Showing posts with label ஆங்கிலம் பயில்வோம். Show all posts
Showing posts with label ஆங்கிலம் பயில்வோம். Show all posts

ஆங்கிலம் தளத்துக்கு நல்வரவு! (Welcome to Aangilam!)

முழுமையான தமிழ் விளக்கத்துடன் ஆங்கில இலக்கணப் பாடப் பயிற்சிகள்!


நீங்கள் பாடசாலை மாணவரா?

பட்டப் படிப்பிற்காக ஆங்கிலம் கற்பவரா?

தொழில் வாய்ப்புக்காக ஆங்கிலம் கற்க விரும்புகின்றவரா?

ஆங்கில அறிவை மேலும் வளர்த்துக்கொள்ள முயல்பவரா?

பல்லாண்டுகள் பாடசாலையில் ஆங்கிலம் கற்றும், ஆங்கிலக் கல்வியில் எவ்வித முன்னேற்றமும் இல்லையே என்று கவலையடைந்துள்ளவரா?

எதுவானாலும் பராவயில்லை; கவலையை விடுங்கள், இதோ இது உங்களுக்கான வலைத்தளம்.

எவரும் மிக எளிதாக விளங்கிக்கொள்ளக் கூடிய பாடத்திட்டம்.

விரும்புவோர் எந்த வயதினராயிருந்தாலும் இணைந்து கற்கலாம்.

இது பாடசாலை பாடத்திட்டம் போன்றோ, ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி (Spoken English) போன்றோ அல்லாமல், முழுமையான தமிழ் விளக்கத்துடன், அனைத்து "Grammar Patterns" களையும் உள்ளடக்கிய ஆங்கில இலக்கணப் பாடத் திட்டம்.

இப்பாடத்திட்டத்தில், நீங்கள் இலக்கணப் பிழையின்றி ஆங்கிலம் பேசவும், எழுதவும், வாசிக்கவும் கற்றுக்கொள்ளலாம்.

ஆங்கில ஒலிப்புப் பயிற்சிகளுக்கான ஒலிதக் கோப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. அவை பிழையற்ற உச்சரிப்புப் பயிற்சிக்கு உதவியாக இருக்கும்.

THE FASTEST AND EASIEST WAY TO LEARN TO SPEAK, READ AND WRITE IN ENGLISH  — with explanations in Tamil.

உங்கள் பாடப் பயிற்சியை இங்கிருந்து தொடங்குங்கள்: ஆங்கில பாடப் பயிற்சி 1


தமிழ்க் கூறும் நல்லுலகமும் நமது பங்களிப்பும்

தமிழனாய்ப் பிறந்த ஒவ்வொருவருக்கும் தமிழ் கூறும் நல்லுலகம் நலன்பெறும் வகையில் தன்னால் இயன்ற ஏதேனுமொரு பங்களிப்பைச் செய்யவேண்டிய பொறுப்பும் கடமையும் உண்டு. அந்தவகையில் தான் இந்த "ஆங்கிலம்" வலைத்தளம் தோற்றம் பெறுகிறது. இன்றைய தொழில்நுட்ப உலகில் ஆங்கிலம் கற்காமல் எவரும் எந்தவொரு வளர்ச்சிப் படியையும் எளிதாக எட்டிவிட முடியாது. யப்பான், சீனம், பிரஞ்சு போன்ற மொழிகளில் உலகில் உள்ள அனைத்து கற்கை நெறிகளும் கண்டுப்பிடிப்புகளும் உடனுக்குடன் கிடைப்பது போன்று எம்மொழியில் கிடைப்பதில்லை என்பதே உண்மை; அதற்கான அரசியல் பின்புலமும் எமக்கில்லை. தமிழர்களைப் பொறுத்தமட்டில், ஆங்கிலம் ஒரு தொடர்பாடலுக்கான மொழியாக மட்டுமன்றி, உலகின் அனைத்து உயர் கற்கை நெறிகளுக்கும் கல்வித் தகமைகளுக்குமானதோர் திறவுகோள் என்பதை நாம் எவரும் மறந்துவிடக் கூடாது.

உலக மாந்தர்களுடன் ஒப்பிடுகையில் பண்டைய தமிழர் பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கியுள்ளனர் என்பதை எவரும் மறுக்கயியலாது. அதனை முன்நிறுத்தி, பழம்பெருமை பேசுவோராகத் தமிழர் அறிவாளிகள் என்று எம்மை நாமே கூறிக் கொள்வதில் எந்தப் பேராற்றலும் தோன்றிவிடப்போவதில்லை, வளர்ந்து வரும் அறிவியல் உலகில், அமெரிக்கா, ஐரோப்பா, சீனா, யப்பான் போன்ற அறிவியல் முன்னேற்றம் மிகுந்த நாட்டு மாணவர்களுடன் எமது இளையோரும் போட்டியிட்டு வெற்றியீட்ட வேண்டும். உலக அறிவாளிகளிடையே தான் எம்மவர் அறிவாளிகளாகத் திகழவேண்டும். 

"யாதும் ஊரே; யாவரும் கேளீர்!" என புறநானூற்றில் கணியன் பூங்குன்றனார் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூறிய கூற்றுக்கிணங்க, தரணியில் அனைத்து நாடுகளுக்கும் எம்மவர் சென்று, தமிழர் எனும் இனத்தின் தனித்துவத்தைத் தடம் பதிக்க வேண்டும். தமிழர் எனும் இனம் அறிவுக்கு முன்னுரிமை கொடுக்கும் ஓர் அறிவார்ந்த இனமாகக் கட்டியெழுப்பப்பட வேண்டும். அதற்கெல்லாம் அனைத்து நாடுகளுடனான மதிநுட்பத் தொடர்பாடலும் ஆங்கில மொழியாளுமையும் முதன்மையானது என்பதை எம்மவர் அனைவரும் உணர்ந்திட வேண்டும்.

தமிழர் எனும் இனம் உலகில் தொன்மையான ஓர் இனமாகும். நாம் நாடற்ற இனமல்ல; எமது நாட்டை நாமே அந்நியரிடம் பறிகொடுத்த இனம். இலங்கையில் மாவட்டங்களாகவும், பெருநிலப்பரப்பில் மாநிலமாகவும் ஒடுக்கப்பட்டு, இறையாண்மையிழந்த ஓர் அப்பாவி இனம். இந்த ஒடுக்குமுறைகளைத் தகர்த்தெறிந்து, இழந்த தமிழர் இறையாண்மையை மீட்டெடுக்கும் பொறுப்பும் வளர்ந்துவரும் இளையோருக்கே உண்டு. மாறிவரும் உலக அரசியல் ஒழுங்குகளை உற்று நோக்குங்கள். அவற்றுக்கு எப்படி முகம் கொடுப்பது, அரசியல் ஆளுமைமிக்கோராய் எம்மை நாமே எப்படி வளர்த்துக்கொள்ளவது, அறிவார்ந்த சமூகமாக எப்படி நாம் எமது இளஞ்சமுதாயம் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்னும் பொறுப்பு ஒவ்வொரு தமிழனுக்கும் தமிழச்சிக்கும் உண்டு என்பதை மறவாதீர்கள். 

ஐநாவில் தமிழர்க் கொடியை ஏற்றும் பொறுப்பும் வளர்ந்து வரும் தமிழ் இளையோரையே சாரும். அதற்கும் ஆங்கில மொழி ஆளுமை முதன்மையாகிறது.

உலகில் அனைத்து இனத்திற்கும் தம் மொழி மீதும், தம்மொழியினர் மீதும் ஒரு பற்று இருக்கும். அந்தவகையில் "தமிழர் உயர்ந்தால், தமிழ்த் தானாகவே உயரும்! தமிழர் தம் இறையாண்மையை மீட்டால், தமிழ் உலகில் கோலோச்சும்!" என்னும் கொள்கை என்னுடையது. அந்நிய நாடுகளுக்குச் சென்று பார்க்கும் போதுதான் அந்தந்த நாட்டவர் அவரவர் மொழி மீது எந்தளவு பற்று கொண்டுள்ளனர் என்பதைப் புரிந்துக்கொள்ள முடிகிறது. தத்தமது மொழி வளர்ச்சிக்கு எத்தகைய திட்டங்களை முன்னெடுக்கின்றனர் என்பதைப் பார்க்க முடிகிறது. தமிழன் கடல்கடந்து பயணிக்கும் போதுதான் தன்னினத்தின் தனித்துவத்தை உணர்வான். தன் மொழி மீது பற்று கொள்வான். தமிழ் மொழி வளர்ச்சிக்கான திட்டங்களை முன்னெடுப்பான். கிணற்றுத் தவளையாய் உள்ளூருக்குள்ளேயே முடங்கிக் கிடக்காமல் பல நாடுகளுக்கும் பயணித்து பாருங்கள்; அதுவே உங்கள் உலக அறிவின் விரிவாக மாறும். அக்கடல் கடந்த அறிவுத் தேடலுக்கு ஆங்கிலம் உறுதுணையாக இருக்கும்.

எனவே வளரும் எம் இளையோர் அனைவரும் கட்டாயம் ஆங்கிலம் கற்றுயர வேண்டும் என்பதே எனது விருப்பமும் இந்த ஆங்கிலம் வலைத்தள உருவாக்கத்தின் நோக்கமுமாகும்.

உங்களின் பங்களிப்பு:

இவ்வலைத்தளத்திற்கு வருகை தரும் உறவுகளே! உங்களுக்கும் ஒரு பங்களிப்பு உண்டு.

இன்றைய உலகில் ஆங்கிலம் எந்தளவுக்குத் தேவையாகியுள்ளது என்பதை நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கும் நண்பர்களுக்கும் வளரும் தமிழ் இளையோருக்கும் எடுத்துரையுங்கள். அத்துடன் இந்த "ஆங்கிலம்" வலைத்தளத்தில் வழங்கப்படும் பாடப் பயிற்சிகள் பயனுள்ளவை எனக் கருதினால், இத்தளத்தை உங்கள் நண்பர்கள், உறவினர்கள், மாணவர்கள், மற்றும் ஆங்கிலம் கற்க விரும்பும் ஆர்வலர்கள் என அனைவருக்கும் அறிமுகப்படுத்துங்கள். இத்தளத்தில் வழங்கப்படும் பாடங்கள் அனைத்தும் பிடிஎப் கோப்புகளாகப் பதிவிறக்கிப் பயன்படுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. பிடிஎப் கோப்புகளாகப் பதிவிறக்கிக்கொண்டால், இணைய இணைப்பு இல்லாத நேரத்திலும் உங்கள் கணினியூடாகப் பயிற்சிகளைத் தொடர முடியும். கணினி வசதியற்றோர் படியெடுத்துப் பயன்படுத்திக்கொள்ளலாம். வசதியுள்ளோர் வசதியில்லாதோருக்குப் படியெடுத்துக் கொடுத்து உதவிடலாம். அது ஆங்கிலம் கற்க விரும்புவோருக்கு நீங்கள் செய்யும் உதவியாகவும், இத்தளத்திற்குச் செய்யும் பங்களிப்பாகவும் இருக்கும்.
கடைக்கோடித் தமிழனும் கற்க வேண்டும் ஆங்கிலம்!

வேண்டுகோள்:

நீங்கள் ஒரு இணையத்தள உரிமையாளராகவோ வலைப்பதிவராகவோ குழும உறுப்பினராகவோ இருந்தால், இத்தளத்தில் காணப்படும் நிரல் துண்டை வெட்டி உங்கள் தள வார்ப்புருவில் (Template) ஒட்டி (Cut - Paste) இத்தளத்திற்கு இணைப்பு வழங்கலாம். கீழுள்ளவாறு தோற்றமளிக்கும். அது ஆங்கிலம் கற்க விரும்பும் மாணவர்களுக்கும் ஆர்வலர்களுக்கும் நீங்கள் உதவியதாக அமையும்.


இணைப்பு நிரல்களின் வடிவங்களும் அளவுகளும்


நன்றி!

அன்புடன்
ச. தங்கவடிவேல், பிரான்சு

ஆங்கிலம் கற்போம், தேவையெனில் இன்னும் இன்னும் ஆயிரம் மொழிகள் கற்போம், ஆனால் அன்னை தமிழிடமே பற்று வைப்போம். எம்மினமும் எம்மொழியும் மேம்படவே உழைப்போம்.
Download As PDF