Showing posts with label ஆங்கில ஆக்கங்கள். Show all posts
Showing posts with label ஆங்கில ஆக்கங்கள். Show all posts

IELTS: அனைத்துலக ஆங்கில மொழிக்கான திறனாய்வுத் தேர்வு

IELTS உலகில் முதன்மையான ஆங்கில மொழிக்கான திறனாய்வு தேர்வாகும். இத்தேர்வில் கிடைக்கப்பெறும் ஒருங்கு கூட்டு மதிப்பெண்களின் அடிப்படையில், ஆங்கில மொழி பேசும் நாடுகளில் உயர் கல்வி, குடிபுகல் போன்ற காரணங்களுக்காக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. 2009 ஆம் ஆண்டு சராசரி கணிப்பின் படி 1.4 மில்லியனுக்கும் அதிகமானோர் 135 க்கும் அதிகமான நாடுகளில் இருந்து இத்தேர்வுக்கு தோற்றியுள்ளனர். இவ்வெண்ணிக்கை துரிதகதி வேகத்தில் அதிகரித்துச் செல்கிறது. உலகெங்கும் 6,000 க்கு மேற்பட்ட பல்கலைக் கழகங்கள், அரச நிறுவனங்கள், கல்விசார் அமைப்புகள் அயெல்ஸ் ஒருங்கு கூட்டு மதிப்பெண்களின் அடிப்படையில் நுழைவு அனுமதி வழங்குகின்றன. இதனால் உலகெங்கும் ஆங்கில மொழி திறனாய்வு தேர்வு முறைக்கு கற்போரின் எண்ணிக்கையும், பயிற்சி மையங்களும் பெருகி வருகின்றன. அயெல்ஸை உலகில் பிரசித்திப் பெற்றதும் நம்பகமுமான: கேம்பிரிஜ் பல்கலைக்கழகம் (University of Cambridge ESOL Examination), பிரிட்டிஸ் கவுன்சில் (British Council), ஐடிபி அவுஸ்திரேலியா (IELTS: IDP Australia) ஆகிய மூன்றும் இணைந்து நிர்வகித்து வருகின்றன. இவை இன்று உலெகெங்கும் 500 க்கும் அதிகமான தேர்வு மையங்களை கொண்டு, ஒவ்வொரு மாதமும் நான்குக்கும் மேற்பட்ட தேர்வுகளை நடாத்தி வருகின்றன. தேர்வுக்கு தோற்றுபவர்கள் தாம் வாழும் நாட்டில், தமக்கு அன்மித்த நகரத்தில் தோற்ற முடியும்.

IELTS என்பதன் முழுச்சொற்றொடர் International English Language Testing System என்பதாகும். தமிழில் “அனைத்துலக ஆங்கில மொழிக்கான திறனாய்வுத் தேர்வு" அல்லது "அனைத்துலக ஆங்கில மொழிக்கான தேர்வு முறை” எனப்படும். இதனை ஐஈஎல்டிஎஸ் என்று எழுதினாலும், உச்சரிக்கும் போது “அயெல்ஸ்” என்றே உச்சரிக்கவேண்டும். ஏனெனில் “அயெல்ஸ்” என்பது ஒரு சுருக்கப்பெயர் (Acronym) ஆகும்.

இந்த அனைத்துலக ஆங்கில மொழிக்கான திறனாய்வுத் தேர்வுமுறையில் இரண்டு வடிவங்கள் உள்ளன.

கல்விசார் வடிவம் (Academic Training)
பொது பயிற்சி வடிவம் (General Training)

இவற்றில் உங்களுக்கு பொருத்தமான தேர்வு வடிவத்தை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

கல்விசார் வடிவம்(Academic Test)

கல்விசார் வடிவம் ஆங்கில மொழியின் ஊடாக இளங்கலை, முதுநிலை பட்டப்படிப்புக்கான பல்கலைக் கழகங்களின் நுழைவு அனுமதி, உயர்கல்விக்கான பயிற்சி நெறிகள், கல்வி நிறுவனங்களின் நுழைவு அனுமதி, மருத்துவத்துறைப் போன்ற உயர்பணிகள் போன்றவற்றிற்கானது. அதற்கு பரிட்சையாளர்கள் குறிப்பிட்ட பல்கலைக்கழகம், அல்லது குறிப்பிட்ட நிறுவனம் கோரும் ஒருங்கு கூட்டு மதிபெண் பெற்றிருக்க வேண்டும்.

தற்போது அமெரிக்காவில் சில பல்கலைக்கழங்களும் அயெல்ஸ் தேர்வு ஒருங்கு கூட்டு மதிப்பெண் அடிப்படையில் ஏற்றுக்கொள்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

பொது பயிற்சி வடிவம் (General Training Test)

பொது பயிற்சி வடிவம் ஆங்கிலம் பேசும் நாடுகளில் பொதுவான பணிப் பயிற்சிகள் பெறுவதற்கு, சாதாரணப் பணிகள் போன்றவற்றிற்கு, பாடசாலை அல்லது கல்லூரி போன்றவற்றில் கல்வியை தொடர்வதற்கு, மற்றும் ஐக்கிய இராச்சியம், அவுஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கான குடிபுகல் போன்ற காரணங்களுக்காக ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. இதுவும் பெறப்படும் ஒருங்கு கூட்டு மதிப்பெண் அடிப்படையிலேயே அனுமதி கிடைக்கும்.

இந்த அயெல்ஸ் தேர்வு நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

கேட்டல் (Listening)
வாசித்தல் (Reading)
எழுதுதல் (Writing)
பேசுதல் (Speaking)

தேர்வுக்கு தயாராகும் பரீட்சையாளர்கள் இந்த நான்கு பிரிவு குறித்தும் அறிந்து வைத்துக்கொள்ளல் அவசியம். அநேகமாக பரிட்சைக்கு தோற்றுவோரின் மனதில் எழும் எண்ணங்கள்: "ஒவ்வொரு பிரிவுக்கும் எவ்வெவ்வளவு நேரம் வழங்கப்படும்? ஒவ்வொரு பிரிவுகளினதும் உற்பிரிவுகள் எத்தனை? உற்பிரிவுகளுக்கு வழங்கப்படும் நேரம் எவ்வளவு? தேர்வுகள் எப்படி நடைப்பெறும்? அவற்றில் என்னென்ன உற்பட்டிருக்கும்?" போன்றவைகளாகவே இருக்கும். உண்மையில் இவற்றை அறிந்துவைத்துக் கொண்டால் பரீட்சைக்கு தோற்றுபவர்கள் தம்மை தயார்படுத்திக்கொள்ள எளிதாக இருக்கும். இதனை கருத்தில் கொண்டே இந்த ஆக்கம் வழங்கப்படுகிறது.

முழுமையான விபரம் கீழே வங்கப்பட்டுள்ளன.

தேர்வுக்கு தோற்றும் பரீட்சையாளர்கள் அனைவருக்கும் “கேட்டல்” மற்றும் “பேசுதல்” ஆகிய இரண்டு பிரிவுகளும் பொதுவானதாகவே இருக்கும்.

ஆனால் “வாசித்தல்” மற்றும் “எழுத்துதல்” ஆகிய இரண்டு பிரிவுகளும் கல்விசார் வடிவத்திற்கும் பொது பயிற்சி வடிவத்திற்கும் இடையில் வேறுப்பட்டதாக இருக்கும். அதாவது வாசித்தல், எழுதுதல் ஆகிய இரண்டு பிரிவுகளும் கல்விசார் வடிவத்தில் கடுமையானதாகவே வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலதிக விபரங்களை கீழே பார்க்கவும்.

கேட்டல் (Listening)

கேட்டல் பிரிவுக்கு வழங்கப்படும் நேரம் 30 நிமிடங்களாகும். இதில் நான்கு பகுதிகளும், அவற்றில் இருந்து 40 கேள்விகளும் உள்ளன. ஒலிப்பதிவு செய்யப்பட்ட உரையாடல்கள் ஒலிபரப்பப்படும். அவற்றை கவனமாகக் கேட்டு விடையை குறித்துக்கொள்ள வேண்டும். நான்கு கேட்டல் பகுதிகளினதும் முடிவில் “கேட்டல் தேர்வுக்கான விடை தாள்” (Listening Test Answer Sheet) இல் விடையை குறிக்க மேலதிகமாக 10 நிமிடங்கள் வழங்கப்படும்.

ஒலிப்பதிவு ஒருமுறை மட்டுமே ஒலிக்கப்படும் என்பதை நினைவில் இருத்திக் கொள்ளவும்.

வாசித்தல் (Reading)

வாசித்தல் பிரிவுக்கு வழங்கப்படும் நேரம் 60 நிமிடங்கள். இது மூன்று ஏட்டுரை வாசித்தல் பகுதிகளை கொண்டுள்ளது. ஒவ்வொரு பகுதியும் தோராயமாக 700 - 800 சொற்களைக் கொண்டவைகளாக இருக்கும். மூன்று வாசித்தல் பகுதிகளிலும் இருந்து 40 கேள்விகள் வரும். விடையை, “வாசித்தல் தேர்வுக்கான விடை தாள்” (Reading Test Answer Sheet) இல் குறிக்க வேண்டும். வாசித்தல் தேர்வு பிரிவில் விடையளிப்பதற்கு என்று மேலதிக நேரம் வழங்கப்படுவதில்லை என்பதை கவனத்தில் கொள்ளவும். கல்விசார் வடிவத்தில் ஏட்டுரை வாசித்தல் பகுதி கல்விசார் நூல்கள், சஞ்சிகைகள், செய்தித்தாள்கள் போன்றவற்றில் இருந்து பெறப்பட்டவைகளாக இருக்கும். வாசிப்பவர் தான் வாசித்ததை முழுமையாகப் புரிந்துக்கொண்டவராக இருந்தால் தான் கேள்விகளுக்கு சரியான பதிலளிக்க முடியும். பொது பயிற்சி வடிவம் பல்வேறு விளம்பரம், விபரக்கோவை, துண்டுப்பிரசுரங்கள் மற்றும் செய்தித்தாள் போன்றவற்றில் இருந்து வரும்.

எழுதுதல் (Writing)

எழுதுதல் பிரிவுக்கு வழங்கப்படும் நேரம் 60 நிமிடங்கள். இதில் இரண்டு பகுதிகளை கொண்டுள்ளது. முதல் பகுதிக்கு 20 நிமிடங்களும், இரண்டாவது பகுதிக்கு 40 நிமிடங்களும் வழங்கப்படும். கல்விசார் வடிவத்தில் முதல் பிரிவாக 150 சொற்கள் கொண்ட ஒரு அறிக்கை எழுத வேண்டும். அறிக்கை தொடர்பான வரைப்படம், அட்டவணை போன்றவற்றின் ஊடாக விவரிக்கப்பட வேண்டும். பொது பயிற்சி வடிவத்தில் கடிதம் எழுதவேண்டும். இரண்டாவது பகுதி 250 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரை எழுத வேண்டும்.

பேசுதல் (Speaking)

பேசுதல் பிரிவு தோராயமாக 11 முதல் 14 நிமிடங்கள் வரை நடைப்பெறும். இது பரீட்சையாளருக்கும் அயெல்ஸ் தேர்வாளருக்கும் இடையிலான நேர்முகத் தேர்வாக நடைப்பெறும். இதுவும் மூன்று பகுதிகளைக் கொண்டது. முதல் பகுதி அறிமுகப் பகுதியாகும். பரீட்சையாளர் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ள வேண்டும். தொடர்ந்து தேர்வாளர் தன்னை அறிமுகப் படுத்திக்கொள்வதுடன் 4-5 நிமிடங்கள் சில பொதுவான கேள்விகளை கேட்பார். இவை உங்கள் (கல்வி, தொழில், பொழுதுப்போக்கு போன்ற) தனிப்பட்ட விவரங்கள் தொடர்பானதாக இருக்கும். நீங்கள் சுருக்கப் பதில்களாக பதிலளிக்கலாம். அடுத்து ஏதாவது ஒரு பொது நிகழ்வு தொடர்பான ஒரு தலைப்பு அட்டை கொடுக்கப்படும். தயார்படுத்தலுக்கு 1 நிமிடம் அவகாசம் கொடுக்கப்படும். பின் அத்தலைப்பு தொடர்பில் 2 நிமிடங்கள் பேசவேண்டும். கடைசியாக 4-5 நிமிடங்கள் ஒரு கலந்துரையாடல் இடம் பெறும்.

பேசுதல் தேர்வின் போது ஒலிப்பதிவு செய்யப்படும். இந்த ஒலிப்பதிவு தேர்வாளரின் கண்காணிப்பிற்காகவும், சிலவேளை பரிட்சையாளர் தமக்கு கிடைக்கப்பெற்ற ஒருங்கு கூட்டு மதிப்பெண்ணை எதிர்த்து மனுதாக்கல் செய்கையில் அதனை மறுப்பரீசீலனைச் செய்யவும் எடுத்துக்கொள்ளப்படும்.

நான்கு பிரிவுகளும் மொத்தம் 2:44 நிமிடங்களில் முடிவடையும். முதல் மூன்று பிரிவுகளான கேட்டல், வாசித்தல், எழுதுதல் போன்ற மூன்று பிரிவுகளும் ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ந்து இடைவெளி இன்றி நடைப்பெறும். பேசுதல் பிரிவு மட்டும் இடைவெளி விட்டு நடத்தப்படும். அநேகமாக குறிபிட்ட அதே நாளிலேயும் நடைப்பெறலாம். அல்லது ஏழு நாட்களுக்கு முன்பாக அல்லது பின்பாகவும் நடைப்பெறலாம். தேர்வு முடிவடைந்து 13 நாட்களின் பின்னர் தேர்வின் பெறுபேறுகளை நீங்கள் பெறக்கூடியதாக இருக்கும்.

ஒருங்கு கூட்டு மதிப்பீடு
-------------------------------------------------------------------------------------
இந்தத் தேர்வில் வெற்றி (pass) தோழ்வி (fail) இல்லை. 1 முதல் 9 வரையான ஒருங்கு கூட்டு மதிப்பெண்களின் அடிப்படையில் ஒருவரின் ஆங்கில மொழிக்கான திறனை மதிப்பீடு செய்யப்படுகின்றது. ஆகக்கூடிய ஒருங்கு கூட்டு மதிப்பெண்ணாக 9 வழங்கப்படுகின்றது. 9 மதிப்பெண்களைப் பெற்றவர், முழுமையான ஆங்கில மொழி ஆளுமை மிக்கவர் (தேர்ந்த பயனர்/வல்லுநர்) என்றும், 1 எடுத்தவர் ஒருசில சொற்களை தவிர ஆங்கில மொழியை பயன்படுத்தும் திறன் முற்றிலும் அற்றவர் என்றும் மதிப்பிடப்படுகின்றது. மேலும் அட்டவணையில் பார்க்கவும்.


ஒருங்கு கூட்டு மதிப்பெண்களின் அடிப்படையில் ஒருவரின் ஆங்கில மொழிக்கானத் திறனை எவ்வாறு மதிப்பீடு செய்யப்படுகின்றது என்பதனை கீழே பார்க்கவும்.

9 = Expert User (தேர்ந்த பயனர்/வல்லுநர்)
இவர் ஆங்கில மொழியில் முழுமையான ஆளுமைப் பெற்றவர். ஆங்கில மொழியில் எதனையும் எளிதாகவும் துல்லியமாகவும் விளங்கிக்கொள்ளும், பயன்படுத்தும் முழுமைத் திறன் பெற்றவராவார்.

8 = Very Good User (மிகச் சிறந்த பயனர்)
ஆங்கில மொழியில் ஆளுமை உள்ளவர். ஆனால் மிகத்துல்லியாமான ஆளுமை இல்லை. சிற்சிறு தவறுகள் ஏற்படுகின்றன. தமக்கு பரீட்சையம் இல்லாத விடயங்களில் தவறுதலாக புரிந்துக்கொள்வதற்கான வாய்ப்பு உண்டு. ஆனால் ஆங்கில மொழியில் சிக்கலான விவாதங்களை புரிந்து கையாளும் திறன் பெற்றவர்.

7 = Good User (சிறந்த பயனர்)
ஆங்கில மொழியில் ஆளுமை உண்டு. ஆனால் அவ்வப்போது துல்லியமல்லாத, பொருத்தமற்ற பயன்பாடுகள் மற்றும் சில சந்தர்ப்பங்களில் தவறாகப் புரிந்து கொள்ளுதல் போன்றவை ஏற்படுகின்றன. இருப்பினும் பொதுவாக சிக்கலான மொழிப் பயன்பாட்டை கையாளக்கூடியவர். விவாதங்களைப் புரிந்து கொள்ளக் கூடியவர்.

6 = Competent User (திறனான பயனர்)
ஆங்கில மொழியில் பொதுவான ஒரு ஆளுமை உண்டு. இருப்பினும் சில துல்லியமற்ற பயன்பாடுகள், பொருத்தமற்ற பயன்பாடுகள், தவறாக புரிந்துக்கொள்ளல் போன்றன உள்ளன. தமக்கு பரீட்சையாமான சூழல்களில் சிக்கலான மொழிப்பயன்பாட்டை புரிந்துக்கொள்ளும், பயன்படுத்தும் திறன் உண்டு.

5 = Modest User (அளவான பயனர்)
ஆங்கில மொழி ஆளுமை ஓரளவு உண்டு. தவறுகள் பல ஏற்படுகின்றன. ஆனால் பல சந்தர்ப்பங்களில் பொருளை மேலோட்டாமாக புரிந்துக்கொள்ளும் திறன் உண்டு. தமது துறையில் அடிப்படையான தொடர்புகளை கையாளக்கூடியவர்.

4 = Limited User (குறைந்த அளவான பயனர்)
பழக்கமான சூழல்களுக்கான அடிப்படை மொழி திறன் உண்டு. புரிந்துக்கொள்வதிலும், தமது கருத்தை வெளிப்படுத்துவதிலும் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. சிக்கலான மொழியமைப்பை பயன்படுத்த முடியாதவர்.

3 = Extremely Limited User (மிகக் குறைந்த அளவிளான பயனர்)
மிகவும் பரீட்சையமான சூழல்களில் மட்டும் பொதுவான பொருளை புரிந்துக்கொள்ளக் கூடியவர். தொடர்பாடல்களின் போது அடிக்கடி இடைமுறிவு ஏற்படுகின்றது.

2 = Intermittent User (அவ்வப்போது பயன்படுத்தும் பயனர்)
மிகவும் அடிப்படையான ஒரு சில சொற்களை தமக்கு பழக்கப்பட்ட சூழல்களில் பயன்படுத்துவதைத் தவிர, ஆங்கில மொழியில் தொடர்பாடல்கள் எதனையும் மேற்கொள்ளல் இவருக்கு சாத்தியமில்லை. ஆங்கில மொழியில் பேசுதல், எழுதுதல், புரிந்துக்கொள்ளல் போன்றவற்றில் மிகவும் கடினப்படுபவர்.

1 = Non-User (பயன்படுத்தாதவர்)
அடிப்படையில் ஆங்கில மொழியை பயன்படுத்தும் திறன் அற்றவர். ஒருசில ஒற்றைச் சொற்கள் மட்டும் தெரியும்.

0 = No Attempt (பரீட்சையை மேற்கொள்ளவில்லை)
மதிப்பீடு செய்யும் அளவில் தகவல்கள் அளிக்கப்படவில்லை.

இந்த அயெல்ஸ் தேர்வுக்கு தோற்றவிரும்புபவர்கள், தாம் வாழும் நாட்டில், தமக்கு அன்மித்த நகரில் பரீட்சைக்கு விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு மாதமும் நான்கு அல்லது ஐந்து தேர்வுகள் நடாத்தப்படுகின்றன. தேர்வுக்கான விண்ணப்பப் படிவத்தினை பரிட்சையாளர் தனக்கு அன்மித்த அயெல்ஸ் தேர்வு மையத்தில் இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம். அல்லது நேரடியாக கீழே பதிவிறக்கிக்கொள்ளலாம்.

விண்ணப்பப் படிவம் பதிவிறக்கம் PDF
அதிகாரப்பூர்வத் தளம்: http://www.ielts.org/

அயெல்ஸ் தேர்வுக்கு தயார் செய்துக் கொண்டிருப்போருக்கு இத்தகவல்கள் நிச்சயம் உதவியாக இருக்கும். இன்னும் இப்படி ஒரு தேர்வு இருப்பதே தெரியாதவர்களும் நம்மில் இருப்பர். அவர்களுக்கும் இத்தகவலை கொண்டுச்செல்லுங்கள். எல்லோரும் பயனடையட்டும்.

இந்த அயெல்ஸ் தேர்வுக்கு தோற்றவிரும்புவோர் என்ன மாதிரியான பயிற்சிகளை மேற்கொள்ளலாம் எனும் அலோசனைக் குறிப்புகளை அடுத்தப்பதிவில் பார்ப்போம்.

இந்த அயெல்ஸ் தேர்வு தொடர்பான கேள்விகளை கேட்கவிரும்புவோர் இப்பதிவில் பின்னூட்டாமாகவோ அல்லது மின்னஞ்சல் ஊடாகவோ கேட்கலாம்.

நன்றி!

அன்புடன்
அருண் HK Arun

Download As PDF

ஆங்கிலச் சொற்களின் எண்ணிக்கை

Number of Words in the English Language
உலக மொழி கண்காணிப்பகம் (Global Language Monitor – GLM) என்பது ஆங்கில மொழி சொற்கள் தொடர்பான தகவல்களை சேகரித்து, ஆங்கிலச் சொற்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு அறியத் தந்து கொண்டிருக்கும் ஒரு நிறுவனமாகும். அதன் சராசரி கணிப்பின் படி, தற்போது ஒவ்வொரு 98 நிமிடங்களுக்கும் ஒரு புதிய ஆங்கிலச் சொல் உருவாகின்றதாம். அதாவது ஒரு நாளைக்கு 14.7 சொற்கள். (Currently this is a new word created every 98 minutes or 14.7 words per day.)

2005 ஆம் ஆண்டு ஒக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியில் 301,100 ஆங்கிலச் சொற்கள் உள்ளடக்கப்பட்டிருந்தனவாம். மற்றும் வழிச்சொற்கள், சொற்றொடர்கள் என எல்லாமாக மொத்தம் 616,500 சொற்கள் இடம் பெற்றிருந்தன. இந்த எண்ணிக்கை கடந்த ஐந்து ஆண்டுகளில் கடுகதி வேகத்தில் அதிகரிக்கத் தொடங்கியது.

உலக மொழி கண்காணிப்பகம் பன்னாட்டளவில் பிரபலம் அடையும் சொற்கள், அவை எம்மொழி சொற்களானாலும், அவற்றை ஆங்கிலச் சொற்களாக ஏற்றுக்கொள்கிறது. அதற்கான தகுதரமாக ஒரு சொல் உலகளவில் 25,000 ஆயிரம் தடவைக்கும் மேலாக குறிப்புகள், மேற்கோள்கள் உடன் பயன்பாட்டில் பரிச்சயம் அடைய வேண்டும். அவ்வாறு பரிச்சயம் அடையும் சொல்லிற்கான விளக்கங்களை வழங்கி, இலக்க வரிசையில் ஆங்கிலச் சொல்லாக ஏற்று அறிவித்து வருகின்றது.

அன்மையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சொற்கள்:

999,991: Sexting
999,992: Greenwashing
999,993: Octomom
999,994: Slow Food
999,995: Carbon Neutral
999,996: Cloud Computing
999,997: Slumdog
999,998: NOOb
999,999: Jai Ho!

ஹொலிவூட் (Hollywood) திரைப்படத் துறையூடாக பிரபலம் அடையும் சொற்களை ஹொலிவேட்ஸ் (Hollywords) என பட்டியலிட்டு வருகின்றது. அவ்வாறு ஏற்றுக்கொள்ளப்பட்ட சொற்களே 'Slumdog, Jai Ho!' போன்றவைகளாகும்.

இணையப் பயன்பாட்டின் ஊடாக பயனர்களிடையே பிரபலம் அடையும் சொற்களைக் கண்காணித்து அவற்றையும் ஆங்கிலச் சொற்களாக ஏற்றுக்கொள்கிறது.

சாதனைத் தமிழர் ஆங்கிலச் சரித்திரத்தில்
-------------------------------------------------------------------------------------
தமிழ் இசை உலகில் ஒஸ்கார் விருது பெற்ற சாதனைத் தமிழர் ஏ. ஆர். ரஹ்மானின் பாடல் பன்னாட்டளவில் பிரசித்திப்பெற்றதால்; “ஜெய் ஹோ!” (Jai Ho!) எனும் சொல்லை, உலக மொழி கண்காணிப்பகம் 999,999 வது ஆங்கிலச் சொல்லாக ஏற்றுக்கொண்டுள்ளது.

அதனடிப்படையில் ஆங்கில மொழி சரித்திரத்திலும் ஏ. ஆர். ரஹ்மான் இடம் பிடித்து விட்டவர் ஆவார்.

999,999: Jai Ho!

'Jai Ho!' இச்சொற்றொடருக்கான பொருள்; வெற்றியின் மகிழ்ச்சியை குறிக்கும் (ஆரவாரச்சொல்) ஒரு வியப்புச் சொற்றொடர் என விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. (The Hindi phrase signifying the joy of victory.)

ஆம்! 2009 ஜூன் 10 ஆம் நாள், GMT நேரப்படி முற்பகல் 10.22 க்கு, 1,000,000 இலட்சம் சொற்களை உள்ளடக்கிக்கொண்டது. (The English Language passed the Million Word threshold on June 10, 2009 at 10:22 a.m. (GMT). The Millionth Word was the controversial ‘Web 2.0′.)

அந்த பத்து இலட்சமாவது ஆங்கிலச் சொல்:

1,000,000: Web 2.0

'வலை 2.0' (Web 2.0) உலக விரிவு வலையின் அடுத்த தலைமுறையினருக்கான இணையப் பயன்பாட்டைக் குறிக்கும் ஒரு தொழில் நுட்பச் சொல்லாக அறிவித்துள்ளது. (Web 2.0 is a technical term meaning the next generation of World Wide Web products and services.)

இதோ அந்த உலக மொழி கண்காணிப்பகத்தின் தலமை அதிகாரியும் தலமை சொல் ஆய்வளருமான பவுல் ஜே. ஜே. பேயாக் (Paul J. J. Payack) அவர்களின் 1,000,000 இலட்சம் சொல்லின் பிரகடனப் பதிவும் காணொளியும்.

சரி! பத்து இலட்சத்து ஒன்றாவது ஆங்கிலச் சொல் எது என்று தெரியுமா?

1,000,001

'Financial Tsunami'

'சுனாமி' (Tsunami) எனும் சொல், ஒரு ஜப்பானிய மொழிச் சொல்லாகும். இச்சொல் அநேகமான தமிழர்களுக்கு கமலஹாசனின் 'அன்பே சிவம்' திரைப்படத்தின் பின்னரே அறிமுகமானச் சொல்லாக இருந்திருக்கும். அச்சொல்லையும் இன்று ஒரு ஆங்கிலச் சொல்லாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அவ்வாறே அன்மையில் 'Financial Tsunami' எனும் சொல்லும் 1,000,001 ஆம் சொல்லாக அறிவிக்கப்பட்டுள்ளது.

"ஒபாமா" (Obama) ஒரு புதிய ஆங்கிலச் சொல்
-------------------------------------------------------------------------------------
அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவின் பெயர் உலகளவில் பிரபலம் அடைந்ததைத் தொடர்ந்து, கடந்த 2008 பெப்ரவரி 20 ஆம் நாள் "Obama" என்பதனையும் ஒரு புதிய ஆங்கிலச் சொல்லாக உலக மொழி கண்காணிப்பகம் அறிவித்தது. (GLM announced that the latest word to enter the English language was "obama") அத்துடன் "Obama" எனும் சொல்லை ஒரு வேர்சொல்லாகவும், அதனுடன் தொடர்புடையச் சொற்களை கிளைச்சொற்களாகவும் பட்டியலிட்டுள்ளது. அவைகளாவன:

Obama
Obamanomics
Obamican
Obamamentum
Obamacize
Obamarama
ObamaNation
Obamafy
Obamamania
Obamacam

இவ்வாறு ஆங்கிலம் இன்று உலகில் அதிகச் சொற்களைக் கொண்ட மொழியாக, பத்து இலட்சம் சொற்களுக்கும் அதிகமான சொற்களை உள்ளடக்கிக்கொண்டு, உலகப் பொது மொழியாக உயர்ந்து நிற்கின்றது. தற்போது உலக வரலாற்றில் ஒரு மில்லியன் சொற்களைக் கொண்ட ஒரே மொழி ஆங்கிலம் மட்டும் தான்.

சரி! இன்று இப்பதிவிடும் இந்த நொடியில் ஆங்கிலத்தில் எத்தனை சொற்கள் பெருகியுள்ளன தெரியுமா?

ஆங்கில மொழி கடிகாரத்தில் 1,005,366 சொற்கள் பதிவாகியுள்ளன.

மேலும் விபரங்களுக்கு: http://www.languagemonitor.com/

நன்றி

அன்புடன்
அருண் HK Arun Download As PDF

ஆங்கில இலக்கணம் பிடிஎப் கோப்புகள் (Download As PDF - Free)

உலகத் தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்

எமது ஆங்கிலம் வலைத்தளம் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதலிருந்தே, ஆங்கிலப் பாடங்களை PDF கோப்புகளாக பலரும் கேட்டு வருகின்றனர். பலர் தனிப்பட்ட மின்னஞ்சல் ஊடாகத் தொடர்பு கொண்டும் கோரி வருகின்றனர். சில ஆசிரியர்கள் தமது வகுப்புகளில் எமது பாடங்களை பயனபடுத்துவதற்காக PDF கோப்பு வடிவமாக கேட்பவர்களும் உளர். அவ்வாறு வழங்குவதற்கான வழிகள் இருந்தப் போதும் நாம் இதுவரை முயற்சிக்கவில்லை.

Scribd போன்ற தளங்களில் பதிவேற்றி PDF கோப்புகளாக எளிதாக வழங்க முடியும். ஆனால் அங்கே எமது அனுமதியும் இன்றி இத்தளத்தின் பாடங்களை சிலர் திருட்டுத்தனமாக பதிவேற்றி இருப்பவற்றையும் காணக்கிடைக்கின்றன.

"தமிழ்மண பதிவுப் பட்டைக் கருவியை ஆக்கம் செய்தால்,வேண்டுபவர்கள் ப்டிஎப்'ல் சேமித்துக் கொள்வார்களே?" என்று அன்பர் "அறிவன் ஆரம்பத்திலேயே கேட்டிருந்தார். அதற்கமைய தமிழ்மண கருவிப்பட்டையை இணைத்து பார்த்ததில், நாம் இடும் இடுகையின் தோற்றத்திற்கு மாறாக வேறு வடிவில் தோற்றமளிப்பது தெரியவந்தது. (பதிவர்கள் பலரும் அறிந்திருப்பீர்கள்) இது என்னை கவரவில்லை. எனவே அதனை பரீட்சார்த்த முயற்சியுடன் நீக்கிவிட்டேன்.

அன்மையில் tvs50 இன் ஓர் இடுகை அளித்த தகவலை பரீட்சித்துப் பார்த்ததில், பெறப்படும் PDF கோப்பு வடிவம், எமது வலைத்தளத்தின் தோற்றத்தினையோ, இடுகையின் தோற்றத்தினையோ சிதைக்காத வண்ணம் நிறைவாக இருந்தது.

எனவே அத்தகவலின் உதவியுடன் தற்போது இத்தளத்தில் PDF கோப்பு வடிவில்; எமது ஆங்கில இலக்கணப் பாடங்களை பதிவிறக்கிக்கொள்வதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. வேண்டப்படுவோர் உங்கள் கணினிகளில் பதிவிறக்கி பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதை மகிழ்வுடன் அறியத் தருகின்றோம்.

ஒவ்வொரு இடுகையின் அடியிலும் Download as PDF என காணப்படும் சுட்டியை சொடுக்கி பதிவிறக்கி பயன்பெறுங்கள். (Right Click > Save Target As > Save)

நன்றி

அன்புடன்

அருண் HK Arun Download As PDF

ஆங்கிலம் - இரண்டாம் ஆண்டு நிறைவு

வணக்கம் உலகத் தமிழ் உறவுகளே!

இன்று கார்த்திகை 29 ஆம் நாள். இன்றுடன் எமது வலைத்தளம் இரண்டாம் ஆண்டை நிறைவுசெய்து தனது மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது. இந்நாளில் எமது இத்தளத்தின் வளர்ச்சிக்கு தொடர்ந்து பங்காற்றி வரும் உறவுகள், வருகையாளர்கள், ஆங்கிலம் கற்கும் ஆர்வலர்கள் அனைவருக்கும் நாம் எமது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றோம். எமது தளத்திற்கு இணைப்பு வழங்கி எம் தளத்தை மெம்மேலும் பலரது பார்வைக்கு கொண்டு செல்ல உதவிய திரட்டிகள், சக வலைத்தளப்பதிவர்கள், இணையத்தளங்கள், மன்றங்கள், குழுமங்கள், கருத்துக்களங்கள் போன்றவற்றிற்கு எமது சிறப்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

நிறைவுற்ற இவ்வாண்டில் எம்மால் அதிகமானப் பாடங்களை வழங்கமுடியாமல் போயிற்று அதற்காக வருந்துக்கின்றோம். ஒன்று, இரண்டு பதிவுகளாகவே ஆண்டு நிறைவுற்றும் போயிற்று. ஆகஸ்ட் மாதம் மட்டுமே ஆகக்கூடியப் பதிவுகளாக 4 பதிவுகள் இடப்பட்டுள்ளன. இவ்வாறு இத்தளத்தின் மெதுவோட்டம் இன்றுடன் இரண்டாம் ஆண்டை நிறைவுசெய்கின்றது. இருப்பினும் இத்தளம் பலரையும் ஈர்த்து பார்வையாளர்களின் எண்ணிக்கையைக் கூட்டி வருகின்றமை மகிழ்வைத் தருகின்றது. கடந்த ஆண்டு நிறைவுறும் பொழுது ஒரு நாளுக்கு சராசரியாக 500 பக்கப்பார்வைகள் மட்டுமே எமது தளத்திற்கு கிடைத்தன. ஒரு சில நாட்களில் மட்டும் எண்ணிக்கை ஆயிரமாக உயர்ந்தது. அது ஆச்சரியத்தை தந்தது. ஆனால் தற்போது ஆயிரத்தை அன்மிக்காத நாட்களே இல்லை என்றாகிவிட்டது. மாத எண்ணிக்கையாக கடந்த ஆண்டு ஆக கூடுதலாக 20,780 வருகைகள் என வருகைக்கணிப்பான் காண்பித்தான். இவ்வெண்ணிக்கை படிப்படியாக வளர்முகம் காட்டி இம்மாதப் பக்கப்பார்வைகளின் எண்ணிக்கை 50,000 ஆயிரத்திற்கும் மேலாக உயர்ந்துச்செல்கின்றது. மொத்தப் பக்கப்பார்வைகள் அரை மில்லியனை கடந்துச்செல்கின்றது. இவைகளே எம் தளத்திற்கு கிடைக்கும் சான்றாக நாம் கொள்கின்றோம். இது இன்றைய உலகின் முன்னோக்குகளுக்கு ஆங்கில மொழியின் அத்தியாவசியத்தையும், அதனை கற்க முனைவோரின் முனைப்பையும் காட்டுகின்றது.

வருகைத்தருவோர் அதிகமானோர் தமிழகத்தில் இருந்தே வருகின்றனர். கடந்த ஆண்டில் 85% வீதமானோர் தமிழகத்தில் இருந்து வருகைத்தந்திருந்தனர். இலங்கையில் இருந்து வருகைத்தந்திருந்தவர்கள் சராசரியாக 7% வீதமாக மட்டுமே இருந்தது. இவ்வாண்டு அது 30% வீதமாக உயர்ந்துள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் வருகைத்தரும் தமிழ் உறவுகளுக்கு; இத்தளத்தின் ஊடாக ஆங்கிலம் கற்பிக்கும் பணியை செய்ய, பேருதவியாய் அமைந்த கூகிள் நிறுவனத்தின் “ப்ளொக்” சேவைக்கு நன்றியும் கடமையும் உள்ளவனாகின்றேன்.

அதேவேளை எமது தளத்தின் பெயரான aangilam.blogspot.com என்பதைத் தவிர;

ஆங்கில
ஆங்கிலம்
ஆங்கிலம் கற்க
aangilam
aangilam.blog
Learn English grammar through Tamil

போன்ற சொற்களில் தேடினால்; கூகிள், யாஹூ, எம்எஸ்என் போன்ற முன்னனி தேடுப்பொறிகள் எமது தளத்தினையே முதல் தெரிவாகக் காட்டி வருகின்றன. அவற்றிற்கும் எமது நன்றிகள் உரித்தாகுக. (நேரடியாக தளத்திற்கு வரிகைத்தருவோரே அதிகமானோர். கணிசமானோர் தேடுப்பொறியூடாகவும் வந்தடைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.)

வேண்டுகோள்களும் பரிந்துரைகளும்

நூல் வடிவில் ஆங்கிலப் பாடங்களை பலர் கேட்டுவருகின்றனர். அதற்கான முயற்சியில் கடந்த ஆண்டு ஈடுப்பட்டிருந்தாலும், அதனை நிறைவு செய்ய முடியாத மனநிலைக்குள்ளும் வெறுமைக்குள்ளும் தள்ளப்பட்டிருந்தமையினால் அப்படியே கிடப்பில் போடக் காரணமாகியது. இருப்பினும் எதிர்வரும் ஆண்டில் அதற்கான முயற்சிகளில் இறங்கலாம் எனும் எண்ணம் உள்ளது. அதேவேளை எமது மொழிப்பெயர்ப்பு தொடர்பில் சில வேண்டுகோள்களும் பரிந்துரைகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. அவைத்தொடர்பில் கவனம் எடுக்கப்படும். இருப்பினும் சில விளக்கங்கள் இங்கே...

எந்தமிழ் சிறப்பும் எம்மொழிப் பெயர்ப்பும்

உலகின் ஒவ்வொரு மொழிகளுக்கும் ஒவ்வொரு சிறப்பு உள்ளது. எம்தமிழ் மொழிக்கென தனிச்சிறப்புகள் பல உள்ளன.

அவற்றில் சில:

I love you mother
நான் உன்னில் அன்பாக இருக்கிறேன் அம்மா
(இவ்வாறு தமிழர்கள் கூறும் வழக்கம் இல்லை. இதனை எமது தமிழ் வழக்கிற்கு ஏற்ப “எனது அன்பு அம்மா” என்று நாம் கூறுவதற்கு இணையான சொல்லாடலாகக் கொள்ளலாம்.)

I love you my son
நான் உன்னில் பாசமாக இருக்கிறேன் எனது மகனே.
(இவ்வாறும் நாம் கூறும் வழக்கம் இல்லை. இதனை “எனது செல்ல மகனே” என்பதாகக் கொள்ளலாம்.)

I love my motherland
நான் எனது தாயகத்தை நேசிக்கிறேன்.
("நான் எனது தாய் நிலத்தின் மீது பற்று வைத்துள்ளேன்" என்பதற்கு இணையான சொல்லாடல்)

I love you
நான் உன்னை காதலிக்கிறேன்.
(இது எல்லோருக்கும் தெரிந்திருக்கும்)

I love Indian foods.
நான் விரும்புகிறேன் இந்திய உணவுகளை.
(இங்கே விருப்பத்தை தெரிவிக்கவும் "Love" பயன்படுகின்றது.)

இவ்வாறு அன்பு, பாசம், காதல், நேசம் (பற்று), விருப்பு போன்று ஒவ்வொரு தமிழ் சொற்களும் அதனதன் பொருளை அழகாக வெளிப்படுத்துக்கின்றன. இதுவே எந்தமிழின் சிறப்பாகும். ஆனால், ஆங்கிலத்திலோ LOVE எனும் ஒற்றைச் சொல்லே எல்லாவிடங்களிலும் பயன்படுகின்றது. இவ்வாறான தனிச்சிறப்புக்கள் ஒவ்வொரு மொழியிலும் இருக்கின்றன.

இவற்றை ஏன் இங்கு குறிப்பிடுகிறேன் என்றால்; ஒரு ஆங்கில ஆக்கத்தை மொழியாக்கம் செய்வதானால்; ஒவ்வொரு மொழியும் தனக்கே உரிய தனித்துவங்களோடு மொழியாக்கம் செய்தலே சிறப்பானது. ஒரு ஆங்கிலக் கட்டுரையை தமிழாக்க முனைவதானால்; முதலில் அக்கட்டுரையை வாசித்து, அதனை அப்படியே உள்வாங்கிகொண்டு, பின் தமிழுக்கு ஏற்ற நடையில், தமிழர் எளிதில் விளங்கிக்கொள்ளும் வகையிலேயே எழுதவேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் என்னிடமில்லை. எடுத்துக்காட்டாக: “I love you my son” என்பதற்கு “எனது செல்ல மகனே” என்பதுப்போன்று தமிழாக்கமும் செய்யலாம். ஆனால் ஆங்கிலம் கற்பிக்கும் பொழுது அவ்வாறு கற்பித்தல் முறையற்றது.

I love you my son
“நான் உன்னில் அன்பாக இருக்கிறேன் எனது மகனே” எனும் வாக்கியத்தில் ஒவ்வொரு ஆங்கில சொல்லும் எவ்வாறு தமிழில் பொருள் தருகின்றது என்பதை முதலில் கற்றுத்தெளிந்தால், அதன்பின் தமிழ்நடைக்கு ஏற்ப எம்மால் எளிதாக விளங்கிக்கொள்ளலாம். இதனை தான் நாம் பொருளுணர்ந்து கற்றலே முதலில் அவசியம் என்கின்றோம்.

பொருளுணர்ந்து கற்றலின் அவசியம்

பொருளுணர்த்தி கற்கப்படாவிடின் அது என்ன விளைவுகளை தோற்றுவிக்கும் என்பதை விளக்கும் வகையில் அன்மையில் ஒரு நூலில் பார்த்த ஒரு சொல்லை மட்டும் எடுத்துக்காட்டாக முன்வைக்கின்றேன்.

"Can I help you?" என்பதற்கு
"உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமா?" என்று தமிழாக்கம் செய்யப்பட்டிருந்தது. இதை நான் பிழையென்று கூறவில்லை. எனிலும், சரியான பொருளுணர்ந்து கற்பதற்கு இவ்வாறான தமிழாக்கம் தடையாகின்றது.

Can I help you?
"என்னால் உனக்கு உதவ முடியுமா? என உதவிச்செய்வதற்கும் அனுமதி கோரும் வகையில் இக்கேள்வி தொடுக்கப்படுகின்றது." என்பதை முறையாகக் கற்பிக்கலாமே. இதனை Polite and More Polite பாடத்தில் பார்க்கலாம். ("உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமா?" எனும் தமிழ் வாக்கியத்திற்கு இணையாக "Do you want any help?" எனும் ஆங்கில வாக்கியமே சரியானது.)

இதனால் தான் நாம் ஆங்கில வழிக்கு ஏற்ப தமிழாக்கம் செய்து கற்பிக்கின்றோம்.

தமிழ் - தமிழர் - ஒரு சம்பவம்

அன்மையில் ஹொங்கொங்கில் ஒரு கிருஸ்தவ தமிழ் பாதிரியாரைச் சந்திக்கக் கிடைத்தது. தமிழகத்தில் இருந்து வந்திருந்தார். அவருடன் பேசும் பொழுது நான் தமிழிலேயே பேசினேன். அவர் தொடர்ந்து ஆங்கிலத்திலேயே உரையாடினார். நான் ஒரு கட்டத்தில் "உங்களுக்கு தமிழ் தெரியாதா?" என்றேன், அவர் அதற்கு "தெரியும் (But) பட்டு..." என்று இழுத்த இழுவையில் மீண்டும் அவர் நாவிலிருந்து தமிழ் வரவில்லை.

இவ்வாறான பலரை சந்தித்துள்ளேன். இவர்கள் தமிழில் பேசுவதையே தாழ்வாக உணர்கின்றனரோ எனத் தோன்றுகின்றது! தமிழின் சிறப்பறிந்த இத்தாலியப் பாதிரியார் (Costanzo Giuseppe Beschi) தமிழுக்கு செய்த அரும்பணிகளையும் நினைத்துப்பார்க்கிறேன். அந்நிய மொழியினருக்கு தெரிந்த எந்தமிழின் சிறப்பு, ஏனோ எம்மவர்களுக்கு தெரிவதில்லை!

தமிழுக்கு இந்த நிலை என்றால், தமிழரின் நிலை?

அமெரிக்கக் குடியும் தமிழ் குடியும் (திரைப்படம்)

2003 ஆம் ஆண்டு திரையிடப்பட்ட Bruce Wills நடித்த ஒரு திரைப்படத்தை அன்மையில் பார்த்தேன். அத்திரைப்படத்தின் கதை அமெரிக்கப் பெண் ஒருத்தி மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியா சென்று போர் பகுதிக்குள் சிக்கிக்கொள்கின்றார். அங்கே ஓர் இனவழிப்பு போர் நடந்தவண்ணம் உள்ளது. அதற்குள் சிக்குண்டு இருக்கும் அமெரிக்கப் பெண்ணை மீற்பதுதான் கதை. அமெரிக்கா அதற்காக ஒரு படையணியையே களமிறக்கி மீற்பு நடவடிக்கையை மேற்கொள்கின்றது. இவ்வாறு அத்திரைப்படத்தின் கதை நகர்கின்றது… படத்தின் பெயர் (Tears of the Sun) அதன் தமிழ் பொருள் "சூரியனின் கண்ணீர்துளிகள்". அதாவது அங்கு நடக்கும் கொடுமைகள் சூரியனின் கண்களில் இருந்தே கண்ணீர் துளிகளை சிந்தவைக்கிறது என்பது போல் பெயரிடப்பட்டுள்ளது. (தமிழர் கொடுமைப்பட்டால் எந்தச் சூரியனில் இருந்தும் கண்ணீர் வராது போலும்!) இதில் சிந்தனைக்குரியது என்னவென்றால்; அமெரிக்க நாட்டின் ஒரு குடியினை மீற்க ஒரு படையணியையே களமிறக்குவது போன்ற அத்திரைப்படத்தின் மூலக்கதை, அந்நாட்டின் ஒவ்வொரு குடிமகனதும் உயிர் எந்தளவு மதிக்கப்படுகின்றது என்பதை வெளிப்படுத்துகிறது.

அதேவேளை இலங்கை குடியுரிமை பெற்று வாழும் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் கொன்றுக்குவிக்கப்பட்டும் கேட்பதற்கு ஒருவரும் இல்லையென்றாகின்றது. அட! இலங்கையில் தான் இந்த பேரவலம் என்றால், இந்தியாவின் தென்முனையில் தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டாலும் அதே நிலைமைத்தான்.

"செம்மொழியான தமிழை, இந்திய அரசே உடனே அங்கீகாரம் கொடு" என தமிழ் செம்மொழி போராட்டக் குழு போராட வேண்டியிருந்தது.

"முற்கம்பி வேலிக்குள் முடக்கப்பட்டிருக்கும் தமிழரை விடுவி" என உலகத்தமிழினமும் பன்னாட்டு அரசுகளும் அழுத்தம் கொடுக்க வேண்டியுள்ளது.

உண்மையில் தமிழரான நாம் எந்த நாட்டு குடிகள் என்பதை, சற்று சிந்திக்கத்தோன்றுகிறது!? நினைத்தால் மனம் கனக்கின்றது.

சரி! இரண்டாம் ஆண்டு நிறைவு பதிவு என்று என்னென்னவோ பேசியுள்ளேன். தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டுங்கள். இது இரண்டாம் ஆண்டு நிறைவு நாள் பதிவு என்றல்லாமல், ஒரு துணுக்குப் பாடத்தையும் இத்துடன் வழங்குகின்றோம்.

ஒலிப்பொழுக்கம்

தமிழ் ஒரு ஒலிப்பொழுக்கம் (Phonetic Language) மிக்க மொழி. ஆங்கிலம் ஒரு ஒலிப்பொழுக்கமற்ற மொழி என்பதை ஆங்கிலம் முறையாகக் கற்றோர் அறிவர். ஆங்கிலத்தில் "OUGH" எனும் எழுத்துக்களை எடுத்துக்கொண்டால்; இவ்வெழுத்துக்கள் எப்பொழுதும் ஒரே மாதிரியாக ஒலிப்பதில்லை. ஏழு வெவ்வேறு ஒலிப்புக்களை தருகின்றன. இவற்றை சரியாக விளங்கிக் கற்க வேண்டுமானால் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

எடுத்துக்காட்டுகள்:

1. though - தோ
தமிழில் “அதோ, இதோ” என்பதில் ஒலிக்கும் “தோ” போன்று ஒலிக்க வேண்டும்.

2. through – த்ரூ
“ரூபா” என்பதில் வரும் “ரூ” போன்று ஒலிக்க வேண்டும்.

3. cough – கfப்
இதில் “fப்” என்ற மென்மையான ஒலிப்பைத் தரும். (ஆங்கிலச்சொல்லான “of, offer” என்பதற்கு இணையான ஒலிப்பு)

4. rough - றffப்
இதில் வரும் “ufப்” எனும் சத்தம் சற்று அழுத்தமாக வரும். (“Suffer” என்பதில் வரும் “uff” என்பதுப்போன்று ஒலிக்கும்)

5. plough – ப்லfவ்
(“flower” என்பதில் ஒலிக்கும் “ow” என்பதுப்போன்ற ஒலிப்பு)

6. ought - ஓட்
(இதனை “ஓ” என ஒலிக்க வேண்டும்.)

7. borough - Bபொறோ
இச்சொல் “above” என்பதில் வரும் "Bபோ(வ்)" என்பதுப் போன்று ஒலிக்க வேண்டும்.

இங்கே நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால்; ஆங்கில எழுத்துக்களை வைத்து அதன் ஒலிப்புகள் இப்படித்தான் இருக்கும் என திட்டவட்டமாக வரையரை செய்துவிடமுடியாத சொற்களும் உள்ளன என்பதாகும். இவ்வாறான சொற்களை பயிற்சி செய்து பெற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

ஆங்கிலம் இன்றைய உலகில் தவிர்க்க முடியாத மொழியாகியுள்ளது. அதனை முறையாக கற்பதால் நாமும் பல வளர்ச்சிப்படிகளை எட்டலாம். எனவே அவற்றை முறையாகக் கற்க வேண்டிய கட்டாயத் தேவை எல்லோருக்கும் உண்டு. இருப்பினும் நாம் எம் தமிழுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றும், நாம் கற்கும் ஆங்கில அறிவின் பயனும் ஏதாவது ஒரு வகையில் எம் தமிழுக்கு கிட்ட, நாம் முயற்சிகள் எடுக்க வேண்டும் என்றும் எமது தளத்தில் ஆங்கிலம் கற்கும் ஒவ்வொருவரிடமும் கேட்டுக்கொள்கின்றேன்.

மீண்டும் எமது அடுத்தப்பாடத்தில் (மூன்றாம் ஆண்டில்) சந்திப்போம்.

மீண்டும் அனைவருக்கும் எமது மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக்கொண்டு விடைப்பெறுகின்றோம். இந்த இரண்டாம் ஆண்டு நிறைவு நாளின் இத்தளத்தின் குறைகளையும் நிறைகளையும் பகிர்ந்துக்கொள்ளும் படி கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி

அன்புடன் அருண் HK Arun

Download As PDF

மீள்பதிவிடுவோர் கவனத்திற்கு

இந்த "ஆங்கிலம்" வலைத்தளத்தில் எழுதுபவை; நாம் மற்றத் தளங்களில் எழுதுவது போலன்றி அதிக நேரத்தை செலவிட்டே ஒவ்வொரு பதிவையும் பதிவிடப்படுகின்றது. இவை ஆங்கில இலக்கணம் சார்ந்த பதிவுகள் என்பதால் கூடுதல் கவனத்துடன் பதிவேற்றப்படுகின்றன. இதன் மூலம் எமக்கு கிடைக்கப் பெறுவது; இன்றைய தொழில் நுட்ப உலகில், ஆங்கில மொழி அத்தியாவசியம் ஆகிவிட்ட நிலையில், அதனை கற்க விரும்பும் ஆர்வலர்களுக்கும் மாணவர்களுக்கும் எம்மால் இயன்ற இச்சிறு பணியை செய்ய வாய்ப்பு கிட்டியுள்ளது எனும் ஆத்ம திருப்தியும், ஆங்கில மொழி கல்வியின் அவசியம் உணர்ந்து அதிகரித்து வரும் வருகையாளர்களின் எண்ணிக்கை தரும் மனநிறைவும் ஆகும்.

ஆனால் தொடர்ந்து நடைப்பெற்று வரும் சிலரது செயல்பாடுகள் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை.

இத்தளத்தின் பதிவுகள் பதிவுகளாகவே அல்லாமல் பாடங்களாக இருப்பதனால்; இதன் பயன்பாடு பலரையும் சென்றடை வேண்டும் எனும் நன்நோக்கின் அடிப்படையில் சக வலைப்பதிவர்கள், இணையத்தளத்தினர், மன்றத்தினர், குழுமத்தினர் என பலரும் இத்தளத்திற்கு இணைப்பு வழங்கி பலரதும் பயன்பாட்டிற்கு கொண்டுசென்றுள்ளனர். அவற்றில் சில தளங்கள் ஒரு பாடத்தை அல்லது ஒரு பாடத்தின் ஒரு பகுதியை மட்டும் இட்டு எமது தளத்திற்கு இணைப்பு வழங்கியிருப்பவற்றையும் காணக்கிடைக்கின்றன. இவை நியாயமான செயல்பாடுகளாகும். சிலர் தங்கள் தளங்களின் ஊடாக பதிவிட்டு இத்தளத்தை மேலும் பலருக்கு அறிவித்தும் வருகின்றவர்களும் உளர். இவர்கள் அனைவருக்கும் நாம் என்றும் நன்றியுடைவனாக இருக்கின்றோம்.

ஆனால் சிலர் இத்தளத்தின் பதிவுகளை எமது அனுமதியும் இன்றி அப்படியே வெட்டி ஒட்டி மீள்பதிவிடுவதை தொடராகவே செய்து வருகின்றனர். இது முற்றிலும் நியாயமற்ற செயல்பாடுகள் ஆகும்.

நியாயமற்ற செயல்பாடுகள் என நாம் வரையரை செய்வது:

01. வெட்டி ஒட்டுதல் எனும் நோக்கில் பதிவுகள் சீர்குழைக்கப்படல்.

02. முழுப்பதிவையும் மீள்பதிவிடல்.

03. தளத்தின் பெயர் அல்லது இணைப்பு (URL) கொடுக்கப்படாமல் மீள்பதிவிடல்.

04. மீள்பதிவிடுதல் குறித்து அறியத்தராமல் மீள்பதிவிடல்.

05. உள்ளடக்கங்களை திருடி சுயபதிவாக மாற்றியமைத்தல்.

06. தளத்தின் (இணைப்பு வழங்கபட்டிருந்தாலும்) அனைத்து பதிவுகளையும் தொடர்ந்து மீள்பதிவிட்டு வருதல்.

இவ்வாறான செயல்பாடுகள் எமது அதிக நேர உழைப்பு; சிலரின் சில நொடிப் பொழுதின் வெட்டி ஒட்டுதலால் சிதைக்கப்படுவதாகவே நாம் கருதுகின்றோம். தவிர பதிவுகள் சீர்குழைக்கப்படும் வகையில் மீள்பதிவிடுதல் என்பது எவருமே பயன்பெற முடியாத ஒன்றாகும். இதனால் எவருக்கும் எந்த பயனும் இல்லை. சில தளங்கள் ஓரிரண்டு பதிவுகள் மட்டுமன்றி, ஒட்டுமொத்தமாக அனைத்து பாடப் பயிற்சிகளையுமே மீள்பதிவாக இட்டு வருகின்றன. இவை முற்றிலும் நியாயமற்ற மோசடியான செயல்பாடாகவே நாம் கருதுகிறோம். அன்மையில் அதிர்ச்சி அடைய வைத்த ஒரு நிகழ்வும் உண்டு. எமது தளத்தில் பதிவிட்டு சில நிமிடங்களிலேயே அப்பதிவு இன்னொரு தளத்தில் வெட்டி ஒட்டுதல் நடந்தேறியிருந்தது. மேலும் அவ்வலைத்தளத்தைப் பார்வையிட்டதில் எமது தளத்தில் இருக்கும் அனைத்து பதிவுகளும் அங்கேயும் காணப்படுகின்றன. இது முற்றிலும் நியாயமற்றதும் நாகரீகமற்றதுமான செயல்பாடாகும். இன்னும் சில தளங்களில் இப்பதிவுகள் தமது பதிவுகளாக தோற்றம் காட்டுவதும் நடைப்பெற்றுள்ளன. குறிப்பிட்டு காட்டுவதற்கு ஒன்றிரண்டு தளங்கள் என்றல்லாமல் எண்ணற்ற தளங்கள் இப்படித்தான் செய்துள்ளன. இதனை ஒரு வகையில் அறிவு திருட்டு என்றும் கூறலாம். இவை எமது தளத்திற்கான வருகையாளர்களை திசைமாற்றும் செயல்பாடாகவும் மாறிவிடுகிறது. மீள்பதிவிடுவோர் ஓர் ஆர்வத்தின் வெளிப்பாடாக செய்திருந்தாலும் கூட.

எனவே இவ்வாறு செய்த நண்பர்கள், அறியாமல் செய்திருந்தாலோ அல்லது ஆர்வத்தின் வெளிப்பாடாக செய்திருந்தாலோ இதன் பிறகு இவ்வாறு செய்ய வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றோம். அத்துடன் இவ்வறிவித்தலும் உங்களுக்காகவே விடுக்கப்படுகின்றது.

அறிவித்தல்

எமது ஆங்கிலம் வலைத்தளத்தின் பாடப் பயிற்சிகளை பத்திரிக்கைகள், சஞ்சிகைகள், இணையத்தளங்கள், வலைப்பதிவுகள், கருத்துக்களங்கள், மன்றங்கள் போன்றவற்றில் மீள்பதிவிடுவோர் தயவு செய்து எமது வலைத்தளத்தின் பெயரை (aangilam.blogspot.com) கட்டாயம் இட்டே மீள்பதிவிட வேண்டும் என அறியத் தருகின்றோம். அவ்வாறு மீள்பதிவிடுவோர் எமது மின்னஞ்சல் (arunhk.info AT gmail.com) ஊடாகவோ அல்லது குறிப்பிட்ட பாடத்தின் பின்னூட்டமாகவோ அறியத் தர வேண்டும். குறிப்பாக இணையத்தில், இப்பாடங்கள் பலருக்கும் பயன்பட வேண்டும் எனும் நன்நோக்குடன் நீங்கள் மீள்பதிவிடுபவராக கருதலாம். அவ்வாறாயின் பாடங்களின் ஒரு பகுதியை மட்டும் இட்டு, எமது தளத்திற்கு இணைப்பு வழங்குங்கள். தயவு செய்து முழுப் பாடங்களையும் அப்படியே வெட்டி ஒட்டுவதைத் தவிர்க்கவும்.

நன்றி

அன்புடன் அருண் HK Arun Download As PDF

ஆங்கில உச்சரிப்புப் பயிற்சி (Pronunciations)

ஆங்கில மொழி கற்கும் நாம், ஆங்கிலம் பேசும் பொழுது ஆங்கில உச்சரிப்புக்களை சரியாக உச்சரிக்க வேண்டும் எனும் எதிர்ப்பார்ப்பு பொதுவாக அனைவரிடமும் காணப்படுவதுதான். அதற்கு ஆங்கில சொற்களின் ஒலிப்பை துல்லியமாக கற்பிப்போரைப் பின்பற்றியே பயிலவேண்டும்.

தாய்மொழி ஆங்கிலேயரின், ஆங்கில மொழி கல்வி கூடங்களில், ஆரம்பக் கல்வி முதலே உச்சரிப்பு பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து கற்பிக்கப்படுகின்றது. சிலவேளை உங்களில் யாரேனும் ஒருவர் ஆங்கில இலக்கணம் கற்றும், சரியான ஆங்கில உச்சரிப்பைப் பெறமுடியாது போயிருந்தால் அதற்கான காரணம், நீங்கள் ஆங்கிலம் கற்ற கல்வி கூடங்களும், உங்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர்களுமே ஆகும்.

அவ்வாறு ஆங்கில மொழியை ஒலிப்புத் துல்லியத்துடன் பேசமுடியாதவர்கள் அல்லது பேசவிரும்புவோர் இதோ இந்த இணைப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஒவ்வொரு சொல்லையும் எவ்வாறு உச்சரிக்கவேண்டும், ஒலிப்புக்களின் போது ஏற்ற இறக்கங்கள் எவ்வாறு அமையவேண்டும் என்பதனையும் இக்காணொளிகள் தெளிவாக்குகின்றன.

உதட்டசைவு
பல்லசைவு
தாடையசைவு
நாக்கசைவு
முகத்தசைகளின் அசைவு

என ஒவ்வொன்றின் அசைவுகளுடன் ஒவ்வொரு சொல்லும் எவ்வாறு உச்சரிக்கப்பட வேண்டும் என அழகாக உச்சரித்துக்காட்டப்படுகின்றது.

எடுத்துக்காட்டாக இக்காணொளியைப் பாருங்கள்



இந்தக் காணொளியை ஒரு எடுத்துக்காட்டிற்காகவே இங்கு இட்டுள்ளேன். இதைப்போன்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சொற்களை Daily Pronunciation என ஆங்கில உச்சரிப்புக்களை இத்தளத்தில் பயிற்றுவிக்கின்றனர். A-Z ஆங்கில அகரவரிசையில் சொற்களை நீங்கள் பயிற்சி செய்துப் பழகலாம்.

விவாதங்களும் வேண்டுகோளும்

தமிழர்களான நாம் இந்தியர் பேசுவதுதான் சரியான ஆங்கில உச்சரிப்பு என்றும், இலங்கையர் பேசுவதுதான் சரியான ஆங்கில உச்சரிப்பு என்றும் ஆங்காங்கே சில விவாதங்கள் இணையத்தில் காணப்படுகின்றது.

தமிழர்களான நம்மிடையே, தமிழகத் தமிழர்களில் பலருக்கு ல, ள ஒலிப்புகளை துல்லியமாக ஒலிக்க முடிவதில்லை. ஈழத்தமிழர்கள் பலருக்கு “ழ” ஒலிப்பு வருவதில்லை எனும் விவாதங்களும் உள்ளன. இதில் யார் பேசுவது சரியென்று நான் கருத்தாட வரவில்லை.

"டகர ஒற்று எப்பொழுதும் வல்லினம். அதனை retroflex T ஆகத்தான் ஒலித்தல் வேண்டும். ஒவ்வொருவரும் தமிழை இப்படித் திரித்துக்கொண்டே போனால், தமிழ் ஒலிப்பு குட்டிசுவராகிவிடும்."

"தமிழ் ஒலிப்பொழுக்கம் நிறைந்த மொழி. இடத்துக்கு இடம் மாறான ஒலிப்புகள் (சீர் இல்லாமல்) வருவது கிடையாது. ஆங்கிலத்தில் அப்படி இல்லை."

"பயிலும் மாணவ/மாணவிகளும் எழுதுவதிலும் படிப்பதிலும் தேர்ந்துவிடுகின்றனர். ஆயினும் பேச்சுத் தமிழில் தடுமாறவே செய்கின்றனர்.

தமிழ் நடை, தமிழ்நாட்டிலேயே ஒருமுறை சீரழிந்து மணிப்பவளம் பெருகி, இப்பொழுது மீண்டும் இருபதாம் நூற்றாண்டில் உயிர்பெற்று வந்திருக்கிறோம். மீண்டும் ஒருமுறை அது அழிய வேண்டாம். நம் வீட்டை நாம் காப்பாற்றாமல், இன்னொருவரா காப்பாற்றுவார்?"


இதுப்போன்ற தமிழ்பற்றாலர்களின் அங்கலாய்ப்புகளும், தமிழ்மொழி வல்லுநர்கள் இடையேயான கருத்து முரண்பாடுகளும் நிறையவே இருக்கின்றன. இன்னும் கூறப்போனால் சரியான தமிழ் ஒலிப்புத் துல்லியம் என்பது ஒரு சில தமிழ்மொழி வல்லுனர்கள், முனைவர்கள், கவிஞர்கள் என ஒரு வரையரைக்குள்ளேயே இருப்பதாகவே நான் உணர்கின்றேன். அல்லது அவர்களிடமும் முறையான ஒரு முறைமை இல்லை என்றும் படுகின்றது. இவை இன்னும் எத்தனை தலைமுறைக்கு இப்படியே தொடர்ப்போகின்றது என்பதே பிரதானக் கேள்வியாகும்.

இவ்வாறான நிலையில் எம் தாய் மொழியான, தமிழ் மொழியையே நாம் சரியாக உச்சரிக்கின்றோமா? எமது தமிழ் ஒலிப்பில் ஒருமித்த ஒரு பொதுக்கருத்து நிலவுகின்றதா? என்பது தொடர்பில் பலக்கேள்விகள் எனக்குள்ளன.

அதற்கு என்ன செய்யலாம்?

உலகெங்கும் பரந்து வாழ் தமிழறிஞர்கள் தமிழ் ஒலிப்பு முறைகளில் முக்கிய கவனம் செலுத்தவேண்டும். அத்துடன் ஆரம்ப பாடசாலை முதல், தமிழ் உச்சரிப்புக்கள் தொடர்பில் ஒருமித்ததும் சரியானதுமான பயிற்சிமுறைகளை முன்வைக்க வேண்டும். தமிழ் மென்பொருளாலர்கள் அதற்கான மென்பொருள்களை உருவாக்கலாம்.

மேலே ஆங்கில சொற்களின் உச்சரிப்புக்கள் தொடர்பான இணையத்தளத்தைப் போன்று, தமிழ் சொற்களில் உச்சரிப்பதற்கு கடினமான ல, ள, ழ வேறுப்பாடுகளை, ன, ண, வேறுப்பாடுகளை, ர, ற வேறுப்பாடுகளை துல்லியமாக எல்லோரும் பெறுவதற்கான உச்சரிப்பு பயிற்சி முறைகள் உருவாக்கப்படவேண்டும். தமிழ் மொழி பாடசாலைகளில் ஆரம்பக் கல்வி முதலே அது நடைமுறைக்கு வரவேண்டும். சம்பந்தப்பட்டோர் இதற்கான முயற்சிகளில் இறங்கினால் அனைத்து தமிழர்களும் பயனடையலாம்.

குறைந்தப் பட்சம் தமிழ் எழுத்துக்கள் ஒவ்வொன்றினதும் ஒலிப்புத் துல்லியம் பெறுவதற்கான "உச்சரிப்பு பயிற்சி" காணொளி கோப்புக்களையாவது உருவாக்கி பதிவேற்ற வேண்டும் என வேண்டுகின்றேன்.

எதிர்ப்பார்ப்புகளுடன்...

நன்றி!

அன்புடன்
அருண் HK Arun Download As PDF

ஆங்கிலம் - முதலாம் ஆண்டு நிறைவு

வணக்கம் உலகத் தமிழ் உறவுகளே!

இன்று 2008 கார்த்திகை 29 ம் நாள். இன்றுடன் எமது “ஆங்கிலம்” வலைத்தளம் தனது முதலாம் ஆண்டினை நிறைவு செய்து இரண்டாம் ஆண்டில் காலடி வைக்கின்றது. இவ்வேளையில் இதன் வளர்ச்சிக்கு துணைப் புரிந்த எமது சக வலைப்பதிவர்கள், திரட்டிகள், இணையத்தளங்கள், மன்றங்கள், குழுமங்கள் மற்றும் ஆங்கிலம் கற்கும் ஆர்வலர்கள், மாணவர்கள் அனைவருக்கும் எமது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவிப்பதுடன் எமது “ஆங்கிலம்” வலத்தளம் தொடர்பான குறை நிறைகளையும் உங்கள் அனைவரிடம் இருந்தும் அன்புடன் எதிர்ப்பார்க்கின்றோம்.

மேலும் நாம் கடந்து வந்தப் பாதையை ஒருமுறை மீட்டு, உங்கள் அனைவரிடமும் பகிர்ந்துக்கொள்வதில் மகிழ்வடைகின்றோம்.

வலைத்தளம் அறிமுகப் பதிவு 2007 கார்த்திகை 29 – ம் நாள்.

முதல் ஆங்கில பாடப் பயிற்சி 1 2007 மார்கழி 24 ம் நாள்.

இதுவரை வழங்கப்பட்டப் பாடங்களின் எண்ணிக்கை 19.

ஆங்கிலம் துணுக்குகள் 6.

மற்றும் ஆங்கில மொழித் தொடர்பான ஆக்கங்கள் ஆங்கில மொழி வரலாறு, அமெரிக்க ஆங்கிலம், பழங்கள், மரக்கறிகள், அத்துடன் எமது பாடத் திட்டம் குறித்த ஒரு அறிமுக விளக்கவுரையுடன், இப்பதிவையும் சேர்த்து மொத்தம் 33 பதிவுகள் மட்டுமேயாகும்.

பதிவுகளின் எண்ணிக்கையை சக வலைத்தளங்களுடன் ஒப்பிடுகையில் நாம் மிகவும் குறைவான பதிவுகளையே இட்டுள்ளோம்.

வருகையாளர்களின் எண்ணிக்கை

எமது முதல் ஆங்கிலப் பாடமான ஆங்கில பாடப் பயிற்சி 1 வழங்கப்பட்ட 2007 மார்கழி மாதத்தின் மொத்த வருகைகள் 212 மட்டுமேயாகும். அதன் பின் 2008 ம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து வருகையாளர்களின் எண்ணிக்கை 500, 1000, 10,000, 15,000 என படிப்படியாக அதிகரித்து தற்போது ஒரு இலட்சத்தை கடந்து சென்றுக் கொண்டிருக்கின்றது. ஒரு நாளைக்கு 500 க்கும் அதிகமான வருகைகளாக உயர்ந்துள்ளது. வருகையாளர் கணிப்பான் (Traffic Statistics) ஆறு இலக்கங்களில் தொடர் வளர்முகம் காட்டி வருவது மகிழ்வைத் தருகின்றது.

வழித்தடங்கள்

வருகையாளர்கள் எவ்வழியூடாக வருகின்றனர் என்று பார்ப்போமானால்

திரட்டிகளுடாக 7%.

கூகிள் யாஹூ போன்ற தேடு பொறிகளூடாக 6%.

சக வலைத்தளங்கள், இணையத்தளங்கள், மன்றங்கள் ஊடாக 31%.

நேரடியாக தளத்திற்கு வருவோர் 56%.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள விகிதாசாரம் தற்போதைய கணிப்பின் படி எடுக்கப்பட்டதாகும். ஆனால், கடந்த மாதங்களின் விகிதாசாரம் முற்றிலும் வேறு விதமாக இருந்தது.

பொதுவாக வலைத்தளங்களிற்கான அதிக வருகைகள் திரட்டிகள் ஊடானதாகவே இருக்கும். ஆனால் எமது "ஆங்கிலம்" வலைத்தளத்திற்கு திரட்டிகள் ஊடான வருகைகள் 7% வீதம் மட்டுமே என்பது புள்ளி விபரக் கணிப்பானின் கணிப்பாகும்.

வலையுலக வலைப்பதிவுகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் ஒரு பதிவு ஒரு சில நிமிடங்களே மட்டுமே 'தமிழ்மணம்' திரட்டியில் காணக்கூடியதாக உள்ளது. அதனால் தமிழ்மணம் திரட்டியூடாக எமது ஒவ்வொரு பதிவுக்கும் 20 – 30 வரையிலான வருகைகள் (பதிவிடும் நாட்களில் மட்டும்) கிடைக்கின்றது. நாம் இதுவரை இட்ட மொத்தப்பதிவுகளின் எண்ணிக்கை 32 எனும் கணிப்பின் படி சராசரியாக ஒரு பதிவுக்கு 30 பேர் என்றுப் பார்த்தாலும் 32 x 30 = 960 வருகைகள் கிடைத்துள்ளன. தமிழ்வெளி திரட்டியில் ஒரு பதிவு, சில நாட்கள் தொடர்ந்து காண்பிக்கப்படுவதால் அங்கிருந்தும் அதே அளவிளான வருகைகள் கிடைக்கின்றன. “திரட்டி” திரட்டியூடாகவும் குறிப்பிட்ட அளவிளான வருகைகள் கிடைக்கின்றது.

அதேவேளை அன்மையில் ஆரம்பிக்கப்பட்ட "தமிழிஷ்" தளத்தின் ஊடாக வருவோர் எண்ணிக்கை பிரமிக்க வைத்தது. சென்று பார்த்ததில் தமிழிஷ் தளம் திரட்டிகளைப் போன்று செயல் படாமல், வாசகர்களின் வாக்குகள் ஊடாக, பிரபலமாகும் இடுகைகளை முன்னனி இடுகைகளாக காட்சிப்படுத்தும் முறைமையுடன் செயல்பட்டது. அவ்வாறே யாரோ ஒரு பயனர் எமது தளத்தை தமிழிஷ் தளத்தில் இட்டு, வாசகர்களது வாக்குகளால் பிரபல இடுகையாக காட்சி படுத்தப்பட்டதன் விளைவாகவே அவ்வருகைகள் வந்து குவிந்தன. அதன் பின்னரே தமிழிஷ் தளம் எனக்கு அறிமுகமானது. தற்போது நானும் தமிழிஷ் தளத்தில் ஒரு பயனராக பதிவு செய்துக்கொண்டுள்ளேன். உண்மையில் தமிழிஷ் தளத்தின் செயல்பாடு தமிழ் இணைய உலகில் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கான ஒரு படிமுறை எனலாம்.

அதேபோன்று நாம் இவ்வலைத்தளத்தை ஆரம்பிக்கும் போது திரட்டிகள் குறித்து எதுவும் அறிந்திருக்கவில்லை. இத்தளத்திற்கான வருகைகள் மிகவும் குறைந்த அளவிலேயே இருந்தது. முதன்முதலாக நண்பர் தேன் சிறில் அலெக்ஸ் தனது தளத்தில் ஓர் பதிவிட்டு எமது தளத்தை அறிமுகப் படுத்தியிருந்தார். அதனைத் தொடர்ந்தே வருகையாளர்களின் எண்ணிக்கையில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியது. அதன் பின்னர் ஆழிப் புத்தகச் சாலை உரிமையாளர் செந்தில் நாதன் அவர்கள் எமது பாடத்திட்டத்தை புத்தகமாக வெளியிடுவது பற்றி கேட்டிருந்தார். இதுவும் ஒரு வகையில் மகிழ்ச்சியை தந்தது. அத்துடன் இன்னும் சில நண்பர்களது ஊக்குவிப்பு மின்னஞ்சல்களும் வந்தன. இவைகளே எமது ஆரம்ப உந்து சக்திகளாகின. இவர்கள் அனைவருக்கும் எமது அன்பான நன்றிகள்.

அதன் பின் பல வலைத்தளங்களில் எமது 'ஆங்கிலப் பாடம்' தொடர்பான பதிவுகள் காணப்பட்டன. நண்பர் தமிழ்நெஞ்சம் தனது பதிவொன்றில் கொடுத்திருந்த இணைப்பின் ஊடாகவும் வருகைகளின் எண்ணிக்கை அதிகரித்தது. தற்போது நூற்றுக்கும் அதிகமான சக வலைத்தள பதிவர்கள் எமது நிரல் துண்டை தமது வலைத்தளங்களில் இணைத்து இணைப்பு கொடுத்துள்ளனர். அதில் பலர் “எளிதாக ஆங்கிலம் கற்க, இலகுவாக ஆங்கிலம் பயில” போன்ற வாசகங்களுடன் தொடுப்புக் கொடுத்திருக்கின்றனர். இவைகளே எமது பாடத் திட்டம் எளிமையாக எவரும் கற்கக்கூடியதாக இருக்கின்றது என்பதை எமக்கு உணர்த்தி மன நிறைவைத் தருகின்றது.

2008 யூன் 5 நண்பர் பிகேபி தனது தளத்தில் எமது தளத்தை அறிமுகப்படுத்திய நாளன்றே முதன்முறையாக வருகையாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்தது சென்றது. அது ஆச்சரியமாகவும் இருந்தது. அதன்பின் ஆயிரத்தைக் கடந்த நாட்கள் பல உள்ளன.

அன்மையில் தமிழ் இணைய உலகில் முதன்மை இணையத்தளங்களில் ஒன்றான தமிழ்நேசன் தளத்தினர் எமது தளத்தை அறிமுகப்படுத்திய நாளன்றும் வருகையாளர்களின் எண்ணிக்கை ஆயிரமாக உயர்ந்தது.

தற்போது அதிகமான வருகையாளர்களை ஈர்த்துத் தரும் தளங்கள் என்று பார்த்தால் தமிழ்நேசன், விக்கிப்பீடியா, பிகேபி, ததமிழ்நெட், பிகேபி விக்கி மன்றம், தமிழோவியா, அதிரை எக்ஸ்பிரஸ், முத்தமிழ் மன்றம்,போன்றத் தளங்களை குறிப்பிடலாம். இவற்றைத் தவிர நூற்றுக் கணக்கானோர் தமது தளங்களூடாக தொடுப்பு கொடுத்திருப்பதனால் அவற்றின் ஊடாகவும் வருகையாளர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

ஆரம்பத்தில் "ஆங்கிலம்" என்றோ "ஆங்கில" என்றோ தேடினால் இரண்டாம் மூன்றாம் பக்கங்களில் காண்பித்து வந்த கூகிள், யாஹூ போன்ற தேடு பொறிகள், தற்போது முதல் தெரிவாக எமது தளத்தையே காண்பிக்கின்றது.

கூகிள் ரீடரூடாக எத்தனைப் பேர் எமது பாடப் பயிற்சிகளைப் பெறுகின்றனர் என்பது சரியாகத் தெரியவில்லை. ஆனால் மின்னஞ்சல் ஊடாகப் பாடங்களைப் பெறுவோர் எண்ணிக்கை 1000 யிரத்தை அண்மித்துள்ளது.

மாதம் இரண்டு மூன்று பதிவுகளை மட்டுமே நாம் இட்டு வந்துள்ளப் போதும் இணைய தரப்படுத்தல் புகழ் பெற்ற அலெக்ஸா தொடர்ந்து வளர்முகம் காண்பித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டங்கள்

பின்னூட்டங்கள் என்று பார்த்தால் எமது தளத்திற்கு பின்னூட்டம் வருவது என்னவோ மிகவும் குறைவுதான்.

நாம் ஒரு மாமரத்தின் மாம்பழத்தை வீழ்த்த ஒரு கல்லை எறிக்கின்றோம் என்று வைத்துக்கொள்வோம். எமது குறி தவறாது இலக்கை தாக்கி, பழம் வீழ்த்தப் படுகின்றதென்றால் அல்லது நாம் எறியும் வீச்சுக்கு ஏற்ப கல் தொலைவிற்கு வீசுப் படுகின்றதென்றாலும் கூட ஒருவித நிறைவு எமக்கு ஏற்படும். அதேவேளை நாம் எறியும் அக் கல் நமது வீச்சு வேகத்திற்கு மாறாக வேகம் குன்றினாலோ, இடறி தவறி கீழே வீழ்ந்தாலோ ஏதோ ஒரு வித விருப்புக்கு மாறான உணர்வு ஏற்படுவது இயல்பானது அல்லவா!

அதே போன்றதே ஓர் படைப்பாளியின் படைப்புகள் மக்களை ஈர்ப்பதில் ஏற்படும் மகிழ்ச்சியும், மனச்சோர்வும் ஆகிறது.

அவ்வாறு பின்னூட்டம் வருகின்றதில்லையே என நாம் சோர்ந்துப் போன நிமிடங்கள் உண்டு. எமது பாடத்திட்டம் ஏற்புடையதாய் இல்லையா? அல்லது இவ்வாறான ஓர் இணைய ஆங்கில பாடத் திட்டம் அவசியமற்றதா? சில சாதாரணப் பதிவுகளுக்கே நூற்றுக் கணக்கான பின்னூட்டங்கள் வருகின்றனவே என்றெல்லாம் விழித்தேன். காரணம் தெரியாமல் விழித்தப் போது, ஓர் வலையுலக நண்பரது மின்னஞ்சல் இவ்வாறு விளக்கம் தந்தது. மின்னஞ்சலாளரின் முழுப்பெயரை தவிர்த்து இங்கே பதிவிடுகின்றேன். அனுப்பியவர் குறையாக நினைக்க மாட்டார் என்று நினைக்கின்றேன்.

அன்பின் அருண்..,

வணக்கம்.

தங்களின் வலைப்பதிவு http://aangilam.blogspot.com/ இன்று தான் பார்க்க நேர்ந்தது. உண்மையில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததேன். எனக்கு ஆங்கில அறிவு என்பது குறைவு(இல்லை என்பது தான் உண்மை). தங்களின் இப்பதிவு மூலம் நிச்சயம் என்னால் ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள முடியும் என்று திடமான நம்பிக்கை எழுந்துள்ளது.

எளிமையாகவும், இலகுவாகவும் பாடங்களைச்சொல்லிப் போகும் தங்களின் எழுத்து நடையும் நன்றாக உள்ளது.

இம்முயற்சியை கை விட்டு விட வேண்டாம். பின்னூட்டங்கள் வருகிறதோ இல்லையோ... தொடர்ந்து எழுதுங்கள். காற்றின் பக்கங்களில் அவை அழிந்துவிடாமல் அப்பேடியே காலத்துக்கும் இருக்கும். தாமதமாக வந்து சேர்ந்திருக்கும் என்னைப் போல... இன்னும் பலரும் கூட வந்து படிக்கும் வாய்ப்பு இருப்பதால்... தொடர்ந்து எழுதுங்கள்.

ஒரு மொழியில் போதிய பயிற்சி இல்லை என்பதனை எல்லோரும் வெளிப்படையாக ஒப்புக்கொள்ளுவதில்லை. எனவே பின்னூட்டங்கள் வருவது இருக்காது. ஆனாலும் தொடர்ந்து எழுதுங்கள். தங்களின் இம்முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

ஆங்கிலப்பாடம் நடத்தும் உங்களுக்கு நன்றிகள்.

தோழன் பாலா


பின்னூட்டங்கள் தொடர்பாக இன்னுமொரு நண்பர் அனுப்பியிருந்த மின்னஞ்சல்.

மதிப்பிற்குரிய ஆசிரியர் அருண் அவர்களுக்கு,

தங்களுடைய ஆயிரக்கணக்கான வசகர்களில் நானும் ஒருவன்.
உங்களுடைய எல்லா பாடங்களையும் கவனித்து வருகிறேன். நான் ஆங்கிலம் கற்றவன் தான் ஆயினும், தங்களின் பாடங்களின் துணையால் பல சிறிய குறைகளை சரி செய்து கொள்ள முடிகிறது...

தாங்கள் செய்து வரும் பணி மகத்தானது. பின்னூட்டங்களை வைத்து ஒரு போதும் வாசகர்களை முடிவு செய்யாதீர்கள். தாங்கள் கணித்ததற்கு மாறாக இன்னும் பலர் தங்கள் பாடங்களை பயின்று கொண்டிருக்க கூடும்.

தங்கள் பொன்னான நேரத்தை உபயோகித்து தாங்கள் செய்யும் இந்த கல்விப்பணி மேலும் சிறக்க, வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்.

இ. பி.


அதன் பின்பு பெரிதாக பின்னூட்டங்களை எதிர்ப்பார்ப்பது இல்லை. ஆனாலும் சிலர் திறந்த மனதுடன் பின்னூட்டம் இட்டுச் செல்லும் போது (குறை நிறை எதுவானாலும்) மனதுக்கு ஒரு வித நிறைவு ஏற்படுகின்றது. எம்மை செம்மை படுத்திக் கொள்ளவும் வாய்ப்பாகின்றது.

நண்பர் பிகேபி தனது வலைப்பதிவில் இப்படி எழுதியிருந்தார். “வளர்ச்சியை பின்னூட்டங்கள் கொண்டு அளந்தால் சோர்ந்துதான் போவோம். ஒரு முறை வந்தவர் மீண்டும் நம் பதிவை தேடி வந்தால் அதுதான் உண்மையான வளர்ச்சி என்பேன்.” ஆம்! ஒருமுறை வந்தவர் மீண்டும் நம் பதிவை தேடி வந்தால் அதுவே எமது வளர்ச்சியாகக் கொள்ளலாம். தற்போது நேரடியாக இத் தளத்திற்கு வருவோரின் எண்ணிக்கை இதனை உறுதி செய்கின்றது.

கடந்த ஆண்டில் 33 பதிவுகள் மட்டுமே இட்டுள்ளப் போதும், ஒரு இலட்சத்திற்கும் அதிகமான வருகையாளர்களை இத்தளம் ஈர்த்துள்ளதென்றால்; ஒரு வலைப்பதிவாக நோக்கும் சமயம் இதனை வளர்ச்சியாக கருதலாம். அதேவேளை எமது எதிர்ப்பார்ப்பு ஆங்கிலம் அத்தியாவசியமாகி விட்ட இக்கால சூழமைவில் இதனை கற்க விரும்பும் ஆர்வலர்கள் அனைவருக்கும், குறிப்பாக ஏழை தமிழ் மாணவர்களுக்கு எமது பாடங்கள் சென்றடைய வேண்டும் என்பதேயாகும்.

மேலும் உலகத் தமிழ் உறவுகள் அனைவருக்கும், எமது தளத்தில் நீங்கள் எதிர்ப்பார்க்கும் ஆங்கில பாடப் பயிற்சிகளை முடிந்தவரையில் எளிதாக தர முயற்சிக்கின்றோம். மேலும் ஆங்கிலச் சொற்களஞ்சியங்கள், ஆங்கில மொழி கற்கைகள் தொடர்பான விளக்கங்கள் போன்றவற்றையும் எதிர்வரும் நாட்களில் வழங்குவதாக உள்ளோம். எமது பாடத் திட்டம் தொடர்பான குறை நிறை எதுவானாலும் தயங்காமல் எமக்கு அறியத்தருவீர்கள் என்றும் அன்புடன் எதிர்ப்பார்க்கின்றோம்.

எமது ஆங்கில பாடப் பயிற்சிகளை புத்தகமாகவும் கோப்பாகவும் கேட்டு வரும் அன்பர்களுக்கு; இதுவரை நாம் எமது பாடங்களை புத்தகமாக எழுதவோ, வெளியிடவோ இல்லை. ஆனால் எதிர்வரும் நாட்களில் இது தொடர்பில் முயற்சிகள் எடுப்பதாக உள்ளோம். அவ்வாறு புத்தகமாக வெளியிடுவதாயின் வெறுமனே வர்த்தக நோக்கத்தை மையப்படுத்தியதாக எமது பாடத் திட்டம் அமையாமல், எவரும் எளிதாக கற்கக் கூடிய வகையில் மேலும் சிறப்புடன் வழங்கப்படும். அத்துடன் ஆங்கிலம் - தமிழ் ஒலிப்பதிவு கோப்புகள் அல்லது குருந்தட்டுகள் இணைத்து வழங்குவதாகவும் எண்ணியுள்ளோம். ஆங்கில உச்சரிப்புக்களைப் பொருத்தமட்டில் ஆங்கிலேயரின் உச்சரிப்பே சிறந்தது என நாம் கருதுவதால், பிரித்தானிய ஆங்கில நண்பர்களின் உதவியுடன் அதனை செய்யத் திட்டமிட்டுள்ளோம்.

இம்முயற்சிக்கு உங்கள் அனைவரின் ஆதரவும், காலமும் கைக்கொடுக்கும் என்றே நாம் கருதுகின்றோம்.

முதலாம் ஆண்டை நிறைவுச் செய்யும் இன்னாளில் இத்தளத்தின் வளர்ச்சிக்கு பலவழிகளிலும் பங்களிப்புச் செய்து வரும் சக வலைப்பதிவர்கள், திரட்டிகள், இணையத்தளங்கள், மன்றங்கள், குழுமங்கள் மற்றும் ஆங்கிலம் கற்கும் ஆர்வலர்கள், மாணவர்கள், உலகத் தமிழ் உறவுகள் அனைவருக்கும் எமது அன்பையும் நன்றியையும் மீண்டும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தொடர்ந்து ஆங்கில பாடப் பயிற்சிகளில் சந்திப்போம்.

நன்றி

அன்புடன் ஆசிரியர் அருண்

Download As PDF

ஆங்கில வரலாறு (History of the English language)

Updated ஆங்கிலம் கற்கும் நாம், ஆங்கில மொழியின் வரலாற்றையும் அறிந்து வைத்துக் கொள்வது அவசியமானது. ஆங்கில மொழியின் வரலாற்றை அறிந்துக்கொள்ள வேண்டுமாயின்; நாம் ஆங்கிலேயரின் வரலாற்றையும் அறிந்துக்கொள்ள வேண்டும். அப்போது தான் நமக்கு ஆங்கிலேயரின் பின்புலமும், அவர்களது மொழிப் பற்றையும், இன்று உலகளவில் ஆங்கிலம் எவ்வாறு செல்வாக்கு செலுத்துகிறது என்பதனையும் அறிந்துக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.

"ஆங்கிலம்" இங்கிலாந்தில் தோன்றிய ஒரு மொழியாகும். இது யேர்மனிய மொழி குடும்பத்தைச் சேர்ந்ததாகும். யேர்மனிய மொழிக் குடும்பம், இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தில் இருந்து கிளைத்ததாகும். ஆயினும் ஆங்கிலம் பல மொழிகளினதும் கலப்பு மொழியாகும்.

இன்று உலகில் அதிகம் பேசப்படும் மொழிகளான சீனம், ஸ்பானிஷ் மொழிகளுக்கு அடுத்தப்படியாக அதிகம் பேசப்படும் மொழி ஆங்கிலமாகும். 2007 ஆம் ஆண்டு கணிப்பின் படி ஆங்கில மொழியை தாய்மொழியாகக் கொண்டோரின் எண்ணிக்கை 350 - 375 மில்லியன் ஆகும். அத்துடன் உலகளவில் இரண்டாம் மொழியாக ஆங்கிலம் பேசுவோர் எண்ணிக்கை 1.8 பில்லியன் ஆகும். இவ்வெண்ணிக்கை உலக மக்கள் தொகையில் மூன்றின் ஒன்றாகும். இன்று "ஆங்கிலம்" ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், கனடா, அவஸ்திரேலியா, நியுசிலாந்து, அயர்லாந்து, தென்னாப்பிரிக்கா உட்பட 53 நாடுகளில் ஆட்சி மொழியாக இருக்கின்றது. அத்துடன் 130 க்கும் அதிகமான நாடுகளில் இரண்டாம் மொழியாகப் பேசப்படுகின்றது.

ஐக்கிய இராச்சியத்தின் ஆதிக்கத்திற்குள் உலகின் பல பாகங்களிலும் பல நாடுகள் உட்பட்டிருந்ததன் விளைவாகவும், அன்மைக்காலத்தில் ஐக்கிய அமெரிக்காவின் வளர்ச்சியினாலும் ஆங்கிலம் உலகெங்கும் மென்மேலும் பரவி வருகின்றது. அத்துடன் ஐக்கிய நாடுகள் சபை (United Nations - UN), ஐரோப்பிய ஒன்றியம் (European Union - EU), பொதுநலவாய நாடுகள் (Commonwealth of Nations), ஐரோப்பிய அலோசனை சபை (Council of Europe), வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு (North Atlantic Treaty Organization - NATO) போன்ற உலக அமைப்புகளிலும் ஆங்கிலம் முதன்மை அலுவல் மொழியாக இருக்கின்றது. மற்றும் பொருளாதாரம், மருத்துவம், அரசியல், நவீன விஞ்ஞானக் கண்டுப்பிடுப்புகள், இராணுவம் பலம், ஹொலிவூட் சினிமா, ஊடகத்துறை, ஆங்கில கலாச்சார மோகம், கணனி, இணையம் போன்றவற்றின் காரணமாகவும் ஆங்கிலம் பலருக்கு அவசிய மொழியாகவும், விருப்பு மொழியாகவும் மாறிவருகிறது. அத்துடன் இன்றைய இணையப் பயன்பாட்டில் அதிகம் பயன்படு மொழியாகவும் ஆங்கிலமே காணப்படுகின்றது.
ஆங்கில மொழியின் வரலாறு

சரி! இனி ஆங்கில மொழியின் வரலாற்றைப் பார்ப்போம்.

முந்திய வரலாறு
-------------------------------------------------------------------------------------கி.மு 6500 ஐரோப்பிய நிலத்துடன் இணைந்திருந்தப் பனி பிரதேசம்; பனியுருகி கடல் மட்டம் உயர்ந்ததால் தீவாக தோன்றிய நிலப்பகுதிகளில் ஒன்றே, தற்போது "பிரித்தானியா" என்றழைக்கப்படும் தீவாகும்.

கி.மு 3000 புதிய கற்காலத்தின் தோற்றம் (New Stone Age begins) ஐரோப்பியப் பகுதிகளில் இருந்து கெல்டிக் மக்கள்; குழுமங்களாக பிரித்தானியாவில் வந்து குடியேறத் தொடங்கினர். அவர்கள் விவசாயிகளாக இருந்தனர். போர் குணமிக்கவர்களாக விளங்கினர்.

கி.மு 2100 வெண்கலக் காலத்தின் தோற்றம் (Bronze Age begins)

கி.மு 2050 மக்கள் வெண்கலத்திலான உலோக வேலை, செப்பு, தகரம் போன்றவற்றைப் பயன்படுத்திய மனித நாகரிக வளர்ச்சியின் ஒரு காலகட்டமாகும். மக்கள் வெண்கலத்திலானக் கருவிகள், ஆயுதங்கள் செய்து பழக்கப்பட தொடங்கினர்.

கி.மு 1200 பிரித்தானியாவில் சிறிய கிராமங்கள் தோன்றிய காலக்கட்டமாகும். வணிகத் தொடர்புகள் ஏற்படத் தொடங்கின.

கி.மு 750 இரும்புக் காலத்தின் தோற்றம் (Iron Age); வெண்கலத்திற்கு பதிலாக மக்கள் இரும்பு பொருற்களை பயன்படுத்தத் தொடங்கிய காலக்கட்டமாகும். அக்காலக் கட்டத்தில் பிரித்தானியாவில் கிட்டத்தட்ட 150,000 மக்கள் தொகையினர் வாழ்ந்ததாக நம்பப்படுகின்றது.

கி.மு 500 மத்திய ஐரோப்பியப் பகுதிகளில் இருந்தும் கெல்டிக் (Celts) இனக் குழுமங்கள் பிரித்தானியாவில் வந்து குடியேறத்தொடங்கினர். அவர்களும் விவசாயிகளாகவும், போர் குணமிக்கவர்களாகவுமே இருந்தனர்.

கெல்டிக் மக்கள் - கெல்டிக் மொழி (Celtic Language)
-------------------------------------------------------------------------------------
கெல்டிக் இனக் குழுமத்தினர் தங்களது விவசாய நிலங்களில் குடில்கள் அமைத்து சிறிய கிராமங்களாக வாழ்ந்தனர். வேட்டையாடுதலை பழக்கமாக கொண்டிருந்தனர். அத்துடன் போர் விரும்பிகளாகவும் இருந்தனர். இரும்பில் ஆயுதங்கள், கருவிகள் போன்றவற்றை செய்யக் கூடியவர்களாவும் விளங்கினர். இக்கெல்டிக் மக்கள் ஏற்கெனவே பிரித்தானியா வந்தடைந்திருந்த கெல்டில் மக்களுடனும், சக கெல்டிக் இனக் குழுமத்தினருடன் அடிக்கடி சண்டையிட்டுக்கொண்டனர். அதேவேளை கடவுள் பக்தி மிக்கவர்களாகவும் இருந்தனர். வானம், மின்னல், சூரியன் என ஒவ்வொன்றையும் ஒவ்வொரு தெய்வமாக வழிப்பட்டனர். 400 மேற்பட்ட தெய்வங்கள், தேவதைகளை அவர்களது வழிப்பாட்டில் இருந்ததாக நம்பப்படுகின்றது. இந்த கெல்டிக் இனக் குழுமங்கள் பேசிய பேச்சு மொழிகள், குழுமங்களிடையே வேறுப்பட்டவைகளாக இருந்தாலும், கிட்டத்தட்ட அம்மொழிகள் ஒரே மாதிரியானதாகவே இருந்தன.

இருப்பினும் இம்மக்களை "கெல்டிக் மக்கள்" என்றும், அவர்கள் பேசிய மொழியை "கெல்டிக் மொழி" என்றுமே உரோமானியர்கள் அழைத்தனர். இந்த "கெல்டிக்" எனும் சொல் ஒரு கிரேக்க மொழிச் சொல்லாகும். அதன் அர்த்தம் (barbarians) பாபேரியன்கள் என்பதாகும். அதன் தமிழ் பொருள் "நாகரீகமற்ற காட்டுமிராண்டிகள்" என்பதாகும். உரோமானியர்கள் பிரித்தானிய இனக் குழுமத்தினர்களை மட்டுமன்றி, ஐரோப்பாவின் வாழ்ந்த பல்வேறு பழங்குடி மக்களையும் அழைக்கும் பொதுவான பெயராகவே "கெல்டிக்" எனும் சொல்லை பயன்படுத்தினர்.

உரோமர் ஆட்சிக் காலம் - இலத்தீன் மொழி (Latin Language)
-------------------------------------------------------------------------------------
கி.மு 55 இல் உரோமப் பேரரசர் ஜூலியஸ் சீசர் (Emperor Julius Caesar) இரண்டு படையணிகளுடன் வந்து பிரித்தானியாவை தாக்கி கைப்பற்ற முனைந்தார். கெல்டிக் இனக் குழுமத்தினர்; பல்வேறு குழுமங்களாக ஆட்சி அமைத்திருந்தனர். பல அரசர்கள் இருந்தனர். இவர்கள் உரோமர்களின் ஆக்கிரமிப்பை எதிர்த்து கடும் போர் புரிந்தனர். இருப்பினும் பிரித்தானியாவின் தென்-கிழக்கு பகுதிகளில் தாக்குதல் தொடுத்த ஜூலியஸ் சீசர், பல கெல்டிக் இனக் குழுமங்களை வெற்றிகொண்டதன் பின் திரும்பிச் சென்றார். மீண்டும் கி.மு 54 இல் இரண்டாம் தடவையாக ஐந்து படையணிகள் (30,000 படை வீரர்கள், 2,000 குதிரை வீரர்கள்) சகிதம் வந்து தாமஸ் ஆற்றை கடந்து போரிட்டார். கடும் போரின் முடிவில் கெல்டிக் இன குழுமத்தினர் தோழ்வியடைந்ததுடன், உரோமப் பேரரசுக்கு கப்பம் செலுத்த ஒத்துக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து கிட்டத்தட்ட நூறு ஆண்டுகள் பிரித்தானியா இயல்பு நிலையில் இருந்தது.

கி.மு 43 இல் பேரரசர் கிலாடியஸ் (Emperor Claudius) மூன்றாம் தடவையாக மேற்கொண்ட படையெடுப்புடன் பிரித்தானியா உரோமர்கள் வசம் வீழ்ந்தது. அதன் பின்னர் பிரித்தானியா; உரோமானிய ஆளுநரின் கீழ், உரோமப் பேரரசின் ஓர் ஆட்சிப் பகுதியானது.

பிரித்தானியாவின் பூர்வக் குடிகள் பேசிய மொழி “கெல்டிக் மொழி” ஆகும். உரோமானியர்கள் பேசிய மொழி இலத்தீன் மொழியாகும்.

உரோமானியர்களின் இவ்வருகையே பிரித்தானியாவின் வளர்ச்சிக்கு அடித்தளம் இட்டது எனலாம். உரோமர் ஆட்சி காலத்திலேயெ ஐரோப்பிய கண்டத்தின் பல நாடுகளுக்குமான வணிகத் தொடர்புகளுக்கு ஏற்ற இடமாக தாமஸ் ஆற்றுடன் (The River Thames) அண்மித்த நிலப்பரப்பு அமைந்திருப்பதை உணர்ந்து லண்டனை தலைநகராக உருவாக்கினர். அவர்கள் அதற்கு வழங்கியப் பெயர் "லண்டேனியம்" என்பதாகும். அப்பெயரே மருவி (Londinium > Landon) "லண்டன்" என்றானது. பிரித்தானியாவில் உரோமர் ஆட்சிக் காலத்திலேயே 365 நாட்களைக் கொண்ட நாட்காட்டி (Calendar) அறிமுகமானது. மக்கள் தொகை கணக்கிடும் முறை அறிமுகப் படுத்தப்பட்டது. கோட்டைகள், குளியல் தடாகங்கள், பொதுக் கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள், வீதி அமைப்பு திட்டங்கள், பாலங்கள் போன்றன உருவாக்கப்பட்டன. அவற்றின் எச்சங்கள் பிரித்தானியாவில் பல பகுதிகளில் இன்றும் சான்று பகிர்கின்றன. (படத்தைப் பார்க்கவும்) உரோமானியர்கள் ஆட்சிக் காலத்திலேயே அரச நிர்வாகம், நீதி, சட்டம், மருத்துவக் கல்வி போன்றனவும் பிரித்தானியாவில் அறிமுகமாகின. இவை அனைத்தும் இலத்தீன் மொழி வழியாகவே இருந்தன.

உரோமர்கள் பிரித்தானியாவை கைப்பற்றும் முன்னரே; பிரித்தானிய இனக்குழுமங்களின் பேச்சு வழக்கில் இலத்தின் சொற்கள் பயன்பட்டதாகவும் கூறப்படுகின்றது. எடுத்துக்காட்டாக: camp, cook, inch, mill, mint (சில்லறை), noon, pillow, pound (நிறை அளவு), punt (படகு), street, wall போன்றவை. இச்சொற்கள் எப்படி கெல்டிக் மொழியினரின் பேச்சு வழக்கில் பயன்பட்டன என்றால்; பிரித்தானியாவில் வந்து குடியேறிய கெல்டிக் இனக்குழுமங்கள் ஐரோப்பியப் பகுதிகளில் இருந்தே வந்தனர். அக்காலக்கட்டத்தில் ஐரோப்பாவின் பெறும் பகுதி உரோமர்களின் ஆதிக்கத்திற்குள் உட்பட்டிருந்ததனால் அவர்களது இலத்தின் மொழி தாக்கமும் ஐரோப்பா எங்கும் பரவியிருந்ததே அதன் காரணமாகும்.

கெல்டிக் மக்களை போன்றே உரோமர்களும் பல தெய்வ வழிப்பாடு உடையவர்களாவே இருந்துள்ளனர். உரோமாபுரியில் கிறிஸ்தவ மதத் தோற்றத்தினைத் தொடர்ந்து, கி.பி இரண்டாம் அல்லது மூன்றாம் நூற்றண்டளவில் உரோமாபுரிக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான வணிக மற்றும் போக்குவரத்து தொடர்புகள் ஊடாக பிரித்தானியாவிலும் உரோமன் கத்தோலிக்கம் துளிர்விடத் தொடங்கியது. இதன் வழியாகவும் பல இலத்தின் சொற்கள் பிரித்தானியரின் பேச்சு வழக்கில் கலந்தன. "கத்தோலிக்" எனும் சொல்லும் லத்தின் வழி வந்த ஒரு சொல்லேயாகும். அதன் ஆங்கிலப் பொருள் "அகிலம்" (Universal) என்பதாகும்.

கி.மு 43 இல் இருந்து கி.பி 410 வரை; நான்கு நூற்றாண்டுகளுக்கு மேல் பிரித்தானியாவை தம் வசம் வைத்திருந்த உரோமானியர்கள், தமது தாயகமான உரோமாபுரிக்கு அதன் அயல் தேசங்களின் தாக்குதல் அச்சுறுத்தல் தோன்றவே, தமது படையணிகளுடன் தாயகம் திரும்பவேண்டி ஏற்பட்டது. கி.பி 436 ஆம் ஆண்டளவில் பிரித்தானியாவில் இருந்த உரோமப் படையணிகள் முற்று முழுதுமாக தாயகம் திரும்பியது.

"பிரித்தானியா" (Britania) எனும் பெயரும் உரோமர்கள் வழங்கிய இலத்தின் மொழி சொல் தான். இப்பெயரே காலப்போக்கில் மருவி Britania > Britain என்றானது. இப்பகுதியில் வாழ்ந்த பூர்வக் குடிகளான "கெல்டிக்" இனத்தவரையே "பிரிட்டன் அல்லது பிரிட்டிஸ்" (Britons or British) என அழைக்கப்படுகின்றவர்கள் ஆவர்.

உரோமானியர்கள் பேசிய இலத்தீன் மொழியையும், எழுத்தையும் அடிப்படையாக கொண்டே ஆங்கில மொழி தோற்றம் பெற்றது. நிறைய இலத்தின் மொழி சொற்களையும் உள்ளடக்கியே உருவானது. உரோமர்கள் பயன்படுத்திய இலத்தின் எழுத்துருக்களை உரோமன் எழுத்துருக்கள் என்றும் அழைப்பர். இன்றைய ஆங்கிலம் உரோமன் எழுத்துருக்களை அடிப்படையாகக் கொண்டதுதான்.

பழைய ஆங்கிலம் (Old English [450 - 1100 AD])
-------------------------------------------------------------------------------------
உரோமர்களின் வெளியேற்றத்தின் பின் பிரித்தானிய மக்கள் பெறும் கவலைக்குள்ளானர். அவர்களிடம் தொழில் முறையிலான போதிய படைவீரர்கள் இருக்கவில்லை. கிட்டத்தட்ட பத்து இலட்சம் (1,000,000) மக்கள் கிராமப் புரங்களிலேயே வாழ்ந்தனர். அவர்கள் விவசாயிகளாக இருந்தனர். பிரித்தானியா உரோமர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த காலங்களிலேயே, பிரித்தானியாவுக்கு அதன் சூழ இருந்த இனக் குழுமங்களின் தாக்குதல் அச்சுறுத்தல் தொடர்ந்து இருந்தன. உரோமர்கள் வெளியேறிய பின் பிரித்தானியாவை தாக்குவது அவர்களுக்கு சுலபமானதாக இருந்தது. இந்நிலையறிந்து ஏங்கில்ஸ், செக்சான், யூட் எனும் மூன்று யேர்மனிய மொழிக் குடும்பத்தினர், பாய்மரக் கப்பல்களில், வட கடலூடாக வந்து பிரித்தானியாவின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் திடீர் தாக்குதல் தொடுத்து கைப்பற்றிகொண்டனர். ஏங்கில்ஸ் இன்றைய கிழக்கு டென்மார்க்கில் இருந்தும், செக்சான் இன்றைய யேர்மனியில் இருந்தும், யூட் யூட்லாந்தில் இருந்தும் வந்தனர். பொதுவாக இவர்களை ஏங்லோ-செக்சான்ஸ் (Anglo-Saxons) என்று அழைக்கப்படுகின்றனர்.

இவர்களது நில ஆக்கிரமிப்பின் போது பிரித்தானியாவின் பூர்வக் குடிகளான கெல்டிக் மக்கள் (Britons) பிரித்தானியாவின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளுக்கு (அதாவது இன்றைய வேல்ஸ் மற்றும் ஸ்கொத்லாந்து) தள்ளப்பட்டனர்.

பிரித்தானியா ஏங்லோ-செக்சானின் முழுமையான கட்டுப்பாட்டுள் வந்தது. ஏங்லோ-செக்சான் பிரித்தானியாவை தமது வாழ்விடமாகக் கொண்டனர். ஏங்லோ-செக்சான் கட்டுப்பாட்டுக்குள் வீழ்ந்த பிரித்தானியாவை ஏழு அரசப் பிரிவுகளாக (Northumbria, Mercia, Wessex, Essex, Sussex and Kent.) ஆட்சி செய்தனர்.

அவர்களின் பரம்பரையினரே தற்போதைய இங்கிலாந்து மக்களாவர். இவர்களே ஆங்கிலம் எனும் மொழியை தோற்றுவித்தவர்கள் ஆவர்.

ஏங்கில்ஸ் இனத்தவர்கள் இங்கிலா லாந்து எனும் பகுதியில் இருந்தே வந்தனர். இவர்கள் பேசிய மொழி "இங்கிலிஸ்க்" எனும் யேர்மனிய மொழியாகும். இப்பெயர்களே இன்று மருவி இங்கிலாந்து - இங்கிலிஸ் என்றானது. (The Angles came from Englaland and their language was called Englisc - from which the words England and English are derived.)

தற்போதைய இங்கிலாந்தின் பல ஊர்களின் பெயர்கள் ஏங்லோ-செக்சான் வழங்கியப் பெயர்களாகும். அவற்றை ஏங்லோ-செக்சான் சொற்கள் (Anglo Saxon Words) என்றும் சிலர் அழைப்பர்.

ஏங்லோ-செக்சான் இனத்தவர்களும் பலகடவுள் வழிபாட்டு முறையை கொண்டவர்களாகவே இருந்தனர். கி.பி 595 இல் உரோமாபுரியில் இருந்து பொப்பாண்டவர் அவர்களால், சென்.ஒகஸ்டின் (St. Augustine) என்பவர் தலமையில் அனுப்பப்பட்ட மிசனரிகளின் வருகையினை ஏற்று, இங்கிலாந்தின் கெண்ட் பகுதியின் (ஏங்லோ-செக்சான்) அரசரான ஏதெல்பெட் (King Ethelbert of Kent) கிருஸ்தவ மதத்தை தழுவினார். அதனைத் தொடர்ந்து கிறிஸ்தவ மதப்பிரச்சாரத்திற்கு முழு சுதந்திரம் வழங்கிய அவர், மக்களையும் கிறிஸ்தவ மதத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து முழுதும் படிப்படியாக கிறிஸ்தவம் வேறூண்டத் தொடங்கியது.

கிறிஸ்தவ மதப் பிரச்சாரம் மற்றும் பைபிள் கல்வி போன்றவற்றால் மேலும் பல இலத்தின் மற்றும் கிரேக்கச் சொற்கள் பழைய ஆங்கிலத்தில் சேர்ந்துக்கொண்டன.

எடுத்துக்காட்டாக: street, kitchen, kettle, cup, cheese, wine, angel, bishop, martyr, candle.

இம்மூன்று மொழிக் குடும்பத்தினரும் பேசியது கிட்டத்தட்ட ஒரே மாதிரியான மொழிகள் என்பது மொழிவல்லுநர்களின் கருத்து. இம்மொழிகளில் இருந்து வளர்ச்சிப் பெற்ற மொழியே "பழைய ஆங்கிலம்" என்றழைக்கப்படுகின்றது. இருப்பினும் அக்காலத்தில் பேசப்பட்ட ஆங்கிலத்தின் உச்சரிப்பு மற்றும் பேச்சு வழக்கு, இன்றைய தாய்மொழி ஆங்கிலேயர்களுக்கே புரிந்துக்கொள்ள முடியாத அளவில் வேறுப்பட்டதாகும். அதனால் அதனை "பழைய ஆங்கிலம்" என்கின்றனர்.

இக்காலப் பகுதியில் மேலும் இரண்டு மொழிகளின் சொற்கள் பழைய ஆங்கிலத்தில் கலந்தன.

வைக்கிங் (Viking)

கி.பி 793 இல் ஏங்லோ-செக்சான் கட்டுப்பாட்டில் இருந்த இங்கிலாந்தை; டென்மார்க், சுவீடன் மற்றும் நோர்வே பகுதிகளில் இருந்து வந்த இனக் குழுமத்தினரின் தாக்கத் தொடங்கினர். இவர்களை "வைக்கிங்" (Viking) என்றழைக்கப்படுகின்றது. ஏங்லோ-செக்சோன் எதிர் தாக்குதல் தொடுத்தப் போதும், அவர்களது தாக்குதல்கள் இடைவிடாது தொடர்ந்த வண்ணமே இருந்தன. (கி.பி 793 - கி.பி 1066 வரை) இத்தாக்குதல்களால் இங்கிலாந்தின் சில பகுதிகளும், சில தீவுகளும் அவர்கள் வசமானது. அத்துடன் ஸ்கொத்லாந்தின் கரையோரப் பகுதிகளும், அயர்லாந்தின் சிலப் பகுதிகளும் கூட அவர்கள் வசமானது. (படத்தில் பார்க்கவும்) இவர்கள் பேசிய மொழிகள்; "பழைய நோர்ஸ்" (Old Norse) மற்றும் "டெனிஷ்" "Danish" என்றழைக்கப்படும் வட யேர்மனிய மொழிகளாகும். ஏற்கெனவே பிரித்தானியாவை வாழ்விடமாகக் கொண்ட ஏங்லோ-செக்சான் இனத்தவரதும் வைக்கிங் மக்களதும் பேச்சு மொழிகளுக்கு இடையே வேறுப்பாடு இருந்தாலும், அநேகமான வேர்சொற்கள் ஒரே மாதிரியானதாகவே இருந்தன.

இவர்கள் பேசிய பழைய நோர்ஸ் மற்றும் டெனிஷ் மொழி சொற்களும் அதிகளவில் பழைய ஆங்கிலத்தில் செல்வாக்கு செலுத்துகின்றன.

எடுத்துக்காட்டாக: sky, egg, cake, skin, leg, window (wind eye), husband, fellow, skill, anger, flat, odd, ugly, get, give, take, raise, call, die, they, their,both, hit, law, leg, same.

இவர்கள் கைப்பற்றி வசித்தப் பகுதிகளுக்கு; அவர்கள் வழங்கியப் பெயர்களூம் தற்போது இங்கிலாந்தில் புழக்கத்தில் உள்ளன. குறிப்பாக "by" பின்னொட்டுடன் உள்ளப் பெயர்கள் அவர்களால் வழங்கப்பட்டவைகளாகும். எடுத்துக்காட்டாக: "Derby, Rugby, Whitby, Selby, Grimsby" போன்ற கிராமங்களின் பெயர்கள். "by" என்றால் அவர்கள் மொழியில் "கிராமம்" ஆகும். "பண்ணை" (Farm) எனும் பின்னொட்டுடன் வழங்கப்பட்ட பெயர்கள்: Scunthorpe, Grimethorpe போன்றவைகள். "thorpe" என்றால் "பண்ணை" என்பதாகும்.

அதேவேளை கெல்டிக் மொழி பேசிய பிரித்தானியாவின் பூர்வக் குடிகளின் பேச்சு புழக்கத்தில் இருந்த ஒரு சில சொற்கள் பழைய ஆங்கிலத்தில் காணப்படுகின்றன. குறிப்பாக இடங்கள் ஆறுகள் போன்றவற்றின் பெயர்கள். எடுத்துக்காட்டாக: Devon, Dover, Kent, Trent, Severn, Avon, Thames.

எப்படியோ இன்றைய நவீன ஆங்கிலத்தில் புழக்கத்தில் இருக்கும் பாதிக்கும் மேற்பட்ட சொற்கள், பழைய ஆங்கிலத்தின் வேர்ச் சொற்களைக் கொண்டதாகும். பழைய ஆங்கிலம் கி.பி.1100 வரை (ஏறக்குறைய ஏழு நூற்றாண்டுகள் (700)) பேசப்பட்டது.

மத்திய ஆங்கிலம் (Middle English [1100 - 1500])
-------------------------------------------------------------------------------------
கி.பி. 1066 நோமண்டியிலிருந்து (தற்போதைய பிரான்ஸ்) வெற்றி வீரர் வில்லியம் (William the Conqueror) படையெடுத்து வந்து இங்கிலாந்தை வெற்றிக்கொண்டார். இவ் வெற்றியாளர்களை " நோர்மன்ஸ்" என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் ஒரு விதமான பிரஞ்சு மொழியைப் பேசினர். அம்மொழியை "நோர்மன் பிரஞ்சு" என்று அழைக்கப்படுகிறது. "நோர்மன்" மொழியை ஒரு உயர்மொழியாகவும் கௌரவ மொழியாகவும் அவர்கள் மதித்தனர். அரச நிர்வாகம், நீதித்துறை, வணிகத்தொடர்பு மற்றும் சட்டத்திட்டங்கள் போன்றவை; ஆங்கிலத்துக்குப் பதிலாக, பிரஞ்சு பேச்சு மொழியாகவும், இலத்தின் எழுத்து மொழியாகவும் மாறின.

1067 இல் வெற்றி வீரர் வில்லியம் தனது வெற்றியை பறைச்சாற்றும் வகையில் (Tower of London) கோட்டையை கட்டத் தொடங்கினார். அவர் ஹாஸ்டிங்ஸ் எனும் இடத்தில் மேற்கொண்ட போர் நடவடிக்கையை (Battle of Hastings) சித்தரிக்கும் விதமாக 'The Bayeux Tapestry' எனும் பெயரில் சித்திர தையல் வேலைகளுடன் எழுதப்பட்ட கார்டூன் ஓவியம் உலக வரலாற்றில் பிரசித்திப்பெற்றதாகும். இதுவே உலகின் நீளமான (20 அங்குலம் உயரமம் - 231 அடி நீளம் ((50cm செ.மீ - 70 மீ)) ஒவிய தையல் (எம்ப்ரோயிடிங்) வேலையாகும். இதில் எழுதப்பட்ட மொழி லத்தின் ஆகும். இவரது காலத்தில் இங்கிலாந்து ஆட்சி முறைமை முற்றிலும் வேறுப்பட்டதாக இருந்தது. அதனை "பிரபுத்துவ ஆட்சி முறை" (Feudal System) எனப்படுகின்றது. அதாவது பிரபுத்துவ ஆட்சி முறையின் கீழ் அரசரே சர்வ அதிகாரம் கொண்டவராவர். நாட்டின் அனைத்து வளங்களும் அவருக்கே சொந்தம். மக்களின் காணிகள், கால் நடைகள், கட்டிடங்கள் அனைத்தும் கூட அரசரின் சொத்தானது. மக்கள் அரசரிடம் இருந்தே எல்லாவற்றையும் குத்தகைக்கு பெறவேண்டும். நாட்டில் தனது கட்டுப்பாட்டை உறுதி படுத்திக்கொள்ளும் வகையில் 80 க்கும் மேற்பட்ட கோட்டைகளை நாடெங்கும் கட்டினார். 1086 இல் "வீட்டு பெறுமதி மதிப்பீடு" முறை ஒன்றை அறிமுகப்படுத்தினார். அதாவது மக்கள் தமது வீடுகளில் என்னென்ன வைத்துள்ளனர், அவற்றின் பெறுமதி எவ்வளவு, மக்கள் அரசருக்கு எவ்வளவு செலுத்த வேண்டியுள்ளது, போன்றவற்றை அறிவதற்கான, மக்களது சொத்தை மதிப்பிடும் முறையாகும். இதுவே "The Domesday Book" என்றழைக்கப்படுகின்றது. இம் மதிப்பீடும் லத்தின் மொழியிலேயே எழுதப்பட்டது.

காலப்போக்கில் மொழித் தொடர்பில் ஒரு வர்க்கப் பிரிவு உருவானது. ஆட்சி அதிகாரங்களில் பிரஞ்சு மொழி பேசுவோரே செல்வாக்கு செலுத்தினர். பிரஞ்சு மொழி பேசுவோர் மேல் வர்க்கமாகவும், ஆங்கிலம் பேசுவோர் கீழ் வர்க்கமாகவும் கருதப்பட்டனர்.

இத்தகைய மொழித் தொடர்பிலான ஏற்றத் தாழ்வு; ஆங்கில தாய் மொழி பற்றாளர்களிடையே, தம் தாய்மொழி தொடர்பில் எழுச்சியைத் தோற்றுவித்தது. கிட்டத்தட்ட 14 ஆம் நூற்றாண்டளவில் ஆங்கில மொழி அறிவியலாளர்களும், ஆங்கில மொழி பற்றாளர்களாலும் மேற்கொண்ட கடும் முயற்சியின் விளைவால் ஆங்கிலம் மீண்டும் அதிகார மொழியாக மாற்றம் பெறத் தொடங்கியது. இந்த ஆங்கிலத்தையே "மத்திய ஆங்கிலம்" என அழைக்கப்படுகின்றது. ஆனால் நிறைய பிரஞ்சு மொழி சொற்களை ஆங்கிலம் உள்வாங்கிக்கொண்டது.

எடுத்துக்காட்டாக:

calf - veal
cow - beef
wood - forest
sheep - mutton
house - mansion
worthy - honourable
close - shut
pig - pork
reply - answer
chicken - poultry
odour - smell
annual - yearly
demand - ask
chamber - room
desire - wish
power - might
freedom - liberty
bold - courageous
ire wrath - anger
Kingly - royal

மேலே சோடி சோடியாக எழுதப்பட்டிருக்கும் சொற்களின் முதலில் காணப்படுபவை பழைய ஆங்கிலத்தில் இருந்து மருவியச் சொற்களாகும். இரண்டாவதாகக் காணப்படும் சொற்கள் பிரஞ்சு (நோர்மன்) மொழியிலிருந்து மருவியச் சொற்களாகும்.

யேர்மனிய மொழி குடும்பத்தின் பன்மை சொற்கள் (house - housen, shoe - shoen) என்பதுப் போன்று அமைந்திருந்தவை, பிரஞ்சு முறைக்கமைய முடிவில் "s" எழுத்தை சேர்த்துக்கொள்ளும் முறைமை (house - houses, shoe - shoes) மத்திய ஆங்கிலத்தில் தோன்றின. இருப்பினும் சில பன்மை சொற்கள் தற்போதும் யேர்மனிய மொழி வழக்கிற்கு அமைவானவை உள்ளன. எடுத்துக்காட்டாக: men, women, oxen, feet, teeth, children.

கி.பி 1258 இல் புறவிசன் ஒப்ஃ ஒக்ஸ்போர்ட் (Provisions of Oxford) எனும் அரச ஆவணம், ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட முதல் ஆவணம் ஆகும்.

கி.பி 1348 இல் இலத்தீன் மொழி வழி கற்பிக்கப்பட்ட பாடசாலை கல்வி, ஆங்கில வழி கல்வியாக மாற்றப்பட்டது. அதிகமான பாடசாலைகள் ஆங்கில வழிக் கல்வி கற்பிக்கப்படத் தொடங்கின.

கி.பி 1362 வரை பிரஞ்சு மொழியிலேயே இருந்த நீதி, சட்டம் போன்றவை ஆங்கில மொழிக்கு மாற்றப்பட்டது. இவ்வாண்டே முதன் முதலாக ஆங்கிலம் பாராளுமன்றத்தில் அறியனையேறிய ஆண்டாகும். எட்வர்ட்-3 (Edward III) எனும் அரசன் முதன் முதலாக நாடாளுமன்றத்தில் ஆங்கிலத்தில் பேசினான்.

கி.பி. 1387 இல் மகா கவியான கியோபிஃறே சாவுசர் [Geoffrey Chaucer] எனும் எழுத்தாளர்; ஆங்கிலத்தில் “The Canterbury Tales” எனும் கதை தொகுப்பை எழுதினார். அவற்றை இன்றைய ஆங்கிலேயர்களாலும் வாசித்தறிய முடியாத அளவிற்கு கடினமானது என்கின்றனர். இன்றைய ஆங்கில எழுத்து நடைக்கும் அன்றைய ஆங்கில எழுத்து நடைக்கும் அதிக வேறுப்பாடு உள்ளது.

நவீன ஆங்கிலம் Modern English

நவீன ஆங்கிலத்தை; 1500 – 1800 வரை பேசப்பட்டதை "முன்னைய நவீன ஆங்கிலம்" என்றும், 1800 இலிருந்து தற்போது வரைப் பேசப்படுவதை "பின்னைய நவீன ஆங்கிலம்" என்றும் வரையறுத்துள்ளனர்.


முன்னைய நவீன ஆங்கிலம் (Early Modern English [1500-1800])
-------------------------------------------------------------------------------------
மத்திய ஆங்கிலம் பேசப்பட்ட காலத்தின் இறுதியில் ஆங்கில மொழி உச்சரிப்புகளில் திடீர் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. எழுத்திலக்கணத்திலும் ஒலிப்புகளிலும் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டன.

பதினாறாம் நூற்றாண்டுகளில் ஆங்கில மொழியை பலத் துறைகளிலும் பயன்படுத்த வேண்டும் எனும் எண்ணம் ஆங்கில மொழி பற்றாளர்களிடையே தலைத்தூக்கியது. அச்சு இயந்திரத்தின் தோற்றம் இதற்கு பெரும் துணைப் புரிந்தது. மற்றும் மத சீர்த்திருத்தம், புதியப் புதியக் கண்டுப்பிடிப்புகள், பண்டைய இலக்கியங்களில் ஏற்பட்ட மோகம், மறுமலர்ச்சி இயக்கம் போன்றனவும் இதற்கு துணைப் புரிந்தது.

இலத்தீன், பிரஞ்சு போன்ற மொழிகள் அறிவியல் மொழிகள் என்றும், ஆங்கிலம் பண்படாத மொழி என்றும் பலர் கருதினர். ஒரு சில தாய் மொழி ஆங்கிலேயர்களிடமும் கூட அதே கருத்து நிலவியது. ஆனால் ஆங்கில மொழியை சகல வழிகளிலும் முதன்மையான மொழியாக கொண்டு வர வேண்டும் எனும் எண்ணக்கரு ஆங்கில அறிவியலாளர்களிடையே மேலோங்கியது. உலக மற்றும் பொது அறிவை பாமர மக்களும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், ஒரு மொழியின் வளர்ச்சிக்கு அம்மொழியினரின் வாசிப்புத் திறனே முதன்மையானது என்றும் ஆங்கில மொழிப் பற்றாளர்கள் உணர்ந்தனர். எனவே பாமர மக்களும் பயன்பெறும் வகையில் நூல்கள் மலிவு விலையில் வெளியிடப்பட்டன. இலத்தின் மற்றும் பிரஞ்சு மொழிகளில் இருந்த விஞ்ஞான நூல்கள் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்க தொடங்கினர். அதுவரைக் காலமும் இலத்தீன் மொழியில் மட்டுமே இருந்த மருத்துவக் கல்வி நூல்களும் ஆங்கில மொழியில் மொழிப்பெயர்க்கப்பட்டன. ஆங்கில வழி மருத்துவக் கல்வியும் அறிமுகமாக்கப்பட்டது. கத்தோலிக்க விவலிய நூல் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டது.

1564 இல் உலகப் புகழ்ப்பெற்ற ஆங்கில நாடக ஆசிரியரும் கவிஞரும் ஆன வில்லியம் சேக்ஸ்பியர் பிறந்தார். (William Shakespeare [1564 - 1616]) இவரை இங்கிலாந்தின் தேசியக் கவிஞர் என்றும் அழைக்கப்படுகின்றனர். இவர் பல்லாயிரக் கணக்கான புதிய சொற்களை சேக்சுபியர் ஆங்கிலத்தில் அறிமுகம் செய்தார். இவற்றை சேக்ஸ்பியரின் ஆங்கிலம் எனக் கூறுவோரும் உள்ளனர்.

இலக்கண வளமிக்க மொழி எனும் தகுதி ஆங்கில மொழிக்கு ஏற்பட வேண்டுமாயின் ஆங்கில இலக்கண நூல்கள், அகராதிகள் ஆங்கில மொழியில் பெருக வேண்டும் எனப் பலரும் சுட்டினர்.

1604 இல் அகர வரிசையில் அமைந்த உலகில் முதல் ஆங்கில அகரமுதலி பிரசுரமானது.

1702 இல் முதல் ஆங்கில நாளிதழ் "The Daily Courant" இலண்டனில் வெளியானது.

1755 இல் சாமுவேல் யோன்சனின் ஆங்கில அகராதி பிரசுரமானது.

1776 இல் பிரித்தானியாவின் குடியேற்ற நாடாக இருந்த அமெரிக்கா சுதந்திரப் பிரகடனம் செய்தது. அதனைத் தொடர்ந்து அமெரிக்க அரசாட்சியில் ஏற்பட்ட மாற்றங்களைத் தொடர்ந்து, அமெரிக்க ஆங்கிலப் பேச்சு வழக்கிலும் ஒலிப்புகளிலும் மாற்றங்கள் நிகழத்தொடங்கின.

தற்போதைய நவீன ஆங்கிலம் (Late Modern English [1800- Present])
-------------------------------------------------------------------------------------
முன்னைய நவீன ஆங்கிலத்திற்கும் தற்போதைய நவீன ஆங்கிலத்திற்கும் இடையிலான வேறுப்பாடு சொற்களஞ்சியத்தின் எண்ணிக்கையாகும். தற்போதைய நவீன ஆங்கிலத்தில் சொல்வளம் பெருகியுள்ளது. உலகின் பல்வேறு மொழிகளின் சொற்களையும் ஆங்கிலம் உள்வாங்கிக்கொண்டு சொல்வளத்தைப் பெருக்கிக்கொண்டது.

இதன் வளர்ச்சிக்கான பிரதானக் காரணிகளாக இரண்டைக் கூறலாம். முதலாவது தொழில் புரட்சி, இயந்திர சாதனக் கண்டுப்பிடிப்புகள், மருத்துவத் துறை வளர்ச்சி, தொழில் நுட்பம், தொலைத்தொடர்பு, விஞ்ஞான வளர்ச்சி போன்றன பல புதியப் புதிய சொற்களை ஆங்கிலத்திற்கு வழங்கியது.

இரண்டாவது காரணி உலகின் பலப்பாகங்கள் பிரித்தானியரின் ஆளுகைக்குள் உற்பட்டிருந்தமை, பல்தேசங்களுடன் வைத்திருந்த அரசியல் மற்றும் வணிகத் தொடர்பு போன்றவை, எண்ணற்ற பிறமொழி சொற்களை ஆங்கிலம் உள்வாங்கிக்கொள்ளக் கூடியதாக இருந்தன. ஒரு கணக்கெடுக்கின் படி 146 மொழிகளில் இருந்து சொற்களை ஆங்கிலம் கடன் வாங்கியுள்ளது.

ஆங்கிலம் உள்வாங்கிக்கொண்ட தமிழ் சொற்கள்:

எனகொண்டா - Anaconda

காசு - Cash

கட்டுமரம் - Catamaran

கறி - Curry

மாங்காய் - Mango

பறை - Pariah

பப்படம் - Popppadam

அரிசி - Rice

இன்னும் நிறைய சொற்கள் தமிழில் இருந்து ஆங்கிலத்திற்குச் சென்றதாக நம்பப்படுகின்றது. அநேகமான மூலிகைகளின் பெயர்கள் தமிழில் இருந்து கீரேக்கம் லத்தின் மொழிகளுக்கும், அவற்றில் இருந்து ஆங்கிலத்திற்கும் சென்றதாகக் கூறப்படுகின்றது.

இவ்வாறு ஆங்கிலத்தைப் பொறுத்தமட்டில் பிறமொழிச்சொற்களை கடன் வாங்கும் திறந்த மனப்போக்கு, அதன் துரித வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றியுள்ளன என்பதை மறுப்புக்கின்றி ஏற்றுக்கொள்ள கூடியதாக இருக்கின்றது.

மேலும் ஆங்கில தொழில் நுட்பச் சொற்களும் நாளுக்கு நாள் பெருகி வருகின்றது. இதன் உணர்தலால் உலகில் ஆங்கிலம் கற்போர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இன்று ஆங்கிலம் ஒரு சர்வதேச மொழியாக வியாபித்து நிற்கின்றது. அமெரிக்க விஞ்ஞான வளர்ச்சி மற்றும் இணைய தொழில் நுட்பம் போன்றவைகளும் இதன் வளர்ச்சியின் இன்னுமொரு அங்கமாகியுள்ளது. ஒவ்வொரு நாளும் புது புதுச் சொற்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது. எதிர்வரும் ஆண்டு 2009 இல் பத்து இலட்சம் சொற்கள் கொண்ட ஒரு மொழி எனும் தகுதியை ஆங்கிலம் பெற்றுவிடும் என செய்திகள் கூறுகின்றன.

கிட்டத்தட்ட 400 ஆண்டுகளுக்கு முன்பு வில்லியம் சேக்ஸ்பியரின் காலத்தில் 5 முதல் 7 மில்லியன் மக்கள் தொகையினரால் மட்டுமே பேசப்பட்ட ஆங்கில மொழி; இன்று உலகளவில் அறிவியல், அரசியல், வணிகம், தொழில்நுட்பம், திரைப்படம், ஊடகம் என சகல துறைகளிலும் பிரகாசிக்கும் ஒரு மொழியாக வளர்ந்து நிற்கின்றது.

ஆங்கிலம் எனும் மொழி இன்று உலகளவில் செல்வாக்கு செலுத்தும் மொழியாக இருந்தாலும், உண்மையில் ஆங்கிலம் ஒரு தனித்துவமான மொழி அல்ல. அது ஒரு கூட்டு மொழி. ஆங்கிலம் எனும் மொழியின் தோற்றுவாய் தொடக்கம் உலகின் அனைத்து மொழிச் சொற்களையும் கடனாகப் பெற்று உருவான மொழியாகும். பிரித்தானியா ஆக்கிரமிப்பாளர்கள், வந்தேறு குடிகள், வணிகர்கள், வேற்று மொழி கதைகள், சமயம், கலை போன்றவற்றின் ஊடாக பெற்றச் சொற்களை கடனாகக் கொண்டு உருவான மொழியே ஆகும். அது இன்னமும் அதன் சொல்வளத்தை விஞ்ஞானம், திரைப்படத்துறை, வணிகத்தொடர்பு, இணையம் போன்ற துறைகளுடாக பெற்று வளர்த்து வருகின்றது.

இன்னும் எழுதப்போனால் ஐக்கிய இராச்சியத்தின் வரலாற்றையே எழுத வேண்டியதாக இருக்கும். இக்கட்டுரை "ஆங்கில மொழி வரலாறு" தொடர்பில் மட்டுமே எழுதப்பட்டதால் இத்துடன் நிறைவு செய்கின்றேன்.

சான்றுகளும் வெளியிணைப்புகளும்:
-------------------------------------------------------------------------------------
உலகில் அதிகம் பேசப்படும் 100 மொழிகள்

அதிகம் பேசப்படும் மொழிகளில் மூன்றாவது மொழி ஆங்கிலம்

உலகின் அதிக இணையப் பயன்பாட்டு மொழி ஆங்கிலம்

தாய்மொழியாக ஆங்கிலம் பேசுவோரின் எண்ணிக்கை

ஆங்கிலம் பேசப்படும் நாடுகள்

பிரித்தானிய ஆங்கிலத்திற்கும் அமெரிக்க ஆங்கிலத்திற்கும் இடையில் என்ன வேறுப்பாடு என அறிந்துக்கொள்ள விரும்புவோர் "அமெரிக்க ஆங்கில வரலாறு" பாருங்கள்.

நன்றி
அன்புடன் ஆசிரியர் அருண்

Download As PDF