டும்.

27. It must not be done.
இதை (நிச்சயமாக) செய்யப்பட கூடாது.

28. It should be done.
இதை செய்யப்படவே வேண்டும்.

29. It shouldn’t be done.
இதை செய்யப்படவே கூடாது.

30. It ought to be done.
இதை எப்படியும் செய்யப்படவே வேண்டும்.

31. It has to be done.
இதை செய்யப்பட வேண்டும்.

32. It doesn't have to be done.
இதை செய்யப்படவேண்டிய அவசியமில்லை.

33. It had to be done.
இதை செய்யப்படவேண்டி ஏற்பட்டது/இருக்கும்.

34. It didn't have to be done.
இதை செய்யப்படவேண்டி ஏற்படவில்லை/இருக்கவில்லை.

35. It will have to be done.
இதை செய்யப்படவேண்டி ஏற்படும்/இருக்கும்.

36. It won’t have to be done.
இதை செய்யப்பட வேண்டி ஏற்படாது/இருக்காது

37. It need be done.
இதை செய்வது அவசியம்.

38. It needn't be done.
இதை செய்யவேண்டிய அவசியமில்லை.

39. It may be done.
இதை செய்யப்படலாம்.

40. It may have been done.
இதை செய்யப்பட்டிருக்கலாம்.

41. It must have been done.
இதை நிச்சயமாக செய்யப்பட்டிருக்க வேண்டும்.

42. It would have been done.
இதை செய்யப்பட்டிருக்க வேண்டும்.

43. It wouldn't have been done.
இதை செய்யப்பட்டிருக்காது.

44. It could have been done.
இதை செய்திருக்க இருந்தது. (ஆனால் செய்யவில்லை)

45. It should have been done.
இதை செய்திருக்கவே இருந்தது. (ஆனால் செய்யவில்லை)

46. It shouldn't have been done.
இதை செய்யாமலிருக்கவே இருந்தது. (அநியாயம் செய்தது)

47. It ought to have been done.
இதை எப்படியும் செய்திருக்கவே இருந்தது. (ஆனால் செய்யவில்லை)

செயப்பாட்டுவினை கற்கவேண்டியதன் முக்கியத்துவம்
-------------------------------------------------------------------------------------
1. ஆங்கில பத்திரிகைகளை இலகுவாக வாசித்து விளங்கிகொள்வதற்கு.
2. ஆங்கில அரச பதிவேடுகளை, கடிதங்களை எளிதாக வாசித்து விளங்கிகொள்வதற்கு.
3. வானொலி, தொலைக்காட்சி செய்திகளை புரிந்துக்கொள்வதற்கு.
4. ஆங்கில மொழியில் (உயர்கல்வி) பாடங்களை இலகுவாக விளங்கிக்கற்பதற்கு (கணிதம், கணினி, தொழில்நுட்பம் போன்றவை...)
5. ஆங்கில செயப்பாட்டுவினை வாக்கியங்களூடாக யாரும் உங்களுடன் உரையாடினால், அவற்றை எளிதாக விளங்கிக்கொள்வதற்கும் மறுமொழிவதற்கும்.

செய்திகளில் செயப்பாட்டுவினை (Passive Voice) வாக்கியங்கள்

Hong Kong Island was occupied by British forces in 1841
ஹொங்கொங் தீவை கைப்பற்றப்பட்டது பிரித்தானியப் படைகளால் 1841 இல்.
(ஹொங்கொங் தீவை பிரித்தானியப் படைகளால் 1841 இல் கைப்பற்றப்பட்டது.)

A young female Tamil journalist was arrested by the Police on suspicion.
ஒரு இளம் தமிழ் பெண் பத்திரிக்கையாளரை கைதுசெய்யப்பட்டது பொலிஸாரால் சந்தேகத்தில்.
(ஒரு இளம் தமிழ் பெண் பத்திரிக்கையாளரை சந்தேகத்தின் பேரில் கைதுச்செய்யப்பட்டுள்ளது.)

Two decomposed bodies of Tamils were discovered on Friday.
இரண்டு சிதைவுற்ற தமிழர்களின் உடலங்களை கண்டுபிடிக்கப்பட்டது வெள்ளிக்கிழமை.

Tamils were abducted by unidentified armed persons.
தமிழர்களை கடத்திச்செல்லப்பட்டது அடையாளம் காணப்படாத ஆயுததாரிகளால்.
(அடையாளம் காணப்படாத ஆயுததாரிகளால் தமிழர்களை கடத்திச்செல்லப்பட்டுள்ளது.)

An university Tamil girl was kidnapped on December 31 morning.
ஒரு பல்கலைக் கழக தமிழ் பெண்ணை கடத்தப்பட்டது டிசம்பர் 31 காலையில்.
(பல்கலைக்கழக தமிழ் பெண் ஒருவரை டிசம்பர் 31 ம் நாள் காலையில் கடத்தப்பட்டுள்ளது.)

Navanethem Pillay was appointed as new United Nations High Commissioner for Human Rights.
நவநீதம் பிள்ளையை நியமிக்கப்பட்டது புதிய ஐக்கிய நாடுகளின் மனிதவுரிமை உயர் ஆணையராக.
(நவநீதம் பிள்ளை அவர்களை புதிய ஐக்கிய நாடுகளின் மனிதவுரிமை உயர் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளது.)

Barack Hussein Obama was elected President of the United States on 5 Nov 2008.
பாரக் ஹுசேன் ஒபாமாவை தேர்ந்தெடுக்கப்பட்டது ஐக்கிய அமெரிக்காவின் சனாதிபதியாக 5 நவம்பர் 2008 இல்.
(2008 நவம்பர் 5 ஆம் நாளன்று ஐக்கிய அமெரிக்காவின் சனாதிபதியாக பாரக் ஹுசேன் ஒபாமா அவர்களை தேர்ந்தெடுக்கப்பட்டது.)

Annathurai is considered an intellectual and a brilliant Tamil scholar.
அண்ணாதுறையை கருதப்படுகின்றது ஒரு புத்திமானாகவும் ஒரு பிரகாசமான தமிழ் கல்விமானாகவும்.
(அண்ணாத்துறை அவர்களை ஒரு பிரகாசமான தமிழ் கல்விமானாகவும் புத்திமானாகவும் கருத்தப்படுகின்றது.)

இவற்றை போன்று அநேகமான செய்திகளில் "செயப்பாட்டுவினை" வாக்கியங்களே காணப்படுகின்றன. இச்செயப்பாட்டு வினை வாக்கியங்களை நன்கு பயிற்சி செய்துக்கொள்வதன் ஊடாக, எளிதாக அவற்றை புரிந்துக்கொள்ளலாம்.

உங்கள் பயிற்சிக்கு Homework:
-------------------------------------------------------------------------------------
இங்கே உங்கள் பயிற்சிக்காக 10 சிறிய வாக்கியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை நாம் மேலே பயிற்சி செய்த 47 செயப்பாட்டுவினை வாக்கியங்களைப் போன்று; ஒவ்வொரு வாக்கியங்களையும் 47 வாக்கியங்களாக அமைத்து எழுதி பயிற்சி செய்யுங்கள். எழுதும் பொழுது வாசித்து வாசித்து எழுதுங்கள். அதுவே உங்கள் பேச்சாற்றலை எளிதாக வளர்த்துக்கொள்வதற்கான இரகசியமாகும். பின் எழுதியவற்றை உங்கள் சக நண்பரிடமோ, உறவினரிடமோ பேசி பயிற்சி செய்யுங்கள்.

1. Ravi is investigated by police.
காவல் துறையினாரால் ரவியை விசாரிப்படுகிறது.

2. The Robot is made by Japan
இயந்திரனை ஜப்பானில் தயாரிக்கப்படுகிறது.

3. His interview is postponed
அவனுடைய நேர்முகத்தேர்வை தள்ளிப்போடப்படுகிறது.

4. She is appointed as Managing Director.
அவளை நிர்வாக இயக்குனராக நியமிக்கப்படுகிறது

5. My wallet is stolen.
எனது பணப்பையை களவாடப்படுகிறது.

6. It is made
இதை தயாரிக்கப்படுகிறது.

7. Sitha is kidnapped by Iravanan.
சீதையை இராவணனால் கடத்தப்படுகிறது.

8. The letter is sent by post.
இந்த கடிதத்தை அனுப்பப்படுகின்றது தபாலில்.

9. The man is killed by Army.
அந்த மனிதனை கொல்லப்படுகின்றது இராணுவத்தால்.

10. It is done by Government of Sri Lanka
இதை செய்யப்படுகிறது இலங்கையின் அரசால்.

Direct Object - Indirect Object
-------------------------------------------------------------------------------------
செயப்பாட்டுவினை வாக்கியங்கள் ஆங்கிலத்தில் இரண்டு விதமாக பயன்படுத்தப்படுகின்றன. ஒன்று நேரடியாக செயப்படுபொருளை விவரிப்பவை. இதனை Direct Object என்பர். மற்றது மறைமுகமாக செயப்படுப்பொருளை விவரிப்பவை. இதனை Indirect Object என்பர்.

Direct Object:

அதாவது ஒரு செயலை யாரால் எதனால் செய்யப்படுகிறது என்பதை எவ்வித மறைவும் இன்றி நேரடியாகவே செயலை விவரிப்பவை.

Ravi was investigated by police.
காவல் துறையினாரால் ரவியை விசாரிக்கப்பட்டது.

The Robot was made by Japan
இயந்திரன்/னை ஜப்பானில் தயாரிக்கப்பட்டது.

Sitha was kidnapped by Iravanan.
சீதையை இராவணனால் கடத்தப்பட்டது.

The letter was sent by post.
கடிதத்தை தபாலில் அனுப்பப்பட்டது.

The men was killed by Army.
அம்மனிதர்களை இராணுவத்தால் கொல்லப்பட்டது. (கொல்லப்பாட்டார்கள்)

The window was broken by Sarmilan.
சாளரத்தை சர்மிலனால் உடைக்கப்பட்டது.

Indirect Object: http://aangilam.blogspot.com

மறைமுகமாக செயப்படுப்பொருளை விவரிப்பவை அல்லது செயப்படுபொருளை மறைத்து அல்லது தவிர்த்து விவரிப்பவை (Indirect Object) ஆகும். அதாவது ஒரு செயலை யாரால் எதனால் செய்யப்படுகிறது என்பதை தவிர்த்து அல்லது வேண்டுமென்றே மறைத்து, வினையை மட்டும் விவரிப்பவை. இவ்வாறு ஏன் பேசப்படுகின்றது என்பதற்கு மூன்று காரணங்களை குறிப்பிடலாம்.

1. ஒரு செயலை யாரால் செய்யப்பட்டது என்பது தெரியாதப்பொழுது செயலை மட்டும் விவரித்து பேசுதல்.
2. செயலுக்கான காரணி அல்லது காரணமானவர் யார் என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாமல் பேசுதல்.
3. யாரால் எதனால் செய்யப்பட்டது என்பதை வேண்டுமென்றே மறைத்து பேசுதல். (அநேகமான தலைப்புச்செய்திகள் இவ்வாறே காணப்படும்.)

Ravi was investigated.
ரவியை விசாரிப்பட்டது. (யாரால் விசாரிக்கப்பட்டது என்பதை கூறாமல் தவிர்க்கப்பட்டுள்ளது.)

The Robot was made.
இயந்திரன் தயாரிக்கப்பட்டது. (யாரால், எந்த நாட்டால், எந்த நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது என்பதை கூறப்படவில்லை.)

Sitha was kidnapped.
சீதையை கடத்தப்பட்டது. (யாரால் கடத்தப்பட்டது என்பதை கூறப்படவில்லை)

The letter was sent.
கடிதத்தை அனுப்பப்பட்டது. (எப்படி எதனூடாக அனுப்பப்பட்டது என்பது விவரிக்கப்படவில்லை)

The men was killed.
அம்மனிதர்கள் கொல்லப்பட்டார்கள். (யாரால் கொல்லப்பட்டது என்பது மறைக்கப்பட்டுள்ளது.)

The window was broken.
சாரளத்தை உடைக்கப்பட்டது. (யாரால் உடைக்கப்பட்டது என்பதை கூறப்படவில்லை அல்லது உடைத்தவர் யார் என்பது தெரியாது.)

குறிப்புகள்: http://aangilam.blogspot.com

1. செயப்பாட்டுவினை (Passive Voice) இன் பயன்பாடுகளை எளிதாகக் கற்பதற்கு, முதலில் அங்கில் சாதாரண பேச்சு பயன்பாடுகளை அறிந்திருக்க வேண்டும். நீங்கள் இத்தளத்திற்கு புதிதாக வருகைத் தந்தவர் என்றால் முதலில் எமது Grammar Patterns 01 இல் இருந்து பயிற்சி செய்யுங்கள்.

2. செயப்பாட்டுவினை வாக்கியங்களின் பிரதான வினை (Main Verb) எப்பொழுதும் "Past Participle" சொற்களாகவே பயன்படும் என்பதை மறவாதீர்கள். அவற்றை Irregular verbs அட்டவணையில் பார்க்கலாம்.

3. செயப்பாட்டுவினை - செயல்வினை வேறுப்பாடுகள் அடுத்தப்பாடத்தில் வழங்கப்படும். (செயல்பாட்டுவினை பேச்சு வழக்கிக்கிற்கு பொருந்தாத அல்லது அதிகம் பயன்படுத்தப்படாத வாக்கிய அமைப்புகள் பற்றியும் பார்ப்போம்.)

2010 ஆம் ஆண்டின் முதல் பாடப்பயிற்சி இதுவாகும். இப்பாடம் நிச்சயம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம். இப்பாடப் பயிற்சியை சரியாக பற்றிக்கொண்டீர்களானால், இது மிகவும் இலகுவான ஓர் பயிற்சி முறை என்பதை நீங்கள் நிச்சயம் உணர்வீர்கள்.

அறிவித்தல்:

எமது பாடங்களை தயவுசெய்து அப்படியே வெட்டி ஒட்டுவதை தவிர்க்கவும். நன்னோக்கின் அடிப்படையில் மீள்பதிவிட விரும்பினால், ஒரு சிறு பகுதியை மட்டும் இட்டு, எமது தளத்தின் குறிப்பிட்ட பாடத்திற்கான இணைப்பை (URL) கட்டாயம் வழங்கப்படவேண்டும் என அறியத்தருகின்றோம்.

இப்பாடம் தொடர்பான ஏதேனும் சந்தேகங்கள் விளக்கங்கள் தேவைப்படின் பின்னூட்டம் இட்டோ அல்லது முகப்பில் காணப்படும் எனது மின்னஞ்சல் ஊடாகவோ தொடர்புக்கொள்ளலாம்.

நன்றி

அன்புடன்

அருண் HK Arun Download As PDF

ஆங்கிலப் பெயர்சொற்குறிகள் (Articles)

"பெயர்சொற்குறிகள்" என்பவை பெயர்ச்சொற்களை குறிப்பிட்டு அல்லது சுட்டிக்காட்டப் பயன்படும் சொற்களாகும். இதனை தமிழில் சுட்டிடைச்சொற்கள் என்றும் அழைப்பர். ஆங்கிலத்தில் பெயர்ச்சொற்குறிகள் மூன்று மட்டுமே உள்ளன.

அவைகளாவன:

the, a, an

இவற்றை இரண்டு வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

Definite Article = நிச்சயப் பெயர்சொற்குறி
Indefinite Articles = நிச்சயமற்ற பெயர்சொற்குறிகள்

நிச்சயப் பெயர்சொற்குறி (Definite Article)

ஆங்கிலத்தில் நிச்சயப் பெயர்ச்சொற்குறி ஒன்று மட்டுமே உள்ளது. Specific
  • The
யாரேனும் ஒருவரை அல்லது ஏதேனும் ஒன்றை நிச்சயித்து அல்லது குறிப்பிட்டு பேசப் பயன்படும் சொல் “நிச்சயப் பெயர்சொற்குறி” சொல்லாகும். தமிழில் “அந்த, இந்த” என்று குறித்துப் பேசுவதற்கு இணையானப் பயன்பாடாகும். இச்சொல் (The) எப்பொழுதும் பெயர்ச்சொற்களுக்கு முன்பாக மட்டுமே பயன்படும். அத்துடன் ஏற்கெனவே குறிப்பிடப்பட்ட ஒருவரை அல்லது குறிப்பிடப்பட்ட பொருளை குறித்துப் பேசவும் பயன்படும்.

எடுத்துக்காட்டு:

The car.
(அந்த/இந்த) மகிழூந்து

The book.
(அந்த/இந்த) பொத்தகம்

The beautiful girl
(அந்த/இந்த) அழகானப் பெண்.

நிச்சயமற்ற பெயர்சொற்குறிகள் (Indefinite Articles)

நிச்சயமற்ற பெயர்ச்சொற்குறிகள் எப்பொழுதும் எந்த ஒரு நபரையும், எந்த ஒரு பொருளையும்; இவர்தான் (அவர்/இவர்), இதுதான் (அந்த/இந்த) என்று நிச்சயித்து குறிப்பிட பயன்படுவதில்லை. அதாவது ஒரு நபர் அல்லது பொருள்; யார், எது என தெரியாதப் பொழுது அல்லது குறிப்பிட்டு கூறாமல் தவிர்க்கும் பொருட்டு, பொதுப்படையாக "ஓர்", "ஒரு" என நிச்சயமற்ற பெயர்சொற்குறிகள் பயன்படும்.

நிச்சயமற்ற பெயர்சொற்குறிகள் ஆங்கிலத்தில் இரண்டு மட்டுமே உள்ளன.
  • a
  • an
எடுத்துக்காட்டாக:

a car
ஒரு மகிழுந்து
(ஏதோ ஒரு மகிழுந்து, எந்த மகிழூந்து என்று நிச்சயித்து அல்லது குறிப்பிட்டு கூறப்படவில்லை)

a book
ஒரு பொத்தகம்
(ஏதோ ஒரு பொத்தகம். எந்த பொத்தகம் என்று குறிப்பிடவில்லை.)

a beautiful girl
ஒரு அழகானப் பெண்
(யாரோ ஒரு அழகானப் பெண். எந்தப் பெண் என்று குறிப்பிடவில்லை)

“a” பெயர்ச்சொற்குறி போன்றே, “an” எனும் பெயர்ச்சொற்குறியும் குறிப்பிட்டு எதனையும் குறிக்காமல் பொதுவாக ஒன்றை குறிக்கப் பயன்படும் சொல்தான். ஆனால் ஆங்கில உயிரெழுத்துக்கள் அல்லது உயிரொலியுடன் தொடங்கும் சொற்களின் முன்னால் மட்டும் பயன்படும் சொல்லாகும்.

எடுத்துக்காட்டாக:

He is an Indian
அவன் ஒரு இந்தியன்.
(இந்தியக் குடியுரிமை கொண்ட ஒருவன்)

மேலும் விரிவாக இவற்றை இங்கே பார்க்கலாம்.

இப்பொழுது நிச்சயமற்ற பெயர்ச்சொற்குறிகள் மற்றும் நிச்சயப் பெயர்ச்சொற்குறி இரண்டும் இணைந்து பயன்படும் சில வாக்கியங்களை எடுத்துக்காட்டாகப் பார்ப்போம்.

There is a car. The car is fifty years old.
அங்கிருக்கிறது ஒரு மகிழுந்து. அந்த மகிழுந்து 50 ஆண்டுகள் (வயதுடையது) பழையது.

இதில் "அங்கிருக்கிறது ஒரு மகிழுந்து" எனும் போது எந்த மகிழுந்து என்று குறிப்பிட்டுக் கூறப்படவில்லை. ஆனால் இரண்டாவது வாக்கியத்தில் "அந்த மகிழுந்து 50 ஆண்டுகள் பழையது.” எனும் போது நாம் ஏற்கெனவே குறிப்பிட்ட மகிழுந்தைப் பற்றி பேசுகிறோம் என்பது கேட்பவருக்கு எளிதாக விளங்கிவிடும். அதனாலேயே முதலில் பயன்படும் " a” நிச்சயமற்ற பெயர்ச்சொற்குறியாகவும், அடுத்து இடம்பெறும் “The” நிச்சயப் பெயர்ச்சொற்குறியாகவும் அழைக்கப்படுகின்றன.

மேலும் சில எடுத்துக்காட்டுகள்:

This is a book. The book is mine.
இது ஒரு பொத்தகம். இந்த பொத்தகம் என்னுடையது.

There is a beautiful girl. The girl is my girlfriend.
அங்கிருக்கிறாள் ஒரு அழகானப் பெண். அந்த பெண் எனது காதலி.

இவற்றை சரியாக விளங்கிக்கொண்டீர்களானால் பெயர்ச்சொற்குறிகளை பயன்படுத்துவது எளிதானதாக இருக்கும்.

பெயர்ச்சொற்குறி அற்றவை (Zero Article)

சில சொற்களின் முன்னால் பெயர்ச்சொற்குறிகள் பயன்படுவதில்லை. அவற்றையே “”Zero Article” என அழைக்கப்படுகின்றது. அதாவது பெயர்ச்சொற்குறிகள் பயன்படாதவை.

எடுத்துக்காட்டாக:

I like to drink water.
நான் தண்ணீர் குடிக்க விரும்புகிறேன்.

மேலுள்ள வாக்கியத்தைச் சற்று கவனிக்கவும். அதனை "நான் ஒரு தண்ணீர் குடிக்க விரும்புகிறேன்." என்றோ, “நான் அந்த தண்ணீர் குடிக்க விரும்புகிறேன்.” என்றோ பெயர்ச்சொற்குறி இட்டு ஆங்கிலத்தில் குறிப்பிட முடியாது.

I like to drink a water.
I like to drink the water.

குறிப்பு:
Define Article என்பதை Define Articles என்று “s” இட்டு பன்மையாக எழுதுவது பொருத்தமற்றது. காரணம் Define Article (The) ஒன்று மட்டுமே உள்ளது

சொல்விளக்கம் (Definitions of Article)

"Article" எனும் ஆங்கிலச்சொல் பெயர்ச்சொல்லாகவும் வினைச்சொல்லாகவும் பயன்படும். அத்துடன் "பெயர்சொற்குறி" எனும் பொருளைத் தவிர வேறு சில பொருற்களும் உள்ளன.

Article: பெயர்சொற்குறி (சுட்டிடைச்சொல்)
Article: உடன்படிக்கை. (ஆவண உடன்படிக்கை)
article: உடன்படிக்கை மூலம் கட்டுப்படுத்து (வினை)
Article: கட்டுரை, செய்தித்தாளின் வெளியான ஒரு பொருள்.

தொடர்புடைய பாடங்கள்:
இப்பாடம் தொடர்பான சந்தேகங்கள் விளக்கங்கள் தேவைபடின் பின்னூட்டம் ஊடாகவோ, எமது மின்னஞ்சல் ஊடாகவோ தொடர்புக்கொள்ளலாம்.

நன்றி!

அன்புடன்
அருண் HK Arun
Download As PDF