
இன்று கார்த்திகை 29 ஆம் நாள். இன்றுடன் எமது வலைத்தளம் இரண்டாம் ஆண்டை நிறைவுசெய்து தனது மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது. இந்நாளில் எமது இத்தளத்தின் வளர்ச்சிக்கு தொடர்ந்து பங்காற்றி வரும் உறவுகள், வருகையாளர்கள், ஆங்கிலம் கற்கும் ஆர்வலர்கள் அனைவருக்கும் நாம் எமது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றோம். எமது தளத்திற்கு இணைப்பு வழங்கி எம் தளத்தை மெம்மேலும் பலரது பார்வைக்கு கொண்டு செல்ல உதவிய திரட்டிகள், சக வலைத்தளப்பதிவர்கள், இணையத்தளங்கள், மன்றங்கள், குழுமங்கள், கருத்துக்களங்கள் போன்றவற்றிற்கு எமது சிறப்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
நிறைவுற்ற இவ்வாண்டில் எம்மால் அதிகமானப் பாடங்களை வழங்கமுடியாமல் போயிற்று அதற்காக வருந்துக்கின்றோம். ஒன்று, இரண்டு பதிவுகளாகவே ஆண்டு நிறைவுற்றும் போயிற்று. ஆகஸ்ட் மாதம் மட்டுமே ஆகக்கூடியப் பதிவுகளாக 4 பதிவுகள் இடப்பட்டுள்ளன. இவ்வாறு இத்தளத்தின் மெதுவோட்டம் இன்றுடன் இரண்டாம் ஆண்டை நிறைவுசெய்கின்றது. இருப்பினும் இத்தளம் பலரையும் ஈர்த்து பார்வையாளர்களின் எண்ணிக்கையைக் கூட்டி வருகின்றமை மகிழ்வைத் தருகின்றது. கடந்த ஆண்டு நிறைவுறும் பொழுது ஒரு நாளுக்கு சராசரியாக 500 பக்கப்பார்வைகள் மட்டுமே எமது தளத்திற்கு கிடைத்தன. ஒரு சில நாட்களில் மட்டும் எண்ணிக்கை ஆயிரமாக உயர்ந்தது. அது ஆச்சரியத்தை தந்தது. ஆனால் தற்போது ஆயிரத்தை அன்மிக்காத நாட்களே இல்லை என்றாகிவிட்டது. மாத எண்ணிக்கையாக கடந்த ஆண்டு ஆக கூடுதலாக 20,780 வருகைகள் என வருகைக்கணிப்பான் காண்பித்தான். இவ்வெண்ணிக்கை படிப்படியாக வளர்முகம் காட்டி இம்மாதப் பக்கப்பார்வைகளின் எண்ணிக்கை 50,000 ஆயிரத்திற்கும் மேலாக உயர்ந்துச்செல்கின்றது. மொத்தப் பக்கப்பார்வைகள் அரை மில்லியனை கடந்துச்செல்கின்றது. இவைகளே எம் தளத்திற்கு கிடைக்கும் சான்றாக நாம் கொள்கின்றோம். இது இன்றைய உலகின் முன்னோக்குகளுக்கு ஆங்கில மொழியின் அத்தியாவசியத்தையும், அதனை கற்க முனைவோரின் முனைப்பையும் காட்டுகின்றது.
வருகைத்தருவோர் அதிகமானோர் தமிழகத்தில் இருந்தே வருகின்றனர். கடந்த ஆண்டில் 85% வீதமானோர் தமிழகத்தில் இருந்து வருகைத்தந்திருந்தனர். இலங்கையில் இருந்து வருகைத்தந்திருந்தவர்கள் சராசரியாக 7% வீதமாக மட்டுமே இருந்தது. இவ்வாண்டு அது 30% வீதமாக உயர்ந்துள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் வருகைத்தரும் தமிழ் உறவுகளுக்கு; இத்தளத்தின் ஊடாக ஆங்கிலம் கற்பிக்கும் பணியை செய்ய, பேருதவியாய் அமைந்த கூகிள் நிறுவனத்தின் “ப்ளொக்” சேவைக்கு நன்றியும் கடமையும் உள்ளவனாகின்றேன்.
அதேவேளை எமது தளத்தின் பெயரான aangilam.blogspot.com என்பதைத் தவிர;
ஆங்கில
ஆங்கிலம்
ஆங்கிலம் கற்க
aangilam
aangilam.blog
Learn English grammar through Tamil
போன்ற சொற்களில் தேடினால்; கூகிள், யாஹூ, எம்எஸ்என் போன்ற முன்னனி தேடுப்பொறிகள் எமது தளத்தினையே முதல் தெரிவாகக் காட்டி வருகின்றன. அவற்றிற்கும் எமது நன்றிகள் உரித்தாகுக. (நேரடியாக தளத்திற்கு வரிகைத்தருவோரே அதிகமானோர். கணிசமானோர் தேடுப்பொறியூடாகவும் வந்தடைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.)
வேண்டுகோள்களும் பரிந்துரைகளும்
நூல் வடிவில் ஆங்கிலப் பாடங்களை பலர் கேட்டுவருகின்றனர். அதற்கான முயற்சியில் கடந்த ஆண்டு ஈடுப்பட்டிருந்தாலும், அதனை நிறைவு செய்ய முடியாத மனநிலைக்குள்ளும் வெறுமைக்குள்ளும் தள்ளப்பட்டிருந்தமையினால் அப்படியே கிடப்பில் போடக் காரணமாகியது. இருப்பினும் எதிர்வரும் ஆண்டில் அதற்கான முயற்சிகளில் இறங்கலாம் எனும் எண்ணம் உள்ளது. அதேவேளை எமது மொழிப்பெயர்ப்பு தொடர்பில் சில வேண்டுகோள்களும் பரிந்துரைகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. அவைத்தொடர்பில் கவனம் எடுக்கப்படும். இருப்பினும் சில விளக்கங்கள் இங்கே...
எந்தமிழ் சிறப்பும் எம்மொழிப் பெயர்ப்பும்
உலகின் ஒவ்வொரு மொழிகளுக்கும் ஒவ்வொரு சிறப்பு உள்ளது. எம்தமிழ் மொழிக்கென தனிச்சிறப்புகள் பல உள்ளன.
அவற்றில் சில:
I love you mother
நான் உன்னில் அன்பாக இருக்கிறேன் அம்மா
(இவ்வாறு தமிழர்கள் கூறும் வழக்கம் இல்லை. இதனை எமது தமிழ் வழக்கிற்கு ஏற்ப “எனது அன்பு அம்மா” என்று நாம் கூறுவதற்கு இணையான சொல்லாடலாகக் கொள்ளலாம்.)
I love you my son
நான் உன்னில் பாசமாக இருக்கிறேன் எனது மகனே.
(இவ்வாறும் நாம் கூறும் வழக்கம் இல்லை. இதனை “எனது செல்ல மகனே” என்பதாகக் கொள்ளலாம்.)
I love my motherland
நான் எனது தாயகத்தை நேசிக்கிறேன்.
("நான் எனது தாய் நிலத்தின் மீது பற்று வைத்துள்ளேன்" என்பதற்கு இணையான சொல்லாடல்)
I love you
நான் உன்னை காதலிக்கிறேன்.
(இது எல்லோருக்கும் தெரிந்திருக்கும்)
I love Indian foods.
நான் விரும்புகிறேன் இந்திய உணவுகளை.
(இங்கே விருப்பத்தை தெரிவிக்கவும் "Love" பயன்படுகின்றது.)
இவ்வாறு அன்பு, பாசம், காதல், நேசம் (பற்று), விருப்பு போன்று ஒவ்வொரு தமிழ் சொற்களும் அதனதன் பொருளை அழகாக வெளிப்படுத்துக்கின்றன. இதுவே எந்தமிழின் சிறப்பாகும். ஆனால், ஆங்கிலத்திலோ LOVE எனும் ஒற்றைச் சொல்லே எல்லாவிடங்களிலும் பயன்படுகின்றது. இவ்வாறான தனிச்சிறப்புக்கள் ஒவ்வொரு மொழியிலும் இருக்கின்றன.
இவற்றை ஏன் இங்கு குறிப்பிடுகிறேன் என்றால்; ஒரு ஆங்கில ஆக்கத்தை மொழியாக்கம் செய்வதானால்; ஒவ்வொரு மொழியும் தனக்கே உரிய தனித்துவங்களோடு மொழியாக்கம் செய்தலே சிறப்பானது. ஒரு ஆங்கிலக் கட்டுரையை தமிழாக்க முனைவதானால்; முதலில் அக்கட்டுரையை வாசித்து, அதனை அப்படியே உள்வாங்கிகொண்டு, பின் தமிழுக்கு ஏற்ற நடையில், தமிழர் எளிதில் விளங்கிக்கொள்ளும் வகையிலேயே எழுதவேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் என்னிடமில்லை. எடுத்துக்காட்டாக: “I love you my son” என்பதற்கு “எனது செல்ல மகனே” என்பதுப்போன்று தமிழாக்கமும் செய்யலாம். ஆனால் ஆங்கிலம் கற்பிக்கும் பொழுது அவ்வாறு கற்பித்தல் முறையற்றது.
I love you my son
“நான் உன்னில் அன்பாக இருக்கிறேன் எனது மகனே” எனும் வாக்கியத்தில் ஒவ்வொரு ஆங்கில சொல்லும் எவ்வாறு தமிழில் பொருள் தருகின்றது என்பதை முதலில் கற்றுத்தெளிந்தால், அதன்பின் தமிழ்நடைக்கு ஏற்ப எம்மால் எளிதாக விளங்கிக்கொள்ளலாம். இதனை தான் நாம் பொருளுணர்ந்து கற்றலே முதலில் அவசியம் என்கின்றோம்.
பொருளுணர்ந்து கற்றலின் அவசியம்
பொருளுணர்த்தி கற்கப்படாவிடின் அது என்ன விளைவுகளை தோற்றுவிக்கும் என்பதை விளக்கும் வகையில் அன்மையில் ஒரு நூலில் பார்த்த ஒரு சொல்லை மட்டும் எடுத்துக்காட்டாக முன்வைக்கின்றேன்.
"Can I help you?" என்பதற்கு
"உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமா?" என்று தமிழாக்கம் செய்யப்பட்டிருந்தது. இதை நான் பிழையென்று கூறவில்லை. எனிலும், சரியான பொருளுணர்ந்து கற்பதற்கு இவ்வாறான தமிழாக்கம் தடையாகின்றது.
Can I help you?
"என்னால் உனக்கு உதவ முடியுமா? என உதவிச்செய்வதற்கும் அனுமதி கோரும் வகையில் இக்கேள்வி தொடுக்கப்படுகின்றது." என்பதை முறையாகக் கற்பிக்கலாமே. இதனை Polite and More Polite பாடத்தில் பார்க்கலாம். ("உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமா?" எனும் தமிழ் வாக்கியத்திற்கு இணையாக "Do you want any help?" எனும் ஆங்கில வாக்கியமே சரியானது.)
இதனால் தான் நாம் ஆங்கில வழிக்கு ஏற்ப தமிழாக்கம் செய்து கற்பிக்கின்றோம்.
தமிழ் - தமிழர் - ஒரு சம்பவம்
அன்மையில் ஹொங்கொங்கில் ஒரு கிருஸ்தவ தமிழ் பாதிரியாரைச் சந்திக்கக் கிடைத்தது. தமிழகத்தில் இருந்து வந்திருந்தார். அவருடன் பேசும் பொழுது நான் தமிழிலேயே பேசினேன். அவர் தொடர்ந்து ஆங்கிலத்திலேயே உரையாடினார். நான் ஒரு கட்டத்தில் "உங்களுக்கு தமிழ் தெரியாதா?" என்றேன், அவர் அதற்கு "தெரியும் (But) பட்டு..." என்று இழுத்த இழுவையில் மீண்டும் அவர் நாவிலிருந்து தமிழ் வரவில்லை.
இவ்வாறான பலரை சந்தித்துள்ளேன். இவர்கள் தமிழில் பேசுவதையே தாழ்வாக உணர்கின்றனரோ எனத் தோன்றுகின்றது! தமிழின் சிறப்பறிந்த இத்தாலியப் பாதிரியார் (Costanzo Giuseppe Beschi) தமிழுக்கு செய்த அரும்பணிகளையும் நினைத்துப்பார்க்கிறேன். அந்நிய மொழியினருக்கு தெரிந்த எந்தமிழின் சிறப்பு, ஏனோ எம்மவர்களுக்கு தெரிவதில்லை!
தமிழுக்கு இந்த நிலை என்றால், தமிழரின் நிலை?
அமெரிக்கக் குடியும் தமிழ் குடியும் (திரைப்படம்) 2003 ஆம் ஆண்டு திரையிடப்பட்ட Bruce Wills நடித்த ஒரு திரைப்படத்தை அன்மையில் பார்த்தேன். அத்திரைப்படத்தின் கதை அமெரிக்கப் பெண் ஒருத்தி மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியா சென்று போர் பகுதிக்குள் சிக்கிக்கொள்கின்றார். அங்கே ஓர் இனவழிப்பு போர் நடந்தவண்ணம் உள்ளது. அதற்குள் சிக்குண்டு இருக்கும் அமெரிக்கப் பெண்ணை மீற்பதுதான் கதை. அமெரிக்கா அதற்காக ஒரு படையணியையே களமிறக்கி மீற்பு நடவடிக்கையை மேற்கொள்கின்றது. இவ்வாறு அத்திரைப்படத்தின் கதை நகர்கின்றது… படத்தின் பெயர் (Tears of the Sun) அதன் தமிழ் பொருள் "சூரியனின் கண்ணீர்துளிகள்". அதாவது அங்கு நடக்கும் கொடுமைகள் சூரியனின் கண்களில் இருந்தே கண்ணீர் துளிகளை சிந்தவைக்கிறது என்பது போல் பெயரிடப்பட்டுள்ளது. (தமிழர் கொடுமைப்பட்டால் எந்தச் சூரியனில் இருந்தும் கண்ணீர் வராது போலும்!) இதில் சிந்தனைக்குரியது என்னவென்றால்; அமெரிக்க நாட்டின் ஒரு குடியினை மீற்க ஒரு படையணியையே களமிறக்குவது போன்ற அத்திரைப்படத்தின் மூலக்கதை, அந்நாட்டின் ஒவ்வொரு குடிமகனதும் உயிர் எந்தளவு மதிக்கப்படுகின்றது என்பதை வெளிப்படுத்துகிறது.
அதேவேளை இலங்கை குடியுரிமை பெற்று வாழும் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் கொன்றுக்குவிக்கப்பட்டும் கேட்பதற்கு ஒருவரும் இல்லையென்றாகின்றது. அட! இலங்கையில் தான் இந்த பேரவலம் என்றால், இந்தியாவின் தென்முனையில் தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டாலும் அதே நிலைமைத்தான்.
"செம்மொழியான தமிழை, இந்திய அரசே உடனே அங்கீகாரம் கொடு" என தமிழ் செம்மொழி போராட்டக் குழு போராட வேண்டியிருந்தது.
"முற்கம்பி வேலிக்குள் முடக்கப்பட்டிருக்கும் தமிழரை விடுவி" என உலகத்தமிழினமும் பன்னாட்டு அரசுகளும் அழுத்தம் கொடுக்க வேண்டியுள்ளது.
உண்மையில் தமிழரான நாம் எந்த நாட்டு குடிகள் என்பதை, சற்று சிந்திக்கத்தோன்றுகிறது!? நினைத்தால் மனம் கனக்கின்றது.
சரி! இரண்டாம் ஆண்டு நிறைவு பதிவு என்று என்னென்னவோ பேசியுள்ளேன். தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டுங்கள். இது இரண்டாம் ஆண்டு நிறைவு நாள் பதிவு என்றல்லாமல், ஒரு துணுக்குப் பாடத்தையும் இத்துடன் வழங்குகின்றோம்.
ஒலிப்பொழுக்கம்
தமிழ் ஒரு ஒலிப்பொழுக்கம் (Phonetic Language) மிக்க மொழி. ஆங்கிலம் ஒரு ஒலிப்பொழுக்கமற்ற மொழி என்பதை ஆங்கிலம் முறையாகக் கற்றோர் அறிவர். ஆங்கிலத்தில் "OUGH" எனும் எழுத்துக்களை எடுத்துக்கொண்டால்; இவ்வெழுத்துக்கள் எப்பொழுதும் ஒரே மாதிரியாக ஒலிப்பதில்லை. ஏழு வெவ்வேறு ஒலிப்புக்களை தருகின்றன. இவற்றை சரியாக விளங்கிக் கற்க வேண்டுமானால் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
எடுத்துக்காட்டுகள்:
1. though - தோ
தமிழில் “அதோ, இதோ” என்பதில் ஒலிக்கும் “தோ” போன்று ஒலிக்க வேண்டும்.
2. through – த்ரூ
“ரூபா” என்பதில் வரும் “ரூ” போன்று ஒலிக்க வேண்டும்.
3. cough – கfப்
இதில் “fப்” என்ற மென்மையான ஒலிப்பைத் தரும். (ஆங்கிலச்சொல்லான “of, offer” என்பதற்கு இணையான ஒலிப்பு)
4. rough - றffப்
இதில் வரும் “ufப்” எனும் சத்தம் சற்று அழுத்தமாக வரும். (“Suffer” என்பதில் வரும் “uff” என்பதுப்போன்று ஒலிக்கும்)
5. plough – ப்லfவ்
(“flower” என்பதில் ஒலிக்கும் “ow” என்பதுப்போன்ற ஒலிப்பு)
6. ought - ஓட்
(இதனை “ஓ” என ஒலிக்க வேண்டும்.)
7. borough - Bபொறோ
இச்சொல் “above” என்பதில் வரும் "Bபோ(வ்)" என்பதுப் போன்று ஒலிக்க வேண்டும்.
இங்கே நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால்; ஆங்கில எழுத்துக்களை வைத்து அதன் ஒலிப்புகள் இப்படித்தான் இருக்கும் என திட்டவட்டமாக வரையரை செய்துவிடமுடியாத சொற்களும் உள்ளன என்பதாகும். இவ்வாறான சொற்களை பயிற்சி செய்து பெற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.
ஆங்கிலம் இன்றைய உலகில் தவிர்க்க முடியாத மொழியாகியுள்ளது. அதனை முறையாக கற்பதால் நாமும் பல வளர்ச்சிப்படிகளை எட்டலாம். எனவே அவற்றை முறையாகக் கற்க வேண்டிய கட்டாயத் தேவை எல்லோருக்கும் உண்டு. இருப்பினும் நாம் எம் தமிழுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றும், நாம் கற்கும் ஆங்கில அறிவின் பயனும் ஏதாவது ஒரு வகையில் எம் தமிழுக்கு கிட்ட, நாம் முயற்சிகள் எடுக்க வேண்டும் என்றும் எமது தளத்தில் ஆங்கிலம் கற்கும் ஒவ்வொருவரிடமும் கேட்டுக்கொள்கின்றேன்.
மீண்டும் எமது அடுத்தப்பாடத்தில் (மூன்றாம் ஆண்டில்) சந்திப்போம்.
மீண்டும் அனைவருக்கும் எமது மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக்கொண்டு விடைப்பெறுகின்றோம். இந்த இரண்டாம் ஆண்டு நிறைவு நாளின் இத்தளத்தின் குறைகளையும் நிறைகளையும் பகிர்ந்துக்கொள்ளும் படி கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி
அன்புடன் அருண் HK Arun