ஆங்கிலம் - முதலாம் ஆண்டு நிறைவு

வணக்கம் உலகத் தமிழ் உறவுகளே!

இன்று 2008 கார்த்திகை 29 ம் நாள். இன்றுடன் எமது “ஆங்கிலம்” வலைத்தளம் தனது முதலாம் ஆண்டினை நிறைவு செய்து இரண்டாம் ஆண்டில் காலடி வைக்கின்றது. இவ்வேளையில் இதன் வளர்ச்சிக்கு துணைப் புரிந்த எமது சக வலைப்பதிவர்கள், திரட்டிகள், இணையத்தளங்கள், மன்றங்கள், குழுமங்கள் மற்றும் ஆங்கிலம் கற்கும் ஆர்வலர்கள், மாணவர்கள் அனைவருக்கும் எமது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவிப்பதுடன் எமது “ஆங்கிலம்” வலத்தளம் தொடர்பான குறை நிறைகளையும் உங்கள் அனைவரிடம் இருந்தும் அன்புடன் எதிர்ப்பார்க்கின்றோம்.

மேலும் நாம் கடந்து வந்தப் பாதையை ஒருமுறை மீட்டு, உங்கள் அனைவரிடமும் பகிர்ந்துக்கொள்வதில் மகிழ்வடைகின்றோம்.

வலைத்தளம் அறிமுகப் பதிவு 2007 கார்த்திகை 29 – ம் நாள்.

முதல் ஆங்கில பாடப் பயிற்சி 1 2007 மார்கழி 24 ம் நாள்.

இதுவரை வழங்கப்பட்டப் பாடங்களின் எண்ணிக்கை 19.

ஆங்கிலம் துணுக்குகள் 6.

மற்றும் ஆங்கில மொழித் தொடர்பான ஆக்கங்கள் ஆங்கில மொழி வரலாறு, அமெரிக்க ஆங்கிலம், பழங்கள், மரக்கறிகள், அத்துடன் எமது பாடத் திட்டம் குறித்த ஒரு அறிமுக விளக்கவுரையுடன், இப்பதிவையும் சேர்த்து மொத்தம் 33 பதிவுகள் மட்டுமேயாகும்.

பதிவுகளின் எண்ணிக்கையை சக வலைத்தளங்களுடன் ஒப்பிடுகையில் நாம் மிகவும் குறைவான பதிவுகளையே இட்டுள்ளோம்.

வருகையாளர்களின் எண்ணிக்கை

எமது முதல் ஆங்கிலப் பாடமான ஆங்கில பாடப் பயிற்சி 1 வழங்கப்பட்ட 2007 மார்கழி மாதத்தின் மொத்த வருகைகள் 212 மட்டுமேயாகும். அதன் பின் 2008 ம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து வருகையாளர்களின் எண்ணிக்கை 500, 1000, 10,000, 15,000 என படிப்படியாக அதிகரித்து தற்போது ஒரு இலட்சத்தை கடந்து சென்றுக் கொண்டிருக்கின்றது. ஒரு நாளைக்கு 500 க்கும் அதிகமான வருகைகளாக உயர்ந்துள்ளது. வருகையாளர் கணிப்பான் (Traffic Statistics) ஆறு இலக்கங்களில் தொடர் வளர்முகம் காட்டி வருவது மகிழ்வைத் தருகின்றது.

வழித்தடங்கள்

வருகையாளர்கள் எவ்வழியூடாக வருகின்றனர் என்று பார்ப்போமானால்

திரட்டிகளுடாக 7%.

கூகிள் யாஹூ போன்ற தேடு பொறிகளூடாக 6%.

சக வலைத்தளங்கள், இணையத்தளங்கள், மன்றங்கள் ஊடாக 31%.

நேரடியாக தளத்திற்கு வருவோர் 56%.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள விகிதாசாரம் தற்போதைய கணிப்பின் படி எடுக்கப்பட்டதாகும். ஆனால், கடந்த மாதங்களின் விகிதாசாரம் முற்றிலும் வேறு விதமாக இருந்தது.

பொதுவாக வலைத்தளங்களிற்கான அதிக வருகைகள் திரட்டிகள் ஊடானதாகவே இருக்கும். ஆனால் எமது "ஆங்கிலம்" வலைத்தளத்திற்கு திரட்டிகள் ஊடான வருகைகள் 7% வீதம் மட்டுமே என்பது புள்ளி விபரக் கணிப்பானின் கணிப்பாகும்.

வலையுலக வலைப்பதிவுகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் ஒரு பதிவு ஒரு சில நிமிடங்களே மட்டுமே 'தமிழ்மணம்' திரட்டியில் காணக்கூடியதாக உள்ளது. அதனால் தமிழ்மணம் திரட்டியூடாக எமது ஒவ்வொரு பதிவுக்கும் 20 – 30 வரையிலான வருகைகள் (பதிவிடும் நாட்களில் மட்டும்) கிடைக்கின்றது. நாம் இதுவரை இட்ட மொத்தப்பதிவுகளின் எண்ணிக்கை 32 எனும் கணிப்பின் படி சராசரியாக ஒரு பதிவுக்கு 30 பேர் என்றுப் பார்த்தாலும் 32 x 30 = 960 வருகைகள் கிடைத்துள்ளன. தமிழ்வெளி திரட்டியில் ஒரு பதிவு, சில நாட்கள் தொடர்ந்து காண்பிக்கப்படுவதால் அங்கிருந்தும் அதே அளவிளான வருகைகள் கிடைக்கின்றன. “திரட்டி” திரட்டியூடாகவும் குறிப்பிட்ட அளவிளான வருகைகள் கிடைக்கின்றது.

அதேவேளை அன்மையில் ஆரம்பிக்கப்பட்ட "தமிழிஷ்" தளத்தின் ஊடாக வருவோர் எண்ணிக்கை பிரமிக்க வைத்தது. சென்று பார்த்ததில் தமிழிஷ் தளம் திரட்டிகளைப் போன்று செயல் படாமல், வாசகர்களின் வாக்குகள் ஊடாக, பிரபலமாகும் இடுகைகளை முன்னனி இடுகைகளாக காட்சிப்படுத்தும் முறைமையுடன் செயல்பட்டது. அவ்வாறே யாரோ ஒரு பயனர் எமது தளத்தை தமிழிஷ் தளத்தில் இட்டு, வாசகர்களது வாக்குகளால் பிரபல இடுகையாக காட்சி படுத்தப்பட்டதன் விளைவாகவே அவ்வருகைகள் வந்து குவிந்தன. அதன் பின்னரே தமிழிஷ் தளம் எனக்கு அறிமுகமானது. தற்போது நானும் தமிழிஷ் தளத்தில் ஒரு பயனராக பதிவு செய்துக்கொண்டுள்ளேன். உண்மையில் தமிழிஷ் தளத்தின் செயல்பாடு தமிழ் இணைய உலகில் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கான ஒரு படிமுறை எனலாம்.

அதேபோன்று நாம் இவ்வலைத்தளத்தை ஆரம்பிக்கும் போது திரட்டிகள் குறித்து எதுவும் அறிந்திருக்கவில்லை. இத்தளத்திற்கான வருகைகள் மிகவும் குறைந்த அளவிலேயே இருந்தது. முதன்முதலாக நண்பர் தேன் சிறில் அலெக்ஸ் தனது தளத்தில் ஓர் பதிவிட்டு எமது தளத்தை அறிமுகப் படுத்தியிருந்தார். அதனைத் தொடர்ந்தே வருகையாளர்களின் எண்ணிக்கையில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியது. அதன் பின்னர் ஆழிப் புத்தகச் சாலை உரிமையாளர் செந்தில் நாதன் அவர்கள் எமது பாடத்திட்டத்தை புத்தகமாக வெளியிடுவது பற்றி கேட்டிருந்தார். இதுவும் ஒரு வகையில் மகிழ்ச்சியை தந்தது. அத்துடன் இன்னும் சில நண்பர்களது ஊக்குவிப்பு மின்னஞ்சல்களும் வந்தன. இவைகளே எமது ஆரம்ப உந்து சக்திகளாகின. இவர்கள் அனைவருக்கும் எமது அன்பான நன்றிகள்.

அதன் பின் பல வலைத்தளங்களில் எமது 'ஆங்கிலப் பாடம்' தொடர்பான பதிவுகள் காணப்பட்டன. நண்பர் தமிழ்நெஞ்சம் தனது பதிவொன்றில் கொடுத்திருந்த இணைப்பின் ஊடாகவும் வருகைகளின் எண்ணிக்கை அதிகரித்தது. தற்போது நூற்றுக்கும் அதிகமான சக வலைத்தள பதிவர்கள் எமது நிரல் துண்டை தமது வலைத்தளங்களில் இணைத்து இணைப்பு கொடுத்துள்ளனர். அதில் பலர் “எளிதாக ஆங்கிலம் கற்க, இலகுவாக ஆங்கிலம் பயில” போன்ற வாசகங்களுடன் தொடுப்புக் கொடுத்திருக்கின்றனர். இவைகளே எமது பாடத் திட்டம் எளிமையாக எவரும் கற்கக்கூடியதாக இருக்கின்றது என்பதை எமக்கு உணர்த்தி மன நிறைவைத் தருகின்றது.

2008 யூன் 5 நண்பர் பிகேபி தனது தளத்தில் எமது தளத்தை அறிமுகப்படுத்திய நாளன்றே முதன்முறையாக வருகையாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்தது சென்றது. அது ஆச்சரியமாகவும் இருந்தது. அதன்பின் ஆயிரத்தைக் கடந்த நாட்கள் பல உள்ளன.

அன்மையில் தமிழ் இணைய உலகில் முதன்மை இணையத்தளங்களில் ஒன்றான தமிழ்நேசன் தளத்தினர் எமது தளத்தை அறிமுகப்படுத்திய நாளன்றும் வருகையாளர்களின் எண்ணிக்கை ஆயிரமாக உயர்ந்தது.

தற்போது அதிகமான வருகையாளர்களை ஈர்த்துத் தரும் தளங்கள் என்று பார்த்தால் தமிழ்நேசன், விக்கிப்பீடியா, பிகேபி, ததமிழ்நெட், பிகேபி விக்கி மன்றம், தமிழோவியா, அதிரை எக்ஸ்பிரஸ், முத்தமிழ் மன்றம்,போன்றத் தளங்களை குறிப்பிடலாம். இவற்றைத் தவிர நூற்றுக் கணக்கானோர் தமது தளங்களூடாக தொடுப்பு கொடுத்திருப்பதனால் அவற்றின் ஊடாகவும் வருகையாளர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

ஆரம்பத்தில் "ஆங்கிலம்" என்றோ "ஆங்கில" என்றோ தேடினால் இரண்டாம் மூன்றாம் பக்கங்களில் காண்பித்து வந்த கூகிள், யாஹூ போன்ற தேடு பொறிகள், தற்போது முதல் தெரிவாக எமது தளத்தையே காண்பிக்கின்றது.

கூகிள் ரீடரூடாக எத்தனைப் பேர் எமது பாடப் பயிற்சிகளைப் பெறுகின்றனர் என்பது சரியாகத் தெரியவில்லை. ஆனால் மின்னஞ்சல் ஊடாகப் பாடங்களைப் பெறுவோர் எண்ணிக்கை 1000 யிரத்தை அண்மித்துள்ளது.

மாதம் இரண்டு மூன்று பதிவுகளை மட்டுமே நாம் இட்டு வந்துள்ளப் போதும் இணைய தரப்படுத்தல் புகழ் பெற்ற அலெக்ஸா தொடர்ந்து வளர்முகம் காண்பித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டங்கள்

பின்னூட்டங்கள் என்று பார்த்தால் எமது தளத்திற்கு பின்னூட்டம் வருவது என்னவோ மிகவும் குறைவுதான்.

நாம் ஒரு மாமரத்தின் மாம்பழத்தை வீழ்த்த ஒரு கல்லை எறிக்கின்றோம் என்று வைத்துக்கொள்வோம். எமது குறி தவறாது இலக்கை தாக்கி, பழம் வீழ்த்தப் படுகின்றதென்றால் அல்லது நாம் எறியும் வீச்சுக்கு ஏற்ப கல் தொலைவிற்கு வீசுப் படுகின்றதென்றாலும் கூட ஒருவித நிறைவு எமக்கு ஏற்படும். அதேவேளை நாம் எறியும் அக் கல் நமது வீச்சு வேகத்திற்கு மாறாக வேகம் குன்றினாலோ, இடறி தவறி கீழே வீழ்ந்தாலோ ஏதோ ஒரு வித விருப்புக்கு மாறான உணர்வு ஏற்படுவது இயல்பானது அல்லவா!

அதே போன்றதே ஓர் படைப்பாளியின் படைப்புகள் மக்களை ஈர்ப்பதில் ஏற்படும் மகிழ்ச்சியும், மனச்சோர்வும் ஆகிறது.

அவ்வாறு பின்னூட்டம் வருகின்றதில்லையே என நாம் சோர்ந்துப் போன நிமிடங்கள் உண்டு. எமது பாடத்திட்டம் ஏற்புடையதாய் இல்லையா? அல்லது இவ்வாறான ஓர் இணைய ஆங்கில பாடத் திட்டம் அவசியமற்றதா? சில சாதாரணப் பதிவுகளுக்கே நூற்றுக் கணக்கான பின்னூட்டங்கள் வருகின்றனவே என்றெல்லாம் விழித்தேன். காரணம் தெரியாமல் விழித்தப் போது, ஓர் வலையுலக நண்பரது மின்னஞ்சல் இவ்வாறு விளக்கம் தந்தது. மின்னஞ்சலாளரின் முழுப்பெயரை தவிர்த்து இங்கே பதிவிடுகின்றேன். அனுப்பியவர் குறையாக நினைக்க மாட்டார் என்று நினைக்கின்றேன்.

அன்பின் அருண்..,

வணக்கம்.

தங்களின் வலைப்பதிவு http://aangilam.blogspot.com/ இன்று தான் பார்க்க நேர்ந்தது. உண்மையில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததேன். எனக்கு ஆங்கில அறிவு என்பது குறைவு(இல்லை என்பது தான் உண்மை). தங்களின் இப்பதிவு மூலம் நிச்சயம் என்னால் ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள முடியும் என்று திடமான நம்பிக்கை எழுந்துள்ளது.

எளிமையாகவும், இலகுவாகவும் பாடங்களைச்சொல்லிப் போகும் தங்களின் எழுத்து நடையும் நன்றாக உள்ளது.

இம்முயற்சியை கை விட்டு விட வேண்டாம். பின்னூட்டங்கள் வருகிறதோ இல்லையோ... தொடர்ந்து எழுதுங்கள். காற்றின் பக்கங்களில் அவை அழிந்துவிடாமல் அப்பேடியே காலத்துக்கும் இருக்கும். தாமதமாக வந்து சேர்ந்திருக்கும் என்னைப் போல... இன்னும் பலரும் கூட வந்து படிக்கும் வாய்ப்பு இருப்பதால்... தொடர்ந்து எழுதுங்கள்.

ஒரு மொழியில் போதிய பயிற்சி இல்லை என்பதனை எல்லோரும் வெளிப்படையாக ஒப்புக்கொள்ளுவதில்லை. எனவே பின்னூட்டங்கள் வருவது இருக்காது. ஆனாலும் தொடர்ந்து எழுதுங்கள். தங்களின் இம்முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

ஆங்கிலப்பாடம் நடத்தும் உங்களுக்கு நன்றிகள்.

தோழன் பாலா


பின்னூட்டங்கள் தொடர்பாக இன்னுமொரு நண்பர் அனுப்பியிருந்த மின்னஞ்சல்.

மதிப்பிற்குரிய ஆசிரியர் அருண் அவர்களுக்கு,

தங்களுடைய ஆயிரக்கணக்கான வசகர்களில் நானும் ஒருவன்.
உங்களுடைய எல்லா பாடங்களையும் கவனித்து வருகிறேன். நான் ஆங்கிலம் கற்றவன் தான் ஆயினும், தங்களின் பாடங்களின் துணையால் பல சிறிய குறைகளை சரி செய்து கொள்ள முடிகிறது...

தாங்கள் செய்து வரும் பணி மகத்தானது. பின்னூட்டங்களை வைத்து ஒரு போதும் வாசகர்களை முடிவு செய்யாதீர்கள். தாங்கள் கணித்ததற்கு மாறாக இன்னும் பலர் தங்கள் பாடங்களை பயின்று கொண்டிருக்க கூடும்.

தங்கள் பொன்னான நேரத்தை உபயோகித்து தாங்கள் செய்யும் இந்த கல்விப்பணி மேலும் சிறக்க, வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்.

இ. பி.


அதன் பின்பு பெரிதாக பின்னூட்டங்களை எதிர்ப்பார்ப்பது இல்லை. ஆனாலும் சிலர் திறந்த மனதுடன் பின்னூட்டம் இட்டுச் செல்லும் போது (குறை நிறை எதுவானாலும்) மனதுக்கு ஒரு வித நிறைவு ஏற்படுகின்றது. எம்மை செம்மை படுத்திக் கொள்ளவும் வாய்ப்பாகின்றது.

நண்பர் பிகேபி தனது வலைப்பதிவில் இப்படி எழுதியிருந்தார். “வளர்ச்சியை பின்னூட்டங்கள் கொண்டு அளந்தால் சோர்ந்துதான் போவோம். ஒரு முறை வந்தவர் மீண்டும் நம் பதிவை தேடி வந்தால் அதுதான் உண்மையான வளர்ச்சி என்பேன்.” ஆம்! ஒருமுறை வந்தவர் மீண்டும் நம் பதிவை தேடி வந்தால் அதுவே எமது வளர்ச்சியாகக் கொள்ளலாம். தற்போது நேரடியாக இத் தளத்திற்கு வருவோரின் எண்ணிக்கை இதனை உறுதி செய்கின்றது.

கடந்த ஆண்டில் 33 பதிவுகள் மட்டுமே இட்டுள்ளப் போதும், ஒரு இலட்சத்திற்கும் அதிகமான வருகையாளர்களை இத்தளம் ஈர்த்துள்ளதென்றால்; ஒரு வலைப்பதிவாக நோக்கும் சமயம் இதனை வளர்ச்சியாக கருதலாம். அதேவேளை எமது எதிர்ப்பார்ப்பு ஆங்கிலம் அத்தியாவசியமாகி விட்ட இக்கால சூழமைவில் இதனை கற்க விரும்பும் ஆர்வலர்கள் அனைவருக்கும், குறிப்பாக ஏழை தமிழ் மாணவர்களுக்கு எமது பாடங்கள் சென்றடைய வேண்டும் என்பதேயாகும்.

மேலும் உலகத் தமிழ் உறவுகள் அனைவருக்கும், எமது தளத்தில் நீங்கள் எதிர்ப்பார்க்கும் ஆங்கில பாடப் பயிற்சிகளை முடிந்தவரையில் எளிதாக தர முயற்சிக்கின்றோம். மேலும் ஆங்கிலச் சொற்களஞ்சியங்கள், ஆங்கில மொழி கற்கைகள் தொடர்பான விளக்கங்கள் போன்றவற்றையும் எதிர்வரும் நாட்களில் வழங்குவதாக உள்ளோம். எமது பாடத் திட்டம் தொடர்பான குறை நிறை எதுவானாலும் தயங்காமல் எமக்கு அறியத்தருவீர்கள் என்றும் அன்புடன் எதிர்ப்பார்க்கின்றோம்.

எமது ஆங்கில பாடப் பயிற்சிகளை புத்தகமாகவும் கோப்பாகவும் கேட்டு வரும் அன்பர்களுக்கு; இதுவரை நாம் எமது பாடங்களை புத்தகமாக எழுதவோ, வெளியிடவோ இல்லை. ஆனால் எதிர்வரும் நாட்களில் இது தொடர்பில் முயற்சிகள் எடுப்பதாக உள்ளோம். அவ்வாறு புத்தகமாக வெளியிடுவதாயின் வெறுமனே வர்த்தக நோக்கத்தை மையப்படுத்தியதாக எமது பாடத் திட்டம் அமையாமல், எவரும் எளிதாக கற்கக் கூடிய வகையில் மேலும் சிறப்புடன் வழங்கப்படும். அத்துடன் ஆங்கிலம் - தமிழ் ஒலிப்பதிவு கோப்புகள் அல்லது குருந்தட்டுகள் இணைத்து வழங்குவதாகவும் எண்ணியுள்ளோம். ஆங்கில உச்சரிப்புக்களைப் பொருத்தமட்டில் ஆங்கிலேயரின் உச்சரிப்பே சிறந்தது என நாம் கருதுவதால், பிரித்தானிய ஆங்கில நண்பர்களின் உதவியுடன் அதனை செய்யத் திட்டமிட்டுள்ளோம்.

இம்முயற்சிக்கு உங்கள் அனைவரின் ஆதரவும், காலமும் கைக்கொடுக்கும் என்றே நாம் கருதுகின்றோம்.

முதலாம் ஆண்டை நிறைவுச் செய்யும் இன்னாளில் இத்தளத்தின் வளர்ச்சிக்கு பலவழிகளிலும் பங்களிப்புச் செய்து வரும் சக வலைப்பதிவர்கள், திரட்டிகள், இணையத்தளங்கள், மன்றங்கள், குழுமங்கள் மற்றும் ஆங்கிலம் கற்கும் ஆர்வலர்கள், மாணவர்கள், உலகத் தமிழ் உறவுகள் அனைவருக்கும் எமது அன்பையும் நன்றியையும் மீண்டும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தொடர்ந்து ஆங்கில பாடப் பயிற்சிகளில் சந்திப்போம்.

நன்றி

அன்புடன் ஆசிரியர் அருண்

Download As PDF

30 comments:

புதுகை.அப்துல்லா said...

அன்ணே, நீங்க நம்பினாலும் சரி நம்பாவிட்டாலும் சரி நான் தொடர்ந்து உங்க வலைப்பக்கத்திற்கு வந்து வாசிக்கிறேன். ஆனால் இதுதான் என் முதல் பின்னூட்டம். நேரமின்மையால் பின்னூட்டம் இடுவது இல்லை. என்னைப்போலவேதான் உங்க மாணவர்கள் பலரும் இருப்பார்கள் என்று நினைக்கிறேன். வாழ்த்துகள் அண்ணே

Anonymous said...

/வளர்ச்சியை பின்னூட்டங்கள் கொண்டு அளந்தால் சோர்ந்துதான் போவோம்./ பிகேபி சார் சொல்வது உண்மைத்தான்.
நண்பருக்கு இடையிலான நட்பு, மகிழ்ச்சி ஆரவாரங்களாகவும், கருத்து, எதிர்கருத்து முறன் வாதங்களுமாகவே பின்னூட்டங்கள் நீண்டு செல்கின்றன. மேற்படி பின்னூட்டங்கள் தான் ஒரு பதிவின் தரத்தை, வளர்ச்சியை கணிப்பதாக கொள்வதாகாது. உங்கள் பணியைத் தொடருங்கள். ஒரு வருட வாழ்த்துகள். வாழ்த்துகள்

HK Arun said...

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி

- நன்றி புதுகை.அப்துல்லா

- நன்றி கிருஸ்னமூர்த்தி

Tech Shankar said...

ஆரம்பித்தது முதல் உங்களுக்கு அமர்க்களமான வெற்றிதான். வாழ்த்துக்கள்.

நானும் இதே நாளில் 29-11-2007 அன்றுதான் தமிழ்2000 வலைப்பூவை ஆரம்பித்திருக்கிறேன்.

இருவரும் வேறு திசைகளின் பயணித்திருக்கிறோம். ஆனால் ஒரே நாளில் ஆரம்பித்திருக்கிறோம்.

http://tamizh2000.blogspot.com/2007/11/blog-post.html

என்றும் அன்புடன்

தமிழ்நெஞ்சம்.

உங்கள் ஸ்டேட்டிஸ்டிக்ஸ் புள்ளியியல் விவரங்கள் - எனக்கும் பொருந்தியிருக்கின்றது. தமிழிஷ் வாசகர்கள் என்னை அசரடித்திருக்கிறார்கள்.

உங்கள் வாழ்வு செழிக்க எனது வாழ்த்துக்கள்.

HK Arun said...

//இருவரும் வேறு திசைகளின் பயணித்திருக்கிறோம். ஆனால் ஒரே நாளில் ஆரம்பித்திருக்கிறோம். //

இது இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருக்கிறது.

வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

Anonymous said...

தோழருக்கு நன்றி, நீங்கள் இதுபோல் பல ஆண்டுகளுக்கு பல சேவைகள் செய்யவேண்டும் என்பது எனது ஆவல் மேலும் உங்களுக்கு இறைவன் அனைத்து வழிகளிலும் உதவிபுரிந்து நேர்வழிகாட்ட எனது பிரார்த்தணைகள், அன்புடன் அபூ சமீர்.

HK Arun said...

- அடிக்கடி பின்னூட்டம் இடுபவர் நீங்கள்.

நன்றி அபூ சமீர்.

அன்புடன் அருணா said...

வாழ்த்துக்கள் அருண்...
உருப்படியான பதிவுகளுக்கு பின்னூட்டமே வராதுங்க...இதைப் போய் பெரிசா எடுத்துக்கிட்டு.
உபயோகமான வலைப்பூ ...
அன்புடன் அருணா

HK Arun said...

- Aruna

வாழ்த்துக்களுக்கும் வருகைக்கும் நன்றி அருணா.

Anonymous said...

very very useful to me!

Please don't stop........

M.Rishan Shareef said...

அன்பின் அருண் அவர்களுக்கு,

வெற்றிகரமான முதலாம் ஆண்டு நிறைவுக்கு எனது வாழ்த்துக்கள்.

ஆங்கில மொழி தொடர்பான பிரச்சினைகள் உள்ள எனது நண்பர்கள் அனைவருக்கும் நான் எடுத்துரைத்த வலைத்தளம் உங்களது .அவர்கள் உங்களில் தொடர்ந்தும் பயன்பெற்று வருகிறார்கள்.

மிகப்பயனுள்ள சேவையோடு , மிக நல்ல வலைப்பதிவுகள் உங்களது. தொடருங்கள் நண்பரே !

HK Arun said...

- எம். ரிஷான் ஷெரீப்

மிக்க நன்றி பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் நண்பரே.

நிகழ்காலத்தில்... said...

நண்பரே, பிளாக்குகளின் கட்டுரைகளில் உள்ள பல்வேறுபட்ட கருத்துக்கேற்ப, அதை ஒட்டியோ அல்லது மாற்றுக் கருத்தோ பின்னூட்டமாக வரும. இந்த தளம் வேறு.
நீங்கள் இயங்கும் தளம் மாறுபட்டது.
நான் அனைத்து கட்டுரைகளையும்
ப்ரிண்ட் எடுத்து படித்து பயனடைந்து வருகிறேன். இதை செய்தியாக வைத்து ஒரேஒரு பின்னூட்டம் இடலாம்.ஆகவே பின்னூட்டமிடுவதைவிட உங்கள் உழைப்பை நாங்கள் சரியாக பயன்படுத்திக்கொள்வது மட்டுமே பொருத்தமாக இருக்கும்.
உங்களை தோழனாக உணர்கிறோம்.
ஆசிரியராக அல்ல.

நிகழ்காலத்தில்... said...

நண்பரே, பிளாக்குகளின் கட்டுரைகளில் உள்ள பல்வேறுபட்ட கருத்துக்கேற்ப, அதை ஒட்டியோ அல்லது மாற்றுக் கருத்தோ பின்னூட்டமாக வரும. இந்த தளம் வேறு.
நீங்கள் இயங்கும் தளம் மாறுபட்டது.
நான் அனைத்து கட்டுரைகளையும்
ப்ரிண்ட் எடுத்து படித்து பயனடைந்து வருகிறேன். இதை செய்தியாக வைத்து ஒரேஒரு பின்னூட்டம் இடலாம்.ஆகவே பின்னூட்டமிடுவதைவிட உங்கள் உழைப்பை நாங்கள் சரியாக பயன்படுத்திக்கொள்வது மட்டுமே பொருத்தமாக இருக்கும்.
உங்களை தோழனாக உணர்கிறோம்.
ஆசிரியராக அல்ல.

Anonymous said...

முதலாம் ஆண்டு வாழ்த்துக்கள்.
தெரியாதவர்களுக்கு நாலு வார்த்தை சொல்லிகொடுக்கின்றீர்கள். தொடரட்டும் உங்கள் பணி.எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆவான்.

God bless you.

HK Arun said...

- ramanian

//பின்னூட்டமிடுவதைவிட உங்கள் உழைப்பை நாங்கள் சரியாக பயன்படுத்திக்கொள்வது மட்டுமே பொருத்தமாக இருக்கும்.//

உங்கள் கருத்து ஏற்புடையது.

நன்றி நண்பரே

-------------

அனானியின் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

4Tamilmedia said...

வணக்கம் அருண்!
வலைப்பதிவு என்பதை உங்களுக்கும், பிறர்க்கும் பயனுள்ளதாக எவ்விதம் அமைத்துக் கொள்ளலாம் என்பதற்குச் சிறப்பான முன்னுதாரணமாக உங்கள் முயற்சி அமைகிறது. பாராட்டுக்கள். பணி தொடர வாழ்த்துக்கள்.
உங்களுடைய இந்த முயற்சி எங்களது www.4tamilmedia.com இனையத்தளத்தில் வாரந்தோறும் அறிமுகம் செய்யும் வாரமொரு வலைப்பூ பகுதியில், இவ் வார வலைப்பதிவாக இடம்பெற்றுள்ளமையை மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றோம்.

HK Arun said...

வணக்கம்

இவ்வார வலைப்பதிவாக எமது தளம் இடம்பெற்றுள்ளமையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கின்றோம்.

நன்றிகள் www.4tamilmedia.com இனையத்தளத்தினருக்கு.

ஆதிநாராயணன் said...

Hi SIR,
Sir my hardy congrats to you. I am very interested in learning of English. But i don't know how i should make it as your site in useful way. Please guide us. How i improve my English knowledge through this site. I forgot where i can use the tense formation for the written and for speech. Please help me sir...

Thanks,
Aathinarayanan.C

links said...

Best wises Dear Arun

well done many things your kind service keep it up

yours

Puduvai siva.

Anonymous said...

வாழ்த்துகள் அருண்...

Anonymous said...

பின்னூட்டம் வருவது மிகக் குறைவு என்று எழுதியுள்ளீர்கள். உண்மையில் பின்னூட்டம் ஏன் எதனால் இடப்படுகின்றது என்று பாருங்கள்.

சிறந்த ஒரு ஆக்கத்திற்கு “நன்று” எனும் ஒரு பாராட்டே போதுமானது.
ஒரு கருத்து அதற்கு எதிர்கருத்து என தமிழன் இடையே தொடரும் வாக்குவாதங்களாகவே பின்னூட்டங்களாக குவிகின்றன. இன்னும் சில அர்த்தமே அற்ற கும்மாலங்கள்.

தமிழ் விக்கிப்பீடியாவை பார்த்தால் புரியும். நாளு வரி கட்டுரைக்கு நாப்பது வரி வாக்குவாதங்களாக இருக்கும். முழுமையான கட்டுரைகளை விரல் விட்டு என்னிவிடலாம். இது போன்ற வாக்குவாதங்களே பல வலைப்பூக்களிலும் குவிந்துக் கிடக்கின்றன. தமிழனிடம் இருக்கும் இந்த ஈகோ என்றுமே குறைவதில்லை.

தன்னால் இயன்றதை ஒவ்வொரு தமிழனும் தன் சமுதாய நலனுடன் செய்யவிளைவான் என்றால் அதுவே போதுமானது.
கம்பளைதாசன்
Gampolathasan_64 at yahoo dot com

Abirami said...

I came to know about this site recently. Such a nice service you are doing. Well done and keep it up.
Your service is very much useful to the whole tamizhans all over the world. May God Bless you.

Anonymous said...

அருமை. மிகவும் அருமை. தொடருட்டும் உங்கள் சேவை பல்லாண்டுகளுக்கு.

mathu said...

hi its very useful .

mathu said...

hi arun

its very useful to learn in english

sangar said...

அன்பு அருண்..,

வணக்கம்.

தங்களின் வலைப்பதிவு http://aangilam.blogspot.com/ இன்று தான் பார்க்க நேர்ந்தது. உண்மையில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததேன். எனக்கு ஆங்கில அறிவு என்பது குறைவு - இல்லை என்பது தான் உண்மை. தங்களின் இப்பதிவு மூலம் நிச்சயம் என்னால் ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள முடியும் என்று திடமான நம்பிக்கை எழுந்துள்ளது.

எளிமையாகவும், இலகுவாகவும் பாடங்களைச்சொல்லிப் போகும் தங்களின் எழுத்து நடையும் நன்றாக உள்ளது.

தங்களின் இம்முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

ஆங்கிலப்பாடம் நடத்தும் உங்களுக்கு நன்றிகள்.

மேலும் நான் அச்சுக் கலை வல்லுனர்.
உங்களுக்கு என்னால் ஏதேனும் உதவ முடிந்தால் நிச்சயம் மகிழ்ச்சியடைவேன்.
தோழன் சங்கர்.
cbesangar@gmail.com
coimbatore

vimala said...

ITS VERY USEFUL THANKS SIR

Unknown said...

நன்றிகள் பல ஐஆ

BND said...

Please continue your service.Thank for your help Arun

Post a Comment